Wednesday 12 January 2022

மனநிறைவு இருக்கட்டும்.

 மனநிறைவு இருக்கட்டும்.

வாழ்க்கை சலிப்பூட்டுகிறது என்றால், அதன் உட்கூறுகளான படிப்பு, தொழில், பொழுதுபோக்கு, வேடிக்கை பார்த்தல், சும்மா இருத்தல் என இவற்றில் ஏதோ ஒன்று உங்களின் உற்சாகத்தை உறிஞ்சுகிறது என்று தான் பொருள்.
ஏதாவது ஒரு கட்டத்தில் சலிப்பு வரத்தான் செய்யும். ஏனென்றால் நீங்கள் அந்த வேலையை நேசித்து விட்டீர்கள்!
எங்கு நேசம் இருக்கிறதோ, அங்கே சலிப்பு ஏற்பட்டே தீரும்.
வெளிஉலகத் தாக்கங்களுக்கு ஏற்ப மனநிலையில் சலிப்பு ஏற்படுவது இயற்கையானது.
ஆனால், “வாழ்க்கை போரடிக்கத் தான் செய்யும்” என்று அதிக நேரம் அதில் ஆழ்ந்து விடாமல், சலிப்பிலிருந்து விரைவில் விடுபடுகிறவர், எப்போதும் ஒரு அடி முன்னால் செல்கிறார்.
இந்தச் சலிப்பை வெற்றி கொள்ள ....
ஒன்று, அனுபவப்பட்ட விளையாட்டு வீரர்களும், புகழ் பெற்ற சினிமாக்காரர்களும் சொல்வார்களே, அது தான்.
“முதன்முதலாக நுழையும் போது எப்படி நுழைந்தேனோ, அதே மனநிலையுடன் ஒவ்வொரு முறையும் காலடி எடுத்து வைப்பேன்! இன்று தான் முதல் நாள் என்று நினைத்துக் கொள்வேன்...”
இங்கே தொழில் மீதான விருப்பத்தை விட, அவர்களை அறியாமல் அவர்கள் தவிர்க்க விரும்புவது, அல்லது வெற்றி கொள்ள விரும்புவது, ஒரே மாதிரியான வாழ்க்கை தரும் சலிப்பைத் தான்!
இரண்டாவது
பொழுதுபோக்குகளில் விருப்பத்துடன் ஈடுபடலாம். முதியவர்களையே விழாவில் ஈடுபட வைத்து போரடிக்காமல் பார்த்துக் கொண்ட சமூகம் அல்லவா நம்முடையது!
செக்குமாடு மாதிரி ஒரே வேலையை செய்தும், ஒரே மாதிரியான சிந்தனையில் உழன்றும், மன அழுத்தத்தில் சிக்கி மனபலம் இல்லாதவர்களாக காட்சி அளிப்பதோடு அவர்களுக்கு வாழ்க்கையிலும் சலிப்பு ஏற்படுகின்றது..
மகிழ்ச்சியாக இருக்கும் எல்லோரிடமும் சலிப்பு என்பதே இருக்காது. உயிரோட்டமான புன்னகை இருந்து கொண்டிருக்கும்.
மகிழ்ச்சி வேண்டுமானால், மனநிறைவு இருக்க வேண்டும்.
மனநிறைவு பெற வேண்டுமானால்,
வாழ்க்கையில் சலிப்பு என்பதே இருக்கக் கூடாது.
மகிழ்ச்சியாக இருப்பவர்களால் தான் குடும்பத்தையே மகிழ்ச்சியாக வைத்து இருக்க முடியும்.
ஆம் நண்பர்களே
"நான் செக்குமாட்டு வாழ்க்கை வாழப் போவதில்லை"! என்று சொல்லிக் கொள்ளுங்கள்!
'இப்படியே இருக்கப் போவதில்லை' என்று தீர்மானியுங்கள்.
"என்னால் எதையும் சமாளிக்க முடியும்" என்று நம்புங்கள், சமாளியுங்கள், பயப்படாதீர்கள், இறங்குங்கள்.
சவால்களை எதிர்கொள்ளத் தயங்காதீர்கள்.
செக்குமாட்டு வாழ்க்கையிலிருந்து சற்றே விலகி, அடைந்து இருக்கும் புதிய உற்சாகம் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாது.. ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும்.

No comments:

Post a Comment