Thursday 25 January 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

''இல்லறம் என்கிற பேராற்றல்''
இரவெங்கும் பன்னீர்ப் பூக்களையும், முதிர்ந்த இலைகளையும் உதிர்க்கிற மரங்களின் கீழே காலையில் நடக்கும் போது ஒரு நேசமிகுந்த வயதான இணையைக் கடப்பேன். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே நடப்பார்கள்.
பெரும்பாலும் தங்கள் குடும்பத்தின் இளையவர்களைக் குறித்தோ, பேரன் பேத்திகளைப் பற்றியோ, மகிழ்வான கணங்களைக் குறித்தோ, துயரங்களைக் குறித்தோ ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள்.
இரண்டடி, மூன்றடி யாரேனும் முன்னே பின்னே நகர்ந்துவிட்டால் கூட நின்று பிறகு இணைந்தே நடப்பார்கள்! நேசம் பெருகி வழிகிற இல்லற வாழ்க்கை என்பது வெகு சிலருக்குத்தான் வாய்க்கிறது.
மனப் பிணக்குகளோடு ஒரே வீட்டில் பல ஆண்டுகளாக வாழும் எண்ணற்ற கணவன் மனைவியரைப் பார்த்திருக்கிறேன். அன்பும் நேசமும் இல்லாத இடங்களில் வாழும் மனிதர்கள் இறந்தவர்கள்! அவர்கள் புதைக்கப்படாமல் வீடுகளுக்குள் நகர்ந்து திரிகிறார்கள். அவ்வளவுதான் வேறுபாடு.
என் அப்பாவையும், அம்மாவையும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். சில நேரங்களில் வெகு "அரிதாக" கடுமையாகச் சண்டை போடுவார்கள்.
பெரும் மன உளைச்சளுக்கிடையில் எங்காவது வெளியே போய்விட்டு வருகிற போது, பார்த்தால்.... அப்பா, அம்மாவுக்கு வெங்காயம் உரித்துக் கொடுத்துக் கொண்டிருப்பார்!
அங்கே அரை மணி நேரத்துக்கு முன்னால் நிகழ்ந்த கலவரத்தின் சுவடுகளை நேசம் ஒரு பெரிய கடலலையின் தோரணையோடு அடித்துச் சென்று விடும்.
'உலகமே இரண்டாகிப் போய்விட்டதோ' என்று நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிற இடைவெளியில் அவர்கள் இருவரும் காதல் மொழி பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
காலப்போக்கில் அவர்கள் இருவரும் சண்டையிடுவது ஒரு நல்ல பொழுது போக்காக மட்டுமே எங்கள் (குழந்தைகள்) மூவருக்கும் ஆகிப் போனது.
ஒருமுறை அப்பாவுக்கு உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தோம். செவிலியர் ஒருவர் வந்து உடை மாற்ற முயன்ற போது நான் உதவுகிறேன் என்று சொன்னேன். அப்பா, ஒப்புக் கொள்ளவில்லை.
பிள்ளைகள் உட்பட செவிலியரையும் வெளியேற்றிவிட்டு அம்மாவை மட்டும்தான் அப்பா அனுமதித்தார்கள். கதவு தாழிடப்பட்டிருந்த அந்தக்கணத்தில் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இருக்கிற அந்த அளப்பரிய நேசத்தை நான் கண்டு கொண்டேன்.
சண்டைகளோ, இல்லை.... வாழ்க்கையின் வழக்கமான சிக்கல்களோ வந்தபோதெல்லாம் அம்மாவும், அப்பாவும் மூன்றாம் தரப்பை எப்போதும் அணுகியதே இல்லை. அதற்கான தேவையும் அவர்களுக்கு வந்ததில்லை என்று நினைக்கிறேன்.
இல்லறம் ஒரு ரகசிய வெளி, அந்த வெளிக்குள் நிகழ்கிற வாழ்க்கையின் அற்புதக் கணங்களை குழந்தைகள் உட்பட யாரும் அத்தனை எளிதாக அணுகி விட இயலாது.
வாழ்க்கை பேரண்ட வெளியில் கொட்டிக் கிடக்கும் இயக்க அறிவியல். சிலவற்றுக்குத் தான் இறப்பை சலனங்கள் இன்றி உணர்கிற, எதிர்கொள்கிற அறிவையும், நிறைவையும் இயற்கை வழங்கி இருக்கிறது.
இந்திய சமூகத்தில் பெண்களுக்குக் கிடைத்திருக்கிற பெருஞ்சாபம் என்பது சராசரியாக 25 வயது வரைக்கும் ஒரு வனத்தில் வேரூன்றித் தழைத்து வாழ்கிற விருட்சங்களை வேரோடு பிடுங்கி வேறிடங்களில் நடுவது,
இருப்பினும் நமது சமூகத்தில் பெண்கள் சொந்த நிலத்தில் இருந்து பிடுங்கி எறியப்படுகிற பெருவலியை சுமந்தபடி.... நடப்படுகிற நிலத்துக்காய் காலமெல்லாம் உழைக்கிறார்கள்.
வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்கிற இந்தக் குறுகிய இடைவெளியில் நாம் எத்தனை பேர் அவர்களின் மனங்களைப் புரிந்து கொண்டிருக்கிறோம்.... 
ஒருநாளில் மிகக் குறைந்த பட்சமாய் அவர்கள் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது என்னவோ திறந்த மனதுடனான உரையாடலையும், காதலுடனான ஒரு அளவற்ற புன்னகையையும் தான்.
அதையும் கூடக் கொடுக்க மனமில்லாத பரம ஏழைகளாய் இருந்து கொண்டு தான் உலகளக்கும் பொருளை நோக்கி ஓடி கொண்டே இருக்கிறோம்.
இன்று காலையில் அதே முதிய தம்பதியைக் கடந்த போது இந்த உரையாடல் என் காதில் விழுந்தது.
ஆண்: ஏண்டி, அவன் மனசுக்குப் புடிச்ச மாதிரி அவளுக்கு நடந்துக்க முடியாதா என்ன?? சும்மா எப்பப் பாரு சண்ட சண்டைன்னு………
பெண்: ஆமா, மனசுக்குப் புடிச்ச மாதிரி நடக்கணும்னா அவனோட க்லோனத்தான் ( Clone ) அவனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருக்கணும்!!!
ஆண்: உன்னையெல்லாம் பகவான் எப்படித்தான் சகிச்சிக்கிரானோ தெரியலடி…….
பெண்: இத்தன வருஷமா நான் உங்களையே சகிச்சுக்கலையா??
ஆண் அமைதியாய் வானத்தைப் பார்த்தபடி நடக்கத் துவங்குகிறார்....!
பழக்கமான நாய்களும், சில குருவிகளும் சிரித்தபடி நகரத் துவங்குகின்றன. நகரம் மெல்ல விழித்துக் கொண்டிருக்கிறது.
சில இறப்புகள், பிறப்புகள் என உலகம் இயங்கிக் கொண்டே இருக்கும் ஓசையில்.... ஒரு அற்புதமான இணையின் உரையாடல் யாருக்கும் தெரியாமல் கரைகிறது.
ஆனால் என்ன...?! அந்த உரையாடலும், அதில் தொக்கிக் கிடக்கிற கிண்டல் நிறைந்த கேள்வியும் இப்போது, இந்தக் கணத்தில் உலகம் முழுமைக்கும் சொந்தமானது!  
படித்ததில் பிடித்தது.
நன்றி கை.அறிவழகன்.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment