Tuesday 21 January 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*சிந்தனைக் களம்*

நகைச்சுவை உணர்வு எல்லோருக்கும் தேவையான ஒரு விஷயம். மனதில் தளும்பும் ஆனந்தம், உதடுகளில் அமர்ந்திருக்கும் புன்னகை இவையே ஒருவன் வாழ்க்கையைக் குறித்த புரிதலோடு இருக்கிறான் என்பதன் அடையாளங்கள்.
முக்கியமற்றது எனும் நினைப்பில் நாம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்லக் கூடிய விஷயம் இந்த நகைச்சுவை உணர்வு. சில வேளைகளில் நகைச்சுவை உணர்வுடன் இருப்பவர்களை கிண்டலடிக்கக் கூட நாம் தயங்குவதில்லை. “எப்பப் பாரு ஏதாவது சொல்றது, சிரிக்கிறதுன்னே இருக்கான். லைஃப்ல உருப்படற வழியே இல்லை” என சகட்டு மேனிக்கு விமர்சனங்களை அள்ளி விடுபவர்களும் ஏராளம்.
ஆனால் நல்ல நகைச்சுவை உணர்வு இருப்பவர்கள் வாழ்க்கையின் முக்கியமான அம்சத்தை எட்டிப் பிடித்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. ஒரு விஷயம் கவனிச்சுக்கோங்க. நகைச்சுவை உணர்வு என்பது நீங்கள் ஜோக் அடிக்கிறீர்களா என்பதை வைத்து கணக்கிடுவதல்ல ! ஒரு செயலில் இருக்கும், அல்லது ஒரு சொல்லில் இருக்கும் நகைச்சுவையை எப்படி அனுபவிக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். எல்லாரையும் சிரிக்க வைத்து விட்டு உள்ளுக்குள் நகைச்சுவை உணர்வே இல்லாமல் போனால் அது பிழைப்புக்காக குரங்காட்டி வித்தை செய்பவரைப் போலவோ, மேடையில் கோமாளி வேஷம் போடுபவரைப் போலவோ ஆகிப் போகும் !
நகைச்சுவை என்பது அடுத்தவரைக் காயப் படுத்துமளவுக்கு கிண்டல் செய்வது என்பது சிலருடைய பார்முலா ! அது குரூர நகைச்சுவை. அதை விட்டு விடுங்கள். நகைச்சுவையில் அந்த நபரும் இணைந்து சிரிப்பதே முழுமையான நகைச்சுவை !
நகைச்சுவை உணர்வு இருக்கும் மனிதர்கள் தங்களைச் சுற்றி மிக எளிதில் நண்பர் படையை உருவாக்கி விடுவார்கள். அவர்கள் மிக எளிதில் மற்றவர்களோடு பழகவும் செய்வார்கள். தலைமைப் பண்பின் மிக முக்கியமான விஷயமாக இந்த நகைச்சுவை உணர்வைக் குறிப்பிடுகிறார்கள். காரணம் நகைச்சுவை உணர்வு உடைய தலைவர்கள் நல்ல கடுமையான முடிவுகளைக் கூட எளிமையாய் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வார்கள் என்பது தான்.
அலுவலகங்களில் பிறரோடு இணைந்து பணிசெய்வதே வெற்றிபெறுவதன் முதல் தேவை. அத்தகைய மனநிலையைத் தருவதற்கு நகைச்சுவை உணர்வு ரொம்பவே கை கொடுக்கிறது ! இயல்பாய் எல்லோருடனும் சிரித்து அன்னியோன்யமாய் வேலை பார்ப்பவனை அலுவலகத்துக்குப் பிடித்துப் போவதில் சந்தேகமில்லை.
இன்றைக்கு உலகில் ஆட்டிப் படைக்கும் சிக்கல் மன அழுத்தம். அதற்கான காரணம் உலகமயமாதலாகவும் இருக்கலாம், அல்லது குழாயடிச் சண்டையாகவும் இருக்கலாம். காரணம் முக்கியமில்லை. ஆனால் மன அழுத்தம் மட்டும் வந்து விட்டால் வாழ்க்கை அதோ கதி தான். உடலும் பணால் ! உள்ளமும் பணால் ! அத்தகைய மன அழுத்தம் வராமல் தடுக்கும் வல்லமை நகைச்சுவை உணர்வுக்கு ரொம்பவே உண்டு.
அதனால் தான் மகாத்மா காந்தி ஒரு முறை சொன்னார், “ எனக்கு நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாமல் போயிருந்தால் என்றைக்கோ தற்கொலை செய்திருப்பேன்”. ரொம்பவே உண்மையான வார்த்தை !!
👤 *இனிய காலை வணக்கம்*

No comments:

Post a Comment