Monday 10 July 2023

சிரமம் என்று ஏதுமில்லை.

 சிரமம் என்று ஏதுமில்லை.

*உங்களின் கூச்சத்துக்கு நீங்கள் மட்டும் தான் முழு முதற்காரணம். ஏனெனில், பிறக்கும் போதே கூச்ச சுபாவத்துடன் யாரும் பிறப்பது இல்லை.*
*கூச்சம் என்பது ஒருவகையில் தங்களின் வசதிக்காக பலர் அவர்களே வளர்த்துக் கொள்ளும் ஒரு குணம்’ என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். ‘*
*மற்றவர்கள் நம்மைப் பார்த்துப் பரிதாபப்பட வேண்டும், கருணையாகப் பார்க்க வேண்டும்’ என்று உள்ளுக்குள் வேண்டி விரும்பியே பலர் கூச்ச சுபாவத்தை வளர்த்துக் கொள்கிறார்கள்.*
*பின்னாளில் அதுவே அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாகவும் வந்து நிற்கிறது.*
*ஏனெனில், கூச்சம் கொஞ்ச நாளில் பயமாக மாறி விடும். நீங்கள் பயந்து ஒதுங்கும் போது, உங்கள் மேல் மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள்.*
*சின்னத் தயக்கம், நமக்குள் இருக்கும் திறமையை நாம் உணராதபடி செய்து விடுகிறது. திறமைகள் இருந்தும் சிலர் தோற்றுப் போவதற்குக் கூச்சமே முதல் காரணம்.*
*‘சிரமம் இன்றி எதுவும் இல்லை, சிரமம் என்பது எதுவும் இல்லை’ என்பதை உணர்ந்து, தங்களுக்குள் ஏற்பட்ட தயக்கத்தைத் தாண்டி தங்களுக்குள் தங்களைக் கண்டு பிடித்தவர்களின் அனுபவங்கள் பல..*
*உலகத்தில் மொத்த மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் கூச்சம், பயம், தயக்கத்தில் சிக்கித் தவிக்கிறார்கள்.*
*உங்களுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும், கூச்சம் உங்களை இரண்டு படி கீழே இறக்கி விட்டு விடும்.*
*உடல், சூழல் என இரண்டு காரணங்களால் அதீத கூச்ச உணர்வு ஏற்படுகிறது. மூளையில் செரட்டோனின் என்ற ரசாயனம் குறையும் போது தானாகவே பயம், பதற்றம், குற்றஉணர்சி, தாழ்வு மனப்பான்மை, தயக்கம் போன்ற உணர்ச்சிகள் உருவாகும்.*
*இதை மாற்றுவதற்கான சூழ்நிலை இல்லையென்றால், கூச்சம் நம் குணமாகவே மாறி விடும். இதைத்தான் கூச்ச சுபாவம், பயந்த சுபாவம் என்று சொல்கிறோம்.*
*பெற்றோரின் அதிகப்படியான பாதுகாப்பும், அக்கறையும் ஒருவனுக்கு கூச்ச உணர்வை ஏற்படுத்தி விடும்.*
*பெற்றோர்கள் ஒருவனை எதற்கு எடுத்தாலும் ‘தப்பு’, ‘இது குற்றம்’ என்று அடக்கி வைக்கும் போது, அவனுக்கு மன தைரியம் இல்லாமல் போய் விடுகிறது.*
*மகனையோ, மகளையோ எந்தக் செயலையும் செய்ய விடாமல் தடுத்து, பெற்றோர்களே செய்து முடிப்பது ஆபத்தான வளர்ப்பு முறை ஆகும்.*
*இதனால், எந்தச் செயலையும் துணிச்சலாகச் செய்யும் தைரியம் அவர்களுக்குள் வளராமலேயே போய் விடும்.*
*பொருட்களைப் பேரம் பேசி வாங்க முடியாது. சாலையைக் கடக்கத் தெரியாமல் தடுமாறுவார்கள்.*
*இந்தச் சூழ்நிலையில் 18-19 வயதில் கல்லூரிக்குச் செல்லும் போது, பெற்றோர் இல்லாமல் எதையும் சந்திக்கப் பயப்படுவார்கள்.*
*‘எதிரில் இருப்பவர் நம்மை விடச் சிறந்தவர்’ என்கிற எண்ணம் எழுந்து, தாழ்வு மனப்பான்மை வந்து விடும்.*
*தன்னம்பிக்கையே இருக்காது.யாரையும் சந்திக்க, எதிர்கொள்ளப் பயப்படுவார்கள். பெரும்பாலும் சந்திப்புகளைத் தவிர்ப்பார்கள்..*
*உங்களை நீங்களே எதிர்மறையாக முத்திரை குத்திக் கொள்ளாதீர்கள்.*
*நான் கூச்ச சுபாவம் உடையவன், எனக்குப் பயம், நான் பேச மாட்டேன், நான் சிரிக்க மாட்டேன், நான் எழுத மாட்டேன் என்று நீங்களே உங்களைச் சொல்லிக் கொள்வதால் அது ஆழ்மனதில் பதிந்து விடுகிறது.*
*கூச்சப்படுபவர்களால் தங்களின் அறிவுக்கும், திறமைக்கும் ஏற்ற வாழ்க்கையை அடைய முடியாது.*
*கூச்சம், தயக்கம் எதுவும் இல்லாதவன் தான் வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்குச் செல்ல முடியும்!*

No comments:

Post a Comment