Thursday 23 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சினிமாவின் கழுத்தை நெறிக்கும் ‘கந்துவட்டி’ புற்றுநோய்!
‘கம்பெனி புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் மேனேஜரும், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சசிகுமாரின் உறவினருமான அசோக் குமார் அவர்களின் தற்கொலை (கொலை) செய்தியை அவ்வளவு எளிதாக கடந்து சென்றுவிட முடியவில்லை. தற்கொலைக்கு முன் அவர் எழுதியிருந்த கேள்விகளுக்கு என்றுமே பதில் கிடைக்கப்போவதில்லை என்பது தான் உண்மை. சினிமாத்துறை எவ்வளவு அசிங்கங்களும், மிருகத்தனமான அராஜகங்களும் நிறைந்தது என்பதை அடிக்கடி நினைவுபடுத்தும் சம்பவங்களில் ஒன்று இது!
2003ஆம் ஆண்டில் இயக்குனர் மணிரத்னம் அவர்களின் அண்ணன் மற்றும் பிரபல தயாரிப்பாளர் ஆன திரு.ஜி.வெங்கடேஷ்வரன் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார். படம் தயாரிக்க தான் வாங்கிய கடனை விட பல மடங்கு அதிகமாக வட்டி கட்டியும் கூட, தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வந்ததாலும், தனது சொத்துக்களை எழுதித் தர சொன்னதாலும், தனது மனைவியை கடத்தி வைத்து மிரட்டியதாலுமே தயாரிப்பாளர் ஜி.வி அவர்கள் தற்கொலை செய்து கொண்டார் என்பது அப்போதைய செய்தி. அவ்வளவு பெரிய தயாரிப்பாளர், தான் சாகும்பொழுது கூட ஒரு சின்ன கடிதமோ அல்லது தன் மரணத்திற்கு யார் காரணம் என்றோ கூட எழுதி வைக்காமல் தற்கொலை செய்து கொண்டதன் காரணம் – பயம். அவர்களால் தன் குடும்பத்தினருக்கு எந்த வித தொல்லையும் வந்துவிடக்கூடாது என்கிற பயம், மரணத்தைத் தாண்டிய பயம்.
1 கோடி வாங்கிய ஒருவர் 2 கோடிக்கு வட்டி மட்டுமே கட்டிய பின்னும் கூட, விடாமல் டார்ச்சர் செய்வதும்.. அவர்களது சொத்துக்களை எழுதித்தர சொல்வதும்... கடன் வாங்கியவரை கடத்தி அம்மணமாக உட்கார வைத்து அசிங்கப்படுத்துவதும்... கடன் வாங்கியவரது வீட்டைச் சேர்ந்த பெண்களை கடத்துவதும்... இந்த ‘கந்துவட்டி’ ஃபைனான்சியர், வட்டியை வசூலிக்கும் பாணி!
‘திருமணத்திற்கு பின் நடிக்கமாட்டேன்’ என சொன்ன நடிகை தேவயானி, ‘கோலங்கள்’ தொடரில் நடிக்க வந்ததற்கும்... தான் நடித்து தயாரித்த திரைப்படம் தோல்வி அடைந்ததால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் சினிமாவில் தனது கடைசி காலத்தில் நடிகை ரம்பா எக்கச்சக்க கஷ்டங்களை அனுபவித்ததற்கும் காரணம் – அந்த குறிப்பிட்ட ‘கந்துவட்டி’ ஃபைனான்சியர் கொடுத்த செக்ஸ் டார்ச்சர் தான் என்றே சொல்லப்பட்டது.
2004ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து, உடல் எடையை குறைக்க ஆரம்பித்து நீளமாக முடி வளர்த்து 2006ஆம் ஆண்டு மே மாதம் வரை ‘நான் கடவுள்’ படத்தில் நடிப்பதற்காக தயாராகி காத்திருந்தார் ‘தல’ அஜீத். இயக்குனர் பாலா ‘ஃபர்ஸ்ட் காப்பி’ அடிப்படையில் இந்த படத்தை எடுப்பதற்காக தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பனிடம் வாங்கியிருந்த பணத்தில் கால்வாசிக்கும் மேல் ஏற்கனவே செலவாகிவிட்டதால், பெரிய ஸ்டாரை வைத்து படத்தை எடுக்க முடியாத நிலை. அஜீத் அப்படத்திலிருந்து விலகினால், 6 கோடிக்கும் மேல் மிச்சமாகும் என அவரை சென்னை ‘லீ மெரிடியன்’ ஹோட்டலில் பஞ்சாயத்து பேச அழைத்த பொழுது உடனிருந்ததும் இதே ‘கந்துவட்டி’ ஃபைனான்சியர் தான். அஜீத்திடம் கொடுத்த அட்வான்ஸை வாங்கும் பேச்சுவார்த்தை, சண்டையாக மாறியது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் தன்னை காக்க வைத்தது மட்டுமல்லாமல், தன் கால்ஷீட்டையும் பாலா வீணடித்துவிட்டதாக அஜீத் புகார் கூறினார். அந்த சந்திப்பில் அஜீத் தாக்கப்பட்டார் மற்றும் 'நான் கடவுள்' படத்திலிருந்து தானே விலகுவதாக அவரிடம் மிரட்டி கையெழுத்து வாங்கப்பட்டது என்பதும் தான் அப்போதைய ‘தலைப்பு செய்தி’யே! ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் என எல்லா பத்திரிக்கைகளிலும் ‘கவர் ஸ்டோரி’ வந்தது. இந்த செய்தி, அஜீத் ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அஜீத் அதிக ரசிகர்களைக் கொண்ட ஊர் மற்றும் இயக்குனர் பாலா மற்றும் அந்த ஃபைனான்சியரின் ஊரான மதுரை முழுக்க, ஒவ்வொரு மூலையிலும் ‘ஏய் பாலா... எங்க தலயைத் தொட்டுட்டு, தலையோட மதுரைக்குள்ள வந்திடுவியா?’ என்றெல்லாம் கலவர போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அவ்வளவு நடந்தும், அஜீத் அந்த சம்பவம் குறித்து இன்று வரை எதுவும் பேசவில்லை. அது உண்மையா, பொய்யா என்று பத்திரிக்கைகளுக்கும் தன் ரசிகர்களுக்கும் தெளிபடுத்தவோ, போலீஸில் எந்த வித புகாரோ அளிக்கவும் இல்லை. மாறாக, தன் ரசிகர்களை அமைதி காக்க மட்டுமே சொன்னார்.
