Wednesday 26 July 2023

உருத் தெரியாமல் போகும்.

 உருத் தெரியாமல் போகும்.

புறங்கூறல், புறணி, வீண் பேச்சு, வம்பு அரட்டை, புரளி, வதந்தி, செல்லமாய் ‘காஸிப்’... உடன் இல்லாத இன்னொருவரைப் பற்றி அங்கே கூடியிருப்பவர்கள் இட்டுக்கட்டிப் பேசுவது என்பது ஒரு காலத்தில் திண்ணையிலும் புழக்கடையிலும் புழங்கியவைதான்;
இன்று சமூக வலைதளங்களின் புண்ணியத்தில் கொடிகட்டிப் பறக்கிறது.
இந்த புறங்கூறலை எப்படி எதிர்கொள்வது என்பதில் தான் கவனமாக இருக்க வேண்டும்.
எளிமையான உபாயம் புறம்பேச்சை, அதன் போக்கில் அப்படியே விட்டுவிடுவதுதான். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மத்தியில், அது சுற்றிச் சுற்றி வந்தாலும், அதன் உண்மையான இலக்கு நீங்கள்தான். உதாசீனப்படுத்தினால் உருத்தெரியாமல் அழிந்துவிடும்.
மாறாக ‘என்னைப் பற்றி இப்படியொரு அவதூறா...’ என்று வெகுண்டு நீங்கள் கிளம்பும்போதுதான், அந்த வதந்தி உயிர்பெறும்.
மாறாக, உலா வரும் வதந்தி பற்றி கவலையில்லாததாய்க் காட்டிக்கொண்டு, அதேசமயம் அமைதியாய் அதை ஊன்றிக் கவனியுங்கள். இதை யார் கிளப்பி விட்டது, கிளப்பியவருக்கும், பரப்பியவருக்குமான ஆதாயம் என்ன... என்ற கேள்விகளுக்கான பதில்கள், உங்களுக்குப் பயன்படலாம். சில சமயம் வதந்தியின் பாதியில், நீங்கள் கவனிக்க மறந்த ஒரு உண்மையும் ஒளிந்திருக்கலாம். இவ்வகையில் அவர்கள் மெனக்கெட்டு உங்கள் வளர்ச்சிக்காக உழைத்திருக்கிறார்கள். மெச்சிக் கொள்ளுங்கள்.
மாறாக, உலா வரும் வம்பு உங்கள் இருப்பை, நடமாட்டத்தை, இயல்பைப் பாதிக்கும் அளவுக்குக் கடுமையான மன உளைச்சலைத் தருகிறதா, தாமதிக்காமல் உங்கள் சுயவிளக்கத்தை பகிரங்கமாகவும், தன்மையாகவும் வெளிப்படுத்துங்கள்.
எல்லோருக்கும் உள்ளது போல இது என்னுடைய வாழ்க்கை, என்னுடைய பிரச்சினை, இதைத் திடமாக எதிர்கொள்வேன் என்பதோடு முடித்துக்கொள்ளுங்கள். பதில் விஷமப் பரப்புரையோ, சவடாலோ வேண்டாம். இதை எதிர்பார்த்து இன்னுமொரு கும்பல் காத்திருக்கக் கூடும்.
இந்த வகையில் மற்றவர் ஒளித்து வைத்துப் பரப்பும் கிசுகிசு மீது நாமே வெளிச்சம் பாய்ச்சினால், அதன் மீதான சுவாரசியத்தைச் சுற்றியுள்ளவர்கள் இழப்பார்கள். அத்தோடு கிசுகிசு பிசுபிசுத்துவிடும்.
திருவள்ளுவர் இதனை அழகாக கூறி உள்ளார்.
*புறங்கூறிப் பொய்த்துயிர்
வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.*
*விளக்கம்:*
கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று.

No comments:

Post a Comment