Monday 27 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தன்னம்பிக்கை
‘என் பிள்ளை நான் எது சொன்னாலும் கேட்பதில்லை!’
‘செவிடா?’
‘இல்லை, திமிர்!’
‘பிள்ளைக்கு என்ன, பதினாறு வயசா?’
‘ஒன்றரை!’
குழந்தைப் பருவத்திலிருந்தே மனிதனுக்கு இரு வெவ்வேறு குணங்கள் உண்டு. அவை, சுதந்திரம், பாதுகாப்பு.
தன் தள்ளுவண்டியிலிருந்து இறங்கி, வாகனங்கள் விரையும் தெருவில் ஓட முயற்சிக்கும் குழந்தை, எங்கோ ஓடும் நாயைப் பார்த்து மிரண்டு, அம்மாவின் காலைக் கட்டிக்கொள்ள ஓடிவரும்.
நான்கு வயதுக்குள் 80% அறிவு (I.Q) வளர்ந்துவிடுகிறது. அதற்குள் ஒருவர் தன் உருவம், குணநலன், திறமை ஆகியவற்றில் திருப்தி கொள்ளும்போது தன்னம்பிக்கை பிறக்கிறது.
குழந்தை குளிப்பாட்டியவுடன், அதன் கையையோ, உச்சியையோ முகர்ந்துவிட்டு, ’ஹை! ஜோரா, வாசனையா இருக்கியே!” என்று பாராட்டினால்தான், எவ்வளவு மகிழ்ச்சி அதன் முகத்தில்!
சிறு வயதில் தன்னைப்பற்றி ஆராய குழந்தைகளுக்குத் தெரியாது. வீட்டுப் பெரியவர்கள் சொல்வதை அப்படியே ஏற்பார்கள். அவர்கள் வயதுக்குரிய வேலையைக் கொடுத்து, அவர்கள் அதை எப்படிச் செய்தாலும் பாராட்டுவது உசிதம்.
அடுத்த முறை, நீங்கள் ஏதாவது வேலை செய்யும்போது பெருமையுடன் ‘உதவிக்கு’ வருவார்கள் – அதை நீங்கள் உபத்திரவம் என்று கருதினாலும். மூன்று வயதுக் குழந்தைக்குக்கூட சப்பாத்தி தயாரிக்கும்போது, கையில் குழவியைக் கொடுத்துவிட்டு, பலகையில் ஒட்டாதிருக்க, அம்மா திருப்பிப்போடலாம். ஒவ்வொரு முறையும், பாராட்ட மறவாதீர்கள். சாப்பிடும்போது, ஞாபகமாக, ‘இன்னிக்கு குழந்தைதான் ரொம்ப உதவி செஞ்சான்!’ என்று அவனெதிரேயே பாராட்டுங்கள்.
ஒரு சிறுவன் தான் குடிப்பதற்காக வைத்திருந்த பாலைக் கொட்டிவிட்டான் என்று அம்மா ஆத்திரப்படலாம்.
‘முட்டாள்! ஒரு காரியத்தை உருப்படியாகச் செய்யத் தெரியாது!’
அடித்தாலோ, திட்டினாலோ கீழே கொட்டின பால் திரும்பி வந்துவிடுமா?
அடுத்த முறை பாலைக் கையில் எடுக்கும்போது, கொட்டிவிடப் போகிறதே என்ற பயம்தான் உண்டாகும். தான் முட்டாள் என்று அம்மாவே சொன்னாளே என்ற தாழ்மை உணர்வும் ஏற்படும்.
மாறாக, ‘போனால் போகிறது. அடுத்த தடவை ஜாக்கிரதையாகக் குடி!’ என்று நாம் அனுதாபம் காட்டினால், ஏற்கெனவே பயந்த குழந்தைக்கு ஆறுதலாக அமையும்.
பொது இடம் ஒன்றில் ஒரு தாய் தன் இரண்டு வயதுப் பெண்ணிடம் கூறிக் கொண்டிருந்தாள்: “சரசு ராங்கி! ஒன்னை யார்கிட்டேயாவது குடுத்துட்டு, தம்பிப் பாப்பாவை மட்டும் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்!”