6 ஆண்டுகளுக்கு முன், 2011ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததுமே, சசிகலா தரப்பினர் போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட சமயத்தில், உடனடியாக கைது செய்யப்பட்ட ஆட்களில் இந்த ‘கந்துவட்டி’ ஃபைனான்சியரும் ஒருவர். அந்த சமயத்தில், அவரது ஆட்டம் சற்றே குறைந்தது. ஆனால், அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. தமிழகத்தின் இரண்டு முக்கிய கட்சியினரின் முக்கிய புள்ளிகளுடனுமே மிக நெருங்கிய நட்பு உண்டு இவருக்கு. மதுரை அருகே சில நூறு ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி கல்லூரிகள் கட்டி ‘கல்வித்தந்தை’ இமேஜில் செட்டில் ஆகிவிடவும் முயற்சித்தார்.
இப்பொழுது, தற்கொலை செய்து இறந்துள்ள அசோக் குமாரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து ‘கந்துவட்டி’ பற்றி கோபமாக பேசியுள்ள தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அவர்கள் ‘சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறியிருக்கிறார். ஆனால், கொடுமை என்னவென்றால் அந்த ‘கந்துவட்டி’ ஃபைனான்சியரிடம் விஷால் அவர்களே பல முறை கடன் வாங்கியுள்ளாராம். அவரது தயாரிப்பிலே, சமீபத்தில் ஒரு படம் கூட நடித்துள்ளார்.
விஷால் மட்டும் அல்ல... தமிழ் சினிமாவில் 90% தயாரிப்பாளர்கள் ‘ஈசியாக பணம் கிடைக்குதே’ என அந்த ஃபைனான்சியரிடம் பணம் வாங்கி மாட்டியவர்கள்தானாம். நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு, அந்த பட்டியல் மிக நீளம். ‘அந்த ஃபைனான்சியருக்கு ஏது இவ்வளவு பணம்?’ என்றுதானே கேட்கிறீர்கள். சினிமாத்துறையில் புழங்குவது முக்கால்வாசிக்கும் மேல் கறுப்புப்பணம் மட்டுமே. ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்கிற பேதமில்லாமல் எல்லா அமைச்சர்கள், முக்கிய பிரபலங்களின் நூற்றுக்கணக்கான கோடிகளை சினிமா வியாபாரத்தில் முதலீடு செய்து லாபம் பார்த்து தருவதே இந்த ஃபைனான்சியரின் முக்கிய பொறுப்பு. பண பலம், அதிகார பலம் என இரண்டும் இவர் செய்யும் அநியாயங்களுக்கு பக்கபலம்.
இத்தனை ஆண்டுகளாக எந்தவொரு பெரிய நடிகரோ, தயாரிப்பாளரோ இந்த குறிப்பிட்ட ‘கந்துவட்டி’ ஃபைனான்சியர் பற்றி வாயே திறக்காமல் இருப்பதே இன்று வரை ஆச்சர்யம். எந்தளவிற்கு கொடூரமாக ஒரு மிகப்பெரிய திரைத்துறையே, ஒரு சில பேரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது பாருங்கள்.
முன்னாள் முதல்வரின் தோழியின் குடும்பம் மற்றும் மதுரை அஞ்சா நெஞ்சனின் குடும்பம் என தமிழ்நாட்டின் இரு பெரும் சக்திகளுக்கும் நெருக்கமான இந்த ஃபைனான்சியர் மேல் யார் தான் கை வைக்க முடியும்? சினிமாவை காலில் போட்டு கழுத்தின் மேல் கால் வைத்து மிதித்து, கடைசி மூச்சு போகும் வரை வேடிக்கை மட்டுமே பார்க்கலாம்.
தங்களை வாழவைக்கும் சினிமாத்துறையை இந்த நோய்களிலிருந்து எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றோ, இது போன்ற கிருமிகளை வேரறுக்க வேண்டும் என்றோ நினைக்காமல்... இத்தனை களேபரங்களுக்கு நடுவிலும், ‘யார் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன? நம் தயாரிப்பாளருக்கு என்னென்ன கந்துவட்டி பிரச்சினை வந்தால் எனக்கென்ன’ என்று தங்கள் படம் இத்தனை கோடி வசூல் அத்தனை கோடி வசூல் என பொய்களைப் பரப்பிக்கொண்டு, படத்திற்கு படம் தங்கள் சம்பளத்தை உயர்த்துவதை மட்டுமே லட்சியமாக கொண்ட முன்னணி ஹீரோக்களை என்னவென்று சொல்வது?
Fwd தகவல் லெட்சுமணன் தயாரிப்பாளர்

No comments:

Post a Comment