Thursday 29 July 2021

உண்மை அரங்கேறியது.

 உண்மை அரங்கேறியது.

பிறர் தன்னைப் புகழ வேண்டுமென்ற எதிர்பார்ப்பு தவறே அல்ல. ஆனால் வலுக்கட்டாயமாகப் புகழ வைப்பது ஓர் ஆக்கிரமிப்பு. புகழ் இருப்பதுபோலத் தோற்றம் ஏற்படுத்துவது அக்கிரமம். அது உண்மையான வெற்றியாகாது. இன்று வெற்றி பெறாமலேயே தங்களை வெற்றியாளர்களாகக் காட்டிக் கொள்ளப் பலர் விரும்புகிறார்கள்.
பலர் கூச்சமில்லாமல் பாராட்டுக்கும் புகழுக்கும் ஏற்பாடு செய்து கொள்கிறார்கள். மாலைகள் சூட மலர் பறித்துத் தருகிறார்கள். சுவரொட்டி ஒட்டக் கூழ் காய்ச்சுகிறார்கள். ஒரு விஷயம். புகழுக்கான தகுதி தனக்கு உள்ளது எனப் புரிந்து வைத்திருப்பது தலைமைப்பண்பு. ஆனால் புகழைப் பிறரிடமிருந்து ஜப்தி செய்வது அநாவசியம்.
விளக்குகிறேன்.
பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தமது உரைகளை உதவியாளருக்