Thursday 30 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அந்த இளம்பெண்ணின் மனதுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத குறை..!
அவர் பெயர் மினு பவுலின் .
ஹோட்டல் ஒன்றை , கொச்சியில் நடத்தி வருகிறார் ..!
ஹோட்டலின் பெயர் - “பப்படவடா” .
நிறைவாகவே பிசினஸ் நடந்தாலும் மினு பவுலின் மனதிற்குள்
ஒரு குறை..!
.
தன் ஹோட்டலுக்கு வருபவர்கள் விதம் விதமான உணவுகளை ஆர்டர் செய்து மகிழ்ச்சியோடு சாப்பிட்டு விட்டு, மனநிறைவோடு பாராட்டி விட்டுப் போனாலும்...
தங்களுக்கான ஒருவேளை உணவை சாலையோர, சாக்கடையோரம்...
குப்பைத்தொட்டியில் தேடும் மனிதர்களும் இங்கே இருக்கத்தானே செய்கிறார்கள் ..?
இவர்களுக்காக நாம் என்ன செய்யப் போகிறோம்..?
இவர்கள் ஒரு பக்கம் இருக்க , இன்னொரு பக்கம் ...
தேவைக்கு மிஞ்சிய உணவை நாள்கணக்கில் ஃபிரிட்ஜில் வைத்து விட்டு, கெட்டுப் போனவுடன் வீதியில் குப்பைத்தொட்டியில் வீசும் மனிதர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்..?
.
இரண்டு விசித்திரமான கேள்விக்குறி மனிதர்கள்..?
விடை என்ன..?
.
விடாமல் சிந்தித்தார் மினு பவுலின். விடை கிடைத்து விட்டது.
.
420 லிட்டர் ஃபிரிட்ஜ் ஒன்றை வாங்கி, அதை தன் ஹோட்டலுக்கு முன் ரோட்டிலேயே வைத்துவிட்டார் மினு. இரவும், பகலும்...24 மணி நேரமும், எல்லா நாட்களிலும் இந்த ஃபிரிட்ஜ் இயங்கிக் கொண்டே
இருக்கும் .
எந்த நேரத்திலும் யாரும் வந்து இந்த ஃபிரிட்ஜ்ஜில் உணவுகளை வைத்துச் செல்லலாம் .
அது போல, பசியுள்ள யாரும்,
எந்த நேரத்திலும் இங்கே வந்து, யாரிடமும் எதுவும் கேட்காமல் ... இந்த ஃபிரிட்ஜ்ஜில் உள்ள உணவுகளை எடுத்துச் செல்லலாம் .
.
உணவை வைப்பவர்களுக்கு ஒரே ஒரு கண்டிஷன் :
“ தயவு செய்து கெட்டுப் போன உணவுகளை வைக்காதீர்கள் ..!
நன்றாக பேக் செய்து வையுங்கள் ...
ஃபிரிட்ஜ்ஜூக்குள் உள்ள மார்க்கர் பேனாவால் , உணவை வைக்கும் தேதியை மட்டும் எழுதி விடுங்கள் .”
.
ஐடியா நன்றாகத்தான் இருக்கிறது . ஆனால்...''தேவையில்லாத ஒருவர் வந்து உணவை எடுத்துக் கொண்டு போய் விட்டால்..?”
இதற்கும் மினுவிடம் பதில் இருக்கிறது : “ நான் எப்போதும் நல்லதையே நினைக்க விரும்புகிறேன்..”
.
மினுவின் ஹோட்டலுக்கு சாப்பிட வந்த பலர், இந்த ஃபிரிட்ஜ்ஜில் வைப்பதற்காக அவரது ஹோட்டலிலேயே உணவை வாங்கும்போது, மினு சொல்கிறார் :
“ஸாரி...இதை வைத்து எனது பிசினஸில் சம்பாதிக்க நான் ஆசைப்படவில்லை .
உங்கள் வீட்டில் வீணாகும் உணவை மட்டும், வெளியே கொட்டி விடாமல், இங்கே கொண்டு வந்து வையுங்கள் அது போதும்...”
.
எப்படியும் தினமும் 50 குடும்பங்களாவது பசியோடு இங்கே வந்து, இந்த ஃபிரிட்ஜ்ஜூக்குள் இருக்கும் உணவை எடுத்துச் சென்று, வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு, மினுவை மனதார வாழ்த்துகிறார்கள்...
.
“இது பெரிய சாதனை” என யாராவது பாராட்டினால் அவர்களுக்கு மினு சொல்லும் பதில் :
“இல்லை...இந்த ஃ பிரிட்ஜை வாங்கி வைத்ததும், இதற்கு கரண்ட் பில் கட்டுவது மட்டும்தான் நான் மற்றதெல்லாம் அன்பு உள்ளம் கொண்ட மக்கள்தான்..!”
இன்னொன்றும் சொல்கிறார் மினி :
“இந்த திட்டத்தை நான் ஆரம்பிக்க காரணமே, எந்த வீட்டிலும் யாரும் உணவை வீணாக்க கூடாது.
எந்த ஒரு உயிரும் இந்த உலகில் பட்டினி துன்பத்தை அனுபவிக்கக் கூடாது ”
.
நன்மைகளால் நிரம்பிய இந்த ஃபிரிட்ஜ்ஜூக்கு என்ன பெயர் வைக்கலாம் ..?
மினு வைத்திருக்கும் பெயர் :
“நன்மை மரம்”
.
ஊரெங்கும் நிறைய நன்மை மரங்கள் இருக்க வேண்டும் என்பதே மினுவின் ஆசை ..!
.
நடக்குமா..?
.
மினு சொன்னதுதான் இதற்கு பதில் :
“ நான் எப்போதும் நல்லதையே நினைக்க விரும்புகிறேன்...”

No comments:

Post a Comment