தாயை ஒட்டி நின்றிருந்த அச்சிறுமி சரசு, எதுவும் புரியாது, தாயையே பார்த்தாள். தான் என்னமோ வேடிக்கையாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு, நாலைந்து தடவை அதையே கூறினாள், அப்பெண்மணி. குழந்தையின் முகத்தில் பயம் தெரிந்ததும், சிரிக்க ஆரம்பித்தாள்.
அந்தக் குழந்தைக்கு ஏனோ தைரியமே இல்லை என்று என்றாவது புகார் சொல்வாள்.
என் மாணவன் ஒருவன், பதினோரு வயதிலிருந்து தனக்கு அடிக்கடி மூச்சிளைப்பு வருவதாகக் கூறினான். பத்து வயதாக இருந்தபோது, இனி அவனுடைய மூன்று தம்பிகளையும் பார்த்துக்கொள்ள வேண்டியது அவன் பொறுப்பு என்று தந்தை கூறிவிட்டாராம். அவனாலோ அவர்களை அடக்க முடியவில்லை. தான் தந்தை எதிர்பார்த்தபடி இல்லையே என்ற வருத்தம் என்றான்.
தன் பொறுப்பைத் தட்டிக் கழித்திருக்கிறார் அந்த அப்பா. வயதுக்கு மீறிய உழைப்பைச் சிறுவர்களுக்குக் கொடுத்தால், அது வதை. அவனுக்குப்பொறுப்பு வராது. தன்னம்பிக்கைதான் குறையும்.
குழந்தைகள் சொல்லாலோ, செயலாலோ தப்பு செய்கிறார்கள் என்றால், அது அறிவீனத்தால் அல்ல. எது சரி, எது தப்பு என்று அவர்களுக்குத் தெரியாததால்தான். எந்தப் புதிய காரியத்தையும் முதலில் விளக்கிச் சொல்லிவிட்டு, இயன்றால் செய்தும் காட்டிவிட்டு, அப்படியும் தவறு நேர்ந்தால், அது அனுபவக்குறைவால். தப்பு செய்ததற்காக ஏளனம் செய்யாமல், எதனால் தப்பு விளைந்தது, அதை எப்படி நிவர்த்தி செய்வது என்று விளக்க வேண்டும்.
‘யாருக்கு அவ்வளவு பொறுமை இருக்கு!’ என்று கோபப்படுகிறீர்களா?
உங்கள் பொறுமைதான் குழந்தையின் நல்ல எதிர்காலத்துக்கே வழிவகுக்கும். ‘என்னால் எதையும் நன்றாகச் செய்ய முடியும். அதனால்தான் அம்மா உதவிக்குக் கூப்பிடுகிறாள். நான் நல்லவன். பிறருக்கு உதவுவேன்,’ என்றெல்லாம் தன்னைப்பற்றியே நல்ல அபிப்ராயம் கொண்டு வளருபவன் புதிய மனிதர்களையோ, பழக்கமில்லாத சூழ்நிலையையோ கண்டு அஞ்சி விலகுவதில்லை. தான் பல விஷயங்களையும் கற்க வேண்டும் என்று, எந்த வயதானாலும் ஆர்வத்தோடு செயல்பட்டு வெற்றி பெற முடிகிறது. பெற்றோர் பெருமையுடன் பிறருக்குத் தம்மை அறிமுகப்படுத்தி, வணக்கம் தெரிவிக்கவோ, கைகுலுக்கவோ பழக்கப்படும் குழந்தை பிறரையும், கூடவே தன்னையும் மதிக்கக் கற்கிறது.
தம்மைத்தாமே மதித்து நேசிப்பவர்கள்தாம் பிறரையும் மதிக்கவும், அவர்கள்பால் அன்பு செலுத்தவும் பக்குவம் அடைகிறார்கள்.
‘நான் நல்ல பிள்ளை. இல்லை?’ என்று ஒரு குழந்தை அடிக்கடி கேட்கும். அது தற்பெருமையால் அல்ல. தான் நினைப்பது சரிதானா என்று அறியும் விதம்.
மலர்ந்த முகத்துடன் ஆமோதியுங்கள். குழந்தைக்கும் உங்களுக்கும் இடையே உள்ள பிணைப்பு இறுகும்.

No comments:

Post a Comment