Saturday 22 July 2023

திறமை எனும் ஊன்று கோல்.

 திறமை எனும் ஊன்று கோல்.

இரண்டு நபர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள். இரண்டு சம்பவங்களிலும், மேலதிகாரியிடம் ஆமாம் சாமியாக இருந்தும் பெற்றும்
பயனில்லாமல் போனது.
முதல் சம்பவத்தில், மேலதிகாரி திடீரென்று நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டார். இது வரை, அந்த மேலதிகாரியிடம் ஆமாம் சாமியாக இருந்த நபர் போட்ட முயற்சியெல்லாம், கடலில் கலந்த பெருங்காயத்தைப் போல், பயனில்லாமல் போனது.
இரண்டாவது சம்பவத்தில், மேலதிகாரியிடம் இவ்வாறு ஆமாம்சாமி போடும் ஆட்கள் பலர் இருந்தபடியால், நபரின் முயற்சிக்குப் பலன் இல்லாமல் போய், அவருக்கு முன்னேற்றம் இல்லாதபடியால், அவரே வேறு இலாகாவிற்கு மாறி விட்டார். அங்காவது, அவருக்கு முன்னேற்றம் கிடைக்குமா என்று பார்ப்பதற்காக.
எனவே, இவ்வாறு ஆமாம்சாமி போடுவதற்காக காலத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு, திறமையை வளர்த்துக் கொள்வதில், காலத்தை செலவிட வேண்டும். திறமை என்றுமே காப்பாற்றும். இவ்வாறு காக்கா பிடிக்கும் செயல்கள் பலனளிக்கலாம், பலனளிக்காமல் போகலாம்.
வாழ்க்கையில் முன்னேற திறமை, நபர்களின் தொடர்பு முக்கியம். யாருமே முன்னுக்கு வருவதற்கு மற்றொரு நபர் காரணமாக இருந்திருப்பார்.
ஆனால், திறமையைப் பிரதானமாகக் கொள்ள வேண்டும். திறமையிருந்தால், தக்க சமயத்தில், நமது தொடர்புகளின் மூலம், வாய்ப்பினைப் பெற்று, நம்மால் நமது திறமையைக் காண்பித்து மேலும், மேலும் முன்னேற முடியும்.
தொடர்புகள் என்பவை திறமையுள்ள ஒருவருக்கு, மற்றொருவர் உதவுவது. ஆனால் திறமையைப் பலப்படுத்திக் கொள்ளாமல், தொடர்புகளை மட்டும் பலப்படுத்திக் கொள்வதால் பிரயோஜனமில்லை. அந்த தொடர்பினால், கிடைக்கும் வாய்ப்புகளில் கூட, பரிமளிக்க முடியாமல், தோல்வியடைய நேரிடும்.
தொடர்புகள் கூட, திறமை சார்ந்து அமைய வேண்டும். அப்போதுதான் அந்த தொடர்பானது பரஸ்பர நம்பிக்கை, திறன் சார்ந்த மதிப்பு சார்ந்து ஒருவருக்கொருவர் உதவி, இருவரும் முன்னேற வழிவகுக்கும். திறமையில்லாமல் போனால், தொடர்புகளால் கிடைத்த உதவியும் பயனின்றிப் போய்விடும்.
*உழைப்பிற்கு மாற்று கிடையாது.*

No comments:

Post a Comment