Saturday 24 July 2021

தெளிவான செயல்கள் தான் வெற்றி பெறும்.

 தெளிவான செயல்கள் தான்

வெற்றி பெறும்.
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்”
என்று வள்ளுவர் எண்ணங்களின் வலிமை குறித்து எடுத்துரைக்கிறார்.
வாழ்வில் எது வேண்டும் என்று நினைத்தாலும், அது தொழிலோ, வீடோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும், முதலில் உங்களுக்குத் தோன்றுவது 'அது எனக்கு வேண்டும்' என்ற எண்ணம்தான். இந்த எண்ணம் தோன்றியவுடன், சக்தியின் ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தால் அந்த எண்ணத்திற்கு வலிமை சேர்த்து, அதை நிஜமாக்கிக்கொள்ள மக்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தங்கள் சிந்தனையை ஒன்றுகுவித்து, தாங்கள் விரும்பியதை உருவாக்கிக்கொள்ளத் தேவையான செயல்களில் ஈடுபட்டு, அந்த எண்ணத்தை நிஜமாக்கிக் கொள்ள முயற்சி செய்வார்கள். அம்முயற்சியில் தேவையான தீவிரம் இருந்துவிட்டால், அந்த எண்ணம் ஈடேறிடும்.
கரும்பலகையில் எழுத வேண்டும் என்றால், முதலில் அதை சுத்தமாக துடைக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் எழுதுவது அதில் தெளிவாக பதியும். கரும்பலகையில் ஏற்கெனவே ஆயிரமாயிரம் விஷயங்கள் எழுதப் பட்டிருந்தால், அதன் மீது நீங்கள் என்ன எழுதினாலும் அது யாருக்குமே புரியாது, கொஞ்சம் நேரம் சென்றால், உங்களுக்குமே அதில் என்ன எழுதினீர்கள் என்று தெரியாது. அதனால் அந்த இடத்தை முதலில் சுத்தம் செய்யுங்கள், அதன் பிறகு ஒரு எண்ணத்தை விழிப்புணர்வோடு உருவாக்குங்கள்.
தேவையற்ற குப்பைகளை அகற்றிவிட்டு, சுத்தமாய் இருக்கும் மனதில் ஒரு எண்ணத்தை உருவாக்கினால், அந்த எண்ணமே ஒரு அதிர்வாக, ஒரு சக்தியாக செயல்படும். சக்தியின் துணையின்றி எந்த ஒரு எண்ணமும் உருவாக முடியாது. ஆனால் தெளிவான முயற்சியின் பலனாய் இல்லாமல், தற்செயலாய் உருவாகும் எண்ணத்திற்கு தன்னை ஈடேற்றிக்கொள்ள தேவையான சக்தி இருக்காது. எண்ணங்களை மிகத் தீவிரமான நிலையில் உருவாக்கினால், அந்த எண்ணங்கள் மிக வலியதாக இருக்கும். ஏன், தீவிரமாய் உருவாக்கப்படும் ஒரு எண்ணத்தால் ஒரு மனிதனின் உயிரைக்கூட பறித்திட முடியும். அந்த அளவிற்கு எண்ணங்கள் சக்தி வாய்ந்தவை.
எனவே பற்பல திசைகளில் அலைபாயாமல், ஒருநிலையில், ஒரே குறிக்கோளுடன், விழிப்புணர்வோடு ஒரு எண்ணத்தை உருவாக்கினால், அது இவ்வுலகில் தன்னை நிறைவேற்றிக்கொள்ளும். அதனால் எண்ணங்களை தெளிவோடு உருவாக்கி, அத்தெளிவான எண்ணத்திற்கு இருக்கும் இயற்சக்தியில் அது தானாய் நிஜமாகிட வழி செய்யுங்கள்

No comments:

Post a Comment