Wednesday 19 January 2022

சோம்பேறிகள் எப்போதும் சுகபோகமாய்ப் பேசுவார்கள்.

 சோம்பேறிகள் எப்போதும் சுகபோகமாய்ப் பேசுவார்கள்.

முயற்சியின்றி வாழ்க்கையைத் தொடங்குகிறவன் ஓட்டைப் படகில் பயணத்தை தொடங்குகின்றான். 'என் விதி அப்படி' என்று சொல்கிறவன் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான விதிகளை அறியாதவன். என்னால் முடியாது என திண்ணையில் படுத்துத் துாங்குகிறவனுக்கு வாழ்க்கை என்பதே துக்கமாகத்தான் முடியும். மனித ஆற்றலை செயல்படுத்த போடப்படும் 'சுவிட்ச்' தான் 'முயற்சி'. ஆற்றல் மனிதனுக்கு வெளியில் இல்லை. அவனுக்கு உள்ளே தான் உள்ளது. தனக்குள் இருக்கும் அந்த ஆற்றலை அவனே தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.சோம்பேறிகள் எப்போதும் சுகபோகமாய் பேசுவார்கள். எதற்கும் சுலபத்தில் விளக்கம் சொல்லுவார்கள். எல்லாமே அவர்களுக்குத் தெரியும், ஒன்றைத் தவிர; அது தான் முயற்சி.
ஆங்கில எழுத்தாளர் தாமஸ் கார்லைன், பிரஞ்சுப் புரட்சி பற்றி நுால் எழுதி, கையெழுத்துப் பிரதியை அரசியல் சிந்தனையாளரும் எழுத்தாளருமான ஜான் ஸ்வேர்ட்மில்லிடம் படிக்க கொடுத்தார். சில தினங்கள் கழித்து அதை திரும்பப்பெற சென்ற போது, மில் சொன்ன பதில் அவரை பிரமை கொள்ள வைத்தது. மில்லின் வேலைக்காரி அதை ஏதோ பழைய காகிதம் என அடுப்பெரித்து விட்டாளாம். இரவு, பகல் பாராமல் அவர் உழைத்த உழைப்பு, எரிந்ததை நினைத்து சோர்ந்து விடவில்லை. அவர் லட்சியம் பிரஞ்சு புரட்சி பற்றி நுால் எழுதுவது. மறுபடியும் புத்தகத்தை எழுதத் துவங்கி விட்டார். இலக்கியத் தரம் வாய்ந்ததாக கருதப்படும் அந்த புத்தகம் அவர் இரண்டாவதாக எழுதிய புத்தகம்.
ஆங்கிலக் கவிஞர் வேட்ஸ்வொர்த் ஒரு பாடல் எழுதினார். அந்த பாடலில் குயிலின் சிறப்பியல்பை விளக்க, நல்ல அடைமொழி தேடினார். அவருக்கு கிடைக்கவில்லை. பல ஆண்டுகள் ஆயின. ஒரு அடைமொழி கிடைக்காமல் அந்த பாடல் முழுமை பெறவில்லை. பாதியிலே நின்றுவிட்டது. பின்னர் 43ம் ஆண்டில் அவருக்கு அடைமொழி கிடைத்தது. பாடலை எழுதி முடித்தார். 43 ஆண்டுகள் முயன்று வெற்றி.
பூமியை முட்டிக் கொண்டு போட்ட விதை முளைக்க காரணம் விதையின் முயற்சி. எழுதிய எழுத்தில் பிழை இருக்கலாம். எழுதா எழுத்தில் ஏது பிழை? முயற்சியின்மை ஓர் எழுதா எழுத்து போலத்தான்.
Ems Abimanyu and Ambikapathi Vasan

No comments:

Post a Comment