Friday 17 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒருநாள், முதல்வர் வீட்டில் இருந்து கண்ணதாசன் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு. தனது மகன் திருமண விஷயமாக கண்ணதாசன் வெளியூர் சென்றிருந்தார். இப்போதுபோல அப்போது செல்போன் எல்லாம் கிடையாது. தீவிர முயற்சிக்குப் பிறகு, கண்ணதாசனை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்., அவரை உடனே புறப்பட்டு சென்னை வரச் சொன்னார்.
எதற்காக வரச் சொல்கிறார் என்பது புரியாமலே தன்னை சந்தித்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி அளித்தார். ‘‘தங்களை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்திருக்கிறேன். சம்மதம் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’’ என்றார். எம்.ஜி.ஆரின் அன்பிலும் மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போனார் கண்ணதாசன்.
‘அரசவைக் கவிஞர்’ பட்டமளிக்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன், ‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
அவர் கூறியது போலவே நடந்தது. அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்ற கண்ணதாசன் வெறும் உடலாகத்தான் திரும்பினார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இறுதி ஊர்வலத்துக்குத் தயாரானது. கண்ணதாசன் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்ட பின், யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் எம்.ஜி.ஆர். மின்னலாய் அந்த வாகனத்தின் மீது ஏறிவிட்டார். கண்ணதாசன் உடலை சற்று உயர்த்தி சிறிய ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு கீழே இறங்கிய எம்.ஜி.ஆர்., ‘‘இப்போது, கவிஞரின் முகம் பொதுமக்கள் பார்க்க வசதியாக நன்றாக தெரிகிறது’’ என்றார்.
எம்.ஜி.ஆர்… அதிலும் தமிழகத்தின் முதல்வர். கண்ணசைத்தால் காரியம் செய்ய காத்திருப்போர் ஆயிரம் பேர். என்றாலும் கண்ணதாசனின் முகத்தை பொதுமக்கள் இறுதியாக பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக, தானே வேன் மீது ஏறினார் என்றால், கவிஞர் மீது அவர் கொண்டிருந்த அன்பும், எதையும் மக்களின் கோணத்தில் இருந்தே பார்க்கும் எம்.ஜி.ஆரின் நுண்ணறிவும் பிரமிக்கத்தான் வைக்கும்.
- தி இந்து .

No comments:

Post a Comment