Thursday 20 January 2022

உணர்வாக உணருங்கள்.

 உணர்வாக உணருங்கள்.

'பொறுப்பு' மற்றும் 'கடமை' ஆகிய இரண்டுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டினை பெரும்பாலானோர் அறிவதில்லை!
''உண்மையில் பொறுப்பேற்பது என்றால்'' என்ன என்பதையும், ‘நான் பொறுப்பு’ என்ற உணர்வுடன் இருக்கும் போது உங்கள்
மனநிலை எப்படி இருக்கிறது என்ன என்பதையும் பாருங்கள்...
பொதுவாகவே, 'பொறுப்பு' என்றால், சுமைகளைச் சுமப்பது என்று அர்த்தமாக்கிக் கொள்பவர்கள் தான் அதிகம்.
கடமையைச் செய்வதாக நினைத்து எதைச் செய்தாலும், உங்களுக்குக் களைப்பு தான் மிச்சமாகும். .
பொறுப்பு என்பதைக் கடமை என்று தவறாக நினைப்பதால் தான் இப்படிச் சுமையாகத் தோன்றுகிறது.
ஒரு தொழிலாளி அட்டைப் பெட்டியை எடுத்து அதன் மீது லேபிள் ஒட்டினார். அடுத்தவருக்குத் தள்ளினார். அவர் அந்தப் பெட்டியில் ஒற்றைச் செருப்பைப் போட்டார்.
அவரை அடுத்திருந்தவர் அந்தப் பெட்டியை மூடி ஒட்டினார். அந்தப் பெட்டி விற்பனை பிரிவுக்கு செல்லும் வண்டியில் ஏற்றப்பட்டது.
“என்ன நடக்கிறது இங்கே? செருப்புகளை ஜோடி ஆகத்தானே தயாரிக்கிறோம்? ஏன் ஒற்றைச் செருப்பை மட்டும் பெட்டியில் போடுகிறீர்கள்? என்று முதலாளி பதறினார்.
“ஐயா, இங்கே எந்தத் தொழிலாளரும் வாங்கிய சம்பளத்துக்குத் தங்கள் கடமையைச் செய்யத் தவறுவதில்லை.
பிரச்சனை என்னவென்றால், இடது கால் செருப்பை எடுத்து பெட்டியில் போட வேண்டியவர் மட்டும் இன்றைக்கு லீவு” என்று மேலாளரிடமிருந்து பதில் வந்தது.
தங்கள் கடமையில் இருந்து தவறாத தொழிலாளர்கள் இருந்தாலும், அந்த முதலாளியின் வியாபாரம் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.
முழுமையாகப் பொறுப்பேற்காமல், கடமையைச் செய்வதாக மட்டுமே நினைத்துச் செயல்பட்டால், அது உங்கள் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவாது.
விரைவிலேயே சலிப்பும், வெறுப்பும், விரக்தியும் கொண்ட இயந்திரமாக மாறிப் போவீர்கள்.
யார் சொல்லியோ செய்யாமல், அதை நீங்களாகப் பொறுப்புடன் விரும்பிச் செய்தால் மட்டுமே இந்த வேதனை இருக்காது.
ஆம் நண்பர்களே
முதலில் பொறுப்பு என்பதைச் செயலாக நினைப்பதை விடுங்கள். பொறுப்பு என்பதை உணர்வாக கவனிக்கப் பழகுங்கள்.
எதுவாக இருந்தாலும் ஏதோ ஒன்றுக்கு நீங்கள் உணர்வுபூர்வமாக, முழுமையாகப் பொறுப்பு ஏற்கும் போது, “இது என்னுடையது” என்ற உணர்வு ஏற்படுகிறது.
எப்போது அதை உங்களுடையதாகவே உணர்ந்து விடுகிறீர்களோ, அது எப்போதுமே சுமையாக இருப்பதில்லை.

No comments:

Post a Comment