Thursday 13 January 2022

வரம்பில்லா வலிமை.

 வரம்பில்லா வலிமை.

அற்புதமான பல நல்ல வாய்ப்புகள் சிலருக்குக் கைநழுவிப் போவதற்கு முதன்மையான காரணம், எதிர்மறையான சிந்தனைகளும், சொற்களும்தான். நேர்மறைச் சிந்தனைகள் உள்ளவர்கள் நேர்மறைச் சொற்களையே வெளிப்படுத்துவர். இந்த நேர்மறைச் சிந்தனையை "ஆக்கச் சிந்தனை' அல்லது "ஆக்கப்பூர்வமான சிந்தனை' எனக் கூறலாம். இன்றைய இளைஞர்களுக்கு மிக மிக அவசியமானது ஆக்கப்பூர்வமான சிந்தனையே!
வீட்டில், பணி இடங்களில், பொது இடங்களில் என நாம் நேர்மறையான சொற்களைச் சொல்லி, அதன் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளும், உடனடியாக எதிர்மறைச் சொற்களைச் சொல்லி அதனால் கைநழுவிப் போகும் வாய்ப்புகளும் தான் அதிகம்.
"நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனமானவன் என்று நினைத்தால் பலவீனமானவனாகவே ஆகி விடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகி விடுவாய்' என்று கூறும் சுவாமி விவேகானந்தர், "இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே. என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில், நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். நீ எதையும், எல்லாவற்றையும் சாதிக்கக் கூடிய சர்வ வல்லமை படைத்தவன்' என்று ஆக்கச் சிந்தனையையே இளைஞர்களுக்கு வழங்கினார். இன்றைய இளைஞர்கள் இவரைப் பின் பற்றினாலே போதும். எண்ணம், சொல், செயல் அனைத்திலும் தானாகவே ஆக்கச் சிந்தனைகள் வந்து குடி கொண்டுவிடும்.
எதிலும் திருப்தி அடையாத எதிர்மறைச் சிந்தனை உள்ள வியாபாரி ஒருவர் வருத்தத்தோடு போய்க் கொண்டிருக்கிறார். அதைப் பார்க்கும் நேர்மறைச் சிந்தனையாளர் ஒருவர், "ஏன் இவ்வளவு வருத்தமாகப் போகிறீர்கள்' எனக் கேட்க, அதற்கு அவர், "இன்று வியாபாரம் சரியாக ஆகவில்லை.. மீதம் 50 கொய்யாப்பழங்களுடன் வீடு திரும்புகிறேன்' என்கிறார். உடனே நேர்மறைச் சிந்தனையாளர், "எவ்வளவு கொண்டு வந்தீர்கள்?' எனக் கேட்க, எதிர்மறைச் சிந்தனையாளர், "500 கொண்டு வந்தேன்' என்கிறார். "பரவாயில்லையே... நல்ல வியாபாரம் தான்! ஐநூறு பழங்களில் 450 விற்று விட்டதே ... இது எவ்வளவு பெரிய விஷயம்! 50 தானே மீதமிருக்கிறது' என்று எதிர்மறைச் சிந்தனையாளரை உற்சாகப்படுத்த, அவரும் திருப்தியோடும் மகிழ்ச்சியோடும் வீடு திரும்புகிறார். இந்தத் திருப்தி தான் ஆக்கப்பூர்வமான சிந்தனையை வளர்க்கும்.
அதிகம் பேசும் தன் மனைவியைப் பார்த்து, "வாயை மூடு' என்று கூறுபவன் எதிர்மறையாளன். ஆனால், "நீ அமைதியாக இருக்கும் போது எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா?' என்று கூறுபவன் புத்திசாலி, நேர்மறையாளன். ஆக்கப்பூர்வமான சொற்களைக் கையாள்வதும் பேசுவதும் கூட ஒரு கலை தான். இந்தப் பேச்சுக் கலையில் தேர்ந்தவர்கள் தான் அனைத்திலும் தேர்ச்சி பெறுகிறார்கள்.

No comments:

Post a Comment