Saturday 20 January 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இது கோழைத் தனமல்ல. விவேகம்.
இந்து மதம் பற்றி எவ்வளவோ பேர் இதற்கு முன்பும் கத்தியிருக்கிறார்கள். இனியும் கத்துவார்கள். நாம் தேவையில்லாமல் இதை ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறோம் என்றே எனக்குத் தோன்றுகிறது. கடவுளே இல்லை என்றவர் இன்று இராமானுஜரைப் போற்றுகிறார். திருவள்ளுவரைப் போற்றுகிற இவர்கள், அவர்தம் கடவுள் நம்பிக்கையை தூற்றுகிறார்கள். இவைகள் அனைத்துமே முரண்பாடுகள் கொண்ட வெறும் வாய் வார்த்தை ஜாலங்கள். தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள ஏதேனும் ஒரு சர்ச்சையை கிளப்பி விடுவது இப்பொழுது பேஷனாகி விட்டது. எல்லா பிரபலங்களும் இப்பொழுது இந்த யுக்தியைக் கையாளுகிறார்கள்.
நாமும் அவர்கள் விரித்த வலையில் மாட்டிக் கொண்டு சர்ச்சையில் கலந்து கொள்வதோடு, நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறோம். மீடியாவுக்கு இனி ஒரு வாரத்திற்குக் கவலையில்லை. மார்கழி மாதத்தில் ஆண்டாளை மறந்த பக்தர்களெல்லாம் இப்பொழுது நினைத்துக் கொண்டே இருப்பார்கள். எவர் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும், பேசட்டுமே. அதனால் நமக்கோ, ஆண்டாளுக்கோ ஒரு குறையும் நேர்ந்து விடப் போவதில்லை. யாரோ ஒரு வைரமுத்து சொன்னார் என்பதற்காக பகவான் ஆண்டாளுக்கு அளித்த சிறப்பையும், மரியாதையையும் திரும்பப் பெற்றுக் கொள்ளப் போகிறாரா என்ன !!?
நான் கவிஞர் கண்ணதாசனை நினைத்துப் பார்க்கிறேன். அவரும் நாத்திகம் பேசியவர்தான். அவர் சொன்னதைப் பாருங்கள்.....
''நாத்திக வாதம் ஒரு மாய மான். கற்பனை மிக்க சொற்பொழிவுகளிலேயே அது உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது. இப்போது யாரும் சொல்லாமல் தானாகவே செத்துவிட்டது. நான் நாத்திகனாக இருந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன். எவ்வளவு போலித்தனமான புரட்டு வேலைகளுக்கு நம்மை ஒப்புக் கொடுத்திருந்தோம் என்பதை எண்ணிப் பார்க்கும்போதே, எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது.
கடவுள் இல்லை என்று மறுப்பவன் கால காலங்களுக்கு உயிரோடிருப்பானானால், `இல்லை’ என்ற எண்ணத்தையே நான் இன்றும் கொண்டிருப்பேன். அவரவரும் பெற வேண்டிய தண்டனையைப் பெற்றுப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். அவர்களுடைய வாதங்கள் எல்லாம் செல்லு படியாகாமல், விலையாகா மல் கிடக்கின்றன. நாத்திகன் எழுதிய போற்றத்தக்க புத்தகம் என்று எதுவும் இல்லை. நாத்திக வாதத்தில் ஆழமோ, அழுத்தமோ, நியாயமோ இல்லாததால், அவர்களது எழுத்துக்கள் காலத்தால் செத்து விட்டன. தேவாரமும், திருவாசகமும் நிற்பதைப் போல, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அவை நிற்க வேண்டாம். ஆனால், அவர்கள் தலைமுறையிலேயே அவை அழிந்து போனது தான் ஆச்சரியம். இதில் ஆச்சரியம் என்ன ஆச்சரியம்; அதுதான் நடக்கக் கூடியது.
மேலை நாட்டில் கிறிஸ்துவத்திற்கு எதிராக நாத்திகர்கள் தோன்றினார்கள். அவர்களை எதிர்த்துக் கிறிஸ்துவம் போர் புரிந்தது. இஸ்லாத்தை எதிர்த்து நாத்திகம் தோன்றவே முடியாதபடி அது பயங்கர ஆயுதத்தோடு நிற்கிறது. இந்து மதத்தில் நாத்திகம் தோன்றுவது சுலபம். காரணம் அது சாத்விக மதம். இது யாரையும் எதிர்த்துப் போர் புரியாது. காலத்தால் தன் கடமைகளைச் செய்து கொண்டே போகும். அதன் விளைவுகளுக்கு இறைவனையே பொறுப்பாக்கும். அப்படி இந்து மதம் போர் புரியாமலேயே நாத்திகம் மடிந்து விட்டது. காரணத்தை ஆராய்வது கடினமல்ல. அதன் வாதங்கள் போலித்தனமானவை; அவ்வளவுதான். "பல்லாயிரம் ஆண்டு காலமாக வளர்ந்து நிற்கும் ஒரு இமயமலையைச் சில செம்மறி ஆட்டுக் குட்டிகள் சாய்த்து விட முயன்றன. அவற்றின் கொம்பொடிந்தது தான் மிச்சமே தவிர, மலை, மலையாகவே நிற்கிறது."
மேடைகளில் நடைபெறும் வார்த்தை விளையாட்டுகளில் மயங்கி நாத்திகர்களானவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவன். `கருப்புச் சட்டைக்காரன்’ என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டவன். எல்லாம் ஒரு சில ஆண்டுகளே! நாத்திகனாக இருக்கும் வரையில் எதைப் பற்றியும் அதிகமாகப் பாட முடியவில்லையே? நாத்திகத்தில் என்ன இருக்கிறது பாடுவதற்கு? ஆத்திக உள்ளம் வந்த பிற்பாடுதான் ஆயிரக்கணக்கான பாடல்கள் பிறந்தன. கடல் போன்று பரந்து விரிந்து நிற்பது, கடவுள் தன்மை. நீந்தத் தெரிந்தவன் அந்தக் கடலில் இறங்கி விட்டால், ஒரே உற்சாகம் தான். நான் இன்னும் பார்க்கிறேன். கவிஞர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் சிலர், மேடைகளில் பாடும்போது, `நான் பெரியார் பாசறையில் புடம் போட்டு எடுக்கப்பட்டவன்’ என்கிறார்கள். அவர்கள் கவிதைகள் நிற்கவும் இல்லை; அவை கவிதைகளாகவும் இல்லை. பாசறையில் எப்படிப் புடம் போடுவதோ எனக்கும் புரியவில்லை. எல்லாம் போலித்தனம் ! அபத்தம் !''
இன்றைக்கு நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு, எழும் கேள்விகளுக்கு அன்றே பதில் சொல்லி விட்டார் அவர். நாம் வீணே கவலைப்பட்டுக் கொண்டிருப்பதோடு, நாம் சாத்வீகமானவர்கள் என்பதையும் மறந்து போய் விடுகிறோம். அந்த அர்த்தமுள்ள உண்மைக் கவிஞர் கண்ணதாசன் அவர்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தாவது நாம் அமைதி காக்க வேண்டும். அதுதான் அர்த்தமுள்ள வழியில் செல்கிற நாம் அந்த அர்த்தமுள்ள கவிஞருக்கு செலுத்துகிற மரியாதையும், நன்றிக் கடனுமாகும்.
நன்றி Arun Mozhi.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment