Tuesday 30 January 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உங்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வர வேண்டும்.
சுய நம்பிக்கை என்பது உங்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அன்பிற்கு இன்னொரு பெயர் அவ்வளவு தான். உங்கள் மேல் உங்களுக்கு அன்பு இருந்தால், நம்பிக்கை இருந்தால் நீங்கள் யார் எவர் என்பதற்கான முழுப் பொறுப்பையும் நீங்கள் உங்கள் தோள்களில் தாங்கிக் கொள்வீர்கள். அது இருப்புணர்வின் ஒரு மகத்தான அனுபவம். இந்த அனுபவம் வந்து விட்டால் உங்களை யாரும் அடிமைப் படுத்த முடியாது.
தனது சொந்தக் காலிலேயே நிற்கும் வலிமையுள்ள மனிதனின் அழகைப் பார்த்திருக்கிறீர்களா? எது வந்தாலும் சரி, இன்பம், துன்பம், வாழ்வு, சாவு எதுவாக இருந்தாலும் சரி தன் மேல் அன்பு வைத்திருக்கும் மனிதன் இருப்புணர்வோடு ஒருங்கிணைந்து இருக்கிறான். அப்படிப் பட்ட மனிதன் தனது வாழ்வை மட்டும் அல்ல, தனது சாவையும் முழுமையாக ரசிக்கிறான்.
கிரேக்க அறிஞர் சாக்ரடீஸை இந்த சமுதாயம் தண்டித்தது. சாக்ரடீஸைப் போன்ற மனிதர்கள் இந்தச் சமுதாயத்தின் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. காரணம், அவர்கள் எப்போதும் சுதந்திரமான தனி மனிதர்களாக வாழ்ந்தார்கள். இந்த சமுதாயத்தையோ, மற்ற மனிதர்களையோ தங்கள் மேல் ஆதிக்கம் செலுத்த அவர்கள் அனுமதிக்கவில்லை.
சாக்ரடீசுக்கு விஷம் கொடுத்தார்கள். சாக்ரடீஸ் எந்தக் கவலையும் இல்லாமல் படுத்துக் கொண்டிருந்தார். அவரைக் கொல்வதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப் பட்டிருந்தவன் அவருக்கான விஷத்தைக் கலந்து கொண்டிருந்தான். சூரியன் மேற்கில் மறையும் நேரம். சாக்ரடீசுக்குத் தண்டனை வழங்கிய நீதிமன்றம் குறிப்பிட்ட நேரம் அது தான்.
ஆனால் அந்த அதிகாரி இன்னும் விஷத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தான். தாமதமாகி விட்டது. சாக்ரடீஸ் உற்சாகத்துடன் கேட்டார்: “காலம் கடந்து கொண்டிருக்கிறது. சூரியன் மறைந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஏன் தாமதம்?”
அந்த அதிகாரியால் இதை நம்ப முடியவில்லை. இப்படி எந்த மனிதனாவது தனது சாவிற்கு அவசரப் படுவானா? எந்த மனிதனாவது தனது சாவிற்காக குறிக்கப் பட்ட நேரம் தாண்டி விடக் கூடாது என்று ஆதங்கப் படுவானா? சொல்லப் போனால் இந்தத் தாமதத்திற்கு சாவு தண்டனைக் கைதி நன்றி சொல்ல வேண்டும். இன்னும் சில நிமிடங்களாவது அதிகமாக வாழ முடிந்ததே என்று நன்றி சொல்ல வேண்டும்.
அந்த அதிகாரி சாக்ரடீஸ் மேல் அன்பும் மரியாதையும் கொண்டவன். நீதிமன்றத்தில் அவர் பேசியதைக் கேட்டிருக்கிறான். அந்தப் பேச்சில் இருந்த உண்மையில், அதன் கம்பீரத்தில், அந்தப் பேச்சு வெளிப் படுத்திய அந்த மேதையின் உள் அழகில் மயங்கியிருக்கிறான். ஏதென்ஸ் நகர மக்களிடம் இருந்த மொத்த அறிவையும் விட சாக்ரடீசிடம் அதிக அறிவு இருந்ததை உணர்ந்திருக்கிறான் அந்த அதிகாரி.
அதனால் தான் விஷம் கலப்பதை வேண்டுமென்றே தாமதப் படுத்திக் கொண்டு இருந்தான். அப்படிப் பட்ட மேதை இன்னும் சில நிமிடங்களாவது அதிகமாக வாழட்டுமே என்ற நல்ல எண்ணத்தில் தான் அவன் மெதுவாகச் செயல் பட்டான். ஆனால் சாக்ரடீஸ் அவனை மேலும் தாமதப் படுத்த அனுமதிக்கவில்லை. “சோம்போறியாக இருக்காதே. விஷத்தை உடனே கொண்டு வா.” என்று அந்த ஞானச் சிங்கம் கர்ஜித்தது.
