Thursday 14 December 2023

பார்வைகள் பலவிதம்

 பார்வைகள் பலவிதம் . .

"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை""
அருமையான பழமொழி.
ஒருவருடைய குற்றத்தைப் பார்க்கத்
தொடங்கினால் அவருடைய
குற்றம் மட்டுமே கண்களுக்குத் தெரியும்.
அவர் அதுவரை செய்த நன்மைகள்,
நல்ல செயல்கள் எதுவுமே
கண்களுக்குத் தெரியாமலே
போய்விடும்.
எல்லாவிதத்திலும் குறையில்லாத மனிதன்
ஒருவனைக் காட்டு என்றால் யாராலேயும்
யாரையும் காட்டிவிட முடியாது.
ஒரு சாரார் நல்லவர் என்று சொல்கிற ஒரு நபர்
இன்னொரு சாராரால் தீயவர் என்று
குற்றஞ்சாட்டப்படுகிறார்.
நன்மை எது தீமை எது
என்று பிரித்து அறிவதிலும்
இருவேறு கண்ணோட்டம்
எல்லோரிடமும் உண்டு.
ஒரே நபர் இருவேறு மனிதர்களால்
இருவேறு விதமாக சித்திரிக்கப்படுகிறார்.
நாம் இறைவனாகப் பார்க்கும்
ஒருவர்
இன்னொருவர் பார்வையில்
தீயவராகத்
தெரிகிறார்.
இதுதான் உலகம்.
எல்லோருடைய பார்வையும்
ஒரே மாதிரி இருப்பதில்லை.
மகாபாரதத்தில் இந்தப் பழமொழிக்கு
அருமையான ஒரு
தீர்வைச் சொல்லித் தருகிறார் தருமர்.
கௌரவர்கள் சபையில் பாஞ்சாலியை
இழுத்து வந்து மானபங்கப்படுத்த முயன்ற காட்சி
பஞ்ச பாண்டவர்களைக்
கொதிப்படையச் செய்கிறது.
தருமரைத் தவிர மற்ற நால்வரும்
பழிக்குப் பழி வாங்க வேண்டும்
என்ற ஆத்திரத்தில் பேசுகின்றனர்.
தருமர் மட்டும்
மற்ற நால்வரிலும்
இருந்து சற்று மாறுபடுகிறார்.
பீமன் கோபத்தின் உச்சக் கட்டத்தில்
நின்று பேசுகிறான்.
அதற்குப் பதிலளித்த தருமர்,
"பீமா, குற்றம் பார்க்கின்
சுற்றம் இல்லை.
ஒரே வம்சத்தில் பிறந்தவர்கள் நாம்.
ஒன்றாக வாழ்வதைப் போல உறுதி
வேறு ஒன்றும் இல்லை.
மாறாக, நாம் ஒருவருக்கு ஒருவர்
சண்டை போட்டுக் கொண்டால் இருவருக்குமே
பழிதான் வந்து சேரும் " என்று உலக
எதார்த்த நிலையை இயல்பாக
எடுத்துக் கூறுகிறார் தருமர்.
எவ்வளவு அருமையான சிந்தனைக்குரிய
வரிகள்.
உள்ளபடியே பார்த்தால் தருமருக்குத்தான்
அதிக கோபம்
வந்திருக்க வேண்டும்.
மாறாக சாந்தமாகப் பேசுகிறார்.
உலக எதார்த்தநிலை அறிந்து பேசுகிறார்.
உறவின் மாண்பினை
உலகுக்கு
எடுத்துரைக்கும் விதமாகப் பேசுகிறார்.
உறவையும்,
நட்பையும்
பேணிக் காத்தால்,
அது நம்மை என்றுமே
பாதுகாத்து வாழ வைக்கும்.

No comments:

Post a Comment