Wednesday 5 January 2022

ஆணவம் அகங்காரம் .

 ஆணவம் அகங்காரம் .

தேனில் மூழ்கி, இறக்கும் வண்டைப் போல், ஆணவம் கொண்ட மனம், 'தான்' என்கிற அகங்கார மாயைக்குள் அகப்பட்டுத், தன்னுடைய அழிவைத் தேடிக் கொள்கிறது.
மேலும், ஆசை வயப்பட்ட மனமானது, பற்றுதலில் சிக்குண்டு, ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் போது, வன்மத்தையும், வெறுப்பையும் பிரதிபலிக்கிறது.
கிருபானந்த வாரியார் அவர்கள் ஒரு சொற்பொழிவில் சொன்னது:
ஒரு நண்பருடன் அவர் தோட்டத்துப் பாதையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, வழியில் தென்பட்ட நிலத்தில் பயிர்கள் நன்றாக விளைந்து இருந்தது.
அது, அவருடைய நிலம் என்பதால், 'பயிர்கள் நன்றாக செழித்து வளர்ந்திருக்கிறதே...' என்றேன்.
உடனே அவர்,
'நாசமாப் போக, மூணு மாசத்துக்குப் முன்னால தான் இந்த நிலத்த வித்தேன்; இப்ப இது விளைஞ்சா என்ன?, விளையாட்டி என்ன...?' என்றார் கடுப்புடன்.
அந்த நிலத்தை அவர் நல்ல விலைக்குத் தான் விற்று இருக்கிறார்;
இருந்தாலும், நிலத்து மேல் இருந்த பற்று, கோபமாக வெளிப்பட்டு விட்டது, என்று கூறினார் வாரியார்.
அதே போன்று தான் அகங்காரம்! அறியாமையின் இருப்பிடமான இந்த அகங்காரமே மனிதனின் அழிவிற்குக் காரணமாக இருக்கிறது.
ஆம் நண்பர்களே
"நானே பெரியவன்''. எனக்கு எல்லாம் தெரியும். என் பேச்சை எல்லோரும் கேட்க வேண்டும்.
"என்னை வெல்ல எவருமில்லை''. எல்லோரும் எனக்குக் கட்டுப்பட்டவர்கள்.
இது போன்ற நான் என்ற அகந்தை அகற்றுங்கள்.
"நான்'' என்ற ஆணவத்தை அகற்றினால் தான் உள்ளத்தில் மனிதாபிமானம் பிறக்கும்; மனித நேயம் சுரக்கும்.

No comments:

Post a Comment