அந்த அதிகாரி கேட்டான்: “ஐயா, நீங்கள் ஏன் இவ்வளவு உற்சாகமாக இருக்கிறீர்கள்? உங்கள் முகத்தில் ஓர் அபரிமிதமான ஒளியை நான் பார்க்கிறேன். உங்கள் கண்களில் எதையோ அறிந்து கொள்ளும் தாகம் தெரிகிறது. ஐயா. உங்கள் நிலை உங்களுக்கு புரியவில்லையா? நீங்கள் இன்னும் சில நிமிடங்களில் சாகப் போகிறீர்கள்,”
கிரேக்க மேதை ஒரு புன் சிரிப்புடன் சொன்னார்.
“அதை அறியத் தான் துடித்துக் கொண்டிருக்கிறேன். சாவைப் பற்றி அறியத் தான் ஆவலாக இருக்கிறேன். வாழ்வைப் பற்றி எனக்குத் தெரியும். வாழ்வு அழகானது. வாழ்வின் கவலைகள், ஆசைகள், வலிகள் எல்லாம் நான் அறிவேன்.”
“வாழ்வு என்பது பெரிய இன்பம் தான். மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து வெளியிடுவதே இன்பம் தான். நான் வாழ்ந்து விட்டேன். நான் அன்பு செலுத்தியிருக்கிறேன். என்ன செய்ய வேண்டுமென்று நினைத்தேனோ அதை எல்லாம் செய்து விட்டேன். என்ன சொல்ல வேண்டுமென்று நினைத்தேனோ, அதை எல்லாம் சொல்லி விட்டேன்.
“இப்போது நான் சாவை ருசி பார்க்க ஆவலாக இருக்கிறேன். அதுவும் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக!
“இறந்த பின் என்ன ஆகும்? இரண்டு சாத்தியக் கூறுகள் தான் உள்ளன. ஒன்று, கீழை நாட்டு ஞானிகள் சொன்னதைப் போல எனது ஆன்மா வேறு வடிவத்தில் வாழலாம். அது எவ்வளவு சந்தோசமாக இருக்கும்? உடல் என்ற சிறையிலிருந்து விடு பட்டு உயிர் தன் போக்கில் பயணிப்பது எவ்வளவு சுகமானது?
“ஆம். இந்த உடல் ஒரு சிறை தான். இதற்கு என்று சில கட்டுப் பாடுகள் உள்ளன. அவை எல்லாம் அற்றுப் போனால், உடல் என்னும் விலங்கு அறுந்து விழுந்தால் எப்படி இருக்கும்? நினைக்கும் போதே சிலிர்க்கிறதே!
“இரண்டாவது சாத்தியக் கூறு, உடல் தான் இருக்கிறது ஆன்மா என்று ஒன்றும் இல்லை என்று மேற்கத்திய ஞானிகள் சொல்வது போல, நான் இறந்தவுடன் எல்லாம் முடிந்து போகலாம். அது கூட ஓர் இன்ப நிலை தான். இல்லாமல் இருக்கும் இணையற்ற இன்ப நிலை. இருப்பது என்றால் என்ன என்று எனக்குத் தெரியும்.
“இன்னும் சில நொடிகளில் இல்லாமல் இருப்பது என்றால் என்ன என்று நான் தெரிந்து கொள்ளப் போகிறேன். நானே இல்லாமல் போய் விட்ட பின் பிரச்சினை தான் என்ன? ஒன்றுமில்லை. நான் ஏன் கவலைப் பட வேண்டும்? கவலைப் படத் தான் நான் இருக்கப் போவதில்லையே. ஏன் இருக்கும் காலத்தை வீணாக்க வேண்டும்?”
தன்னைத் தானே விரும்பும் மனிதனால் தான் இப்படியெல்லாம் பேச முடியும். தனது சாவிற்கான பொறுப்பைக் கூட சாக்ரடீஸ் விரும்பி ஏற்றுக் கொண்டார். நீதிமன்றம் அவருக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
மக்களுக்கு அவர் மேல் ஒரு தவறான அபிப்பிராயம் இருந்தது. மிகச் சாதாரண அறிவுள்ள கிரேக்க மக்களால் அந்த மேதையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு தனி மனிதனின் அறிவு அவ்வளவு உயரத்திற்கு பறக்க முடியும் என்று அந்த முட்டாள்களால் நம்ப முடியவில்லை. ஆனால் என்ன செய்வது? அன்றைய தேதியில் முட்டாள்கள் தான் பெரும் பான்மையானராய் இருந்தார்கள். அந்த முட்டாள்கள் தான் அந்த மேதைக்கு மரண தண்டனை விதித்தனர்.
சாக்ரடீசின் ஒரு வாதத்திற்குக் கூட அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அவ்வளவு ஏன், சாக்ரடீசின் வாதத்தை அவர்களால் புரிந்து கொள்ளக் கூட முடியவில்லை. எங்கே பதில் சொல்ல? அவர்களின் வாதங்களை சாக்ரடீஸ் அழகாக தகர்த்து எறிந்தார்.
அன்று கிரேக்க நாட்டில் பெயரளவிலாவது ஜனநாயகம் இருந்தது. அதனால் தான் - ஓஷோ
நல்லதே நட
வாழ்க வளமுடன்
நன்றி அரு. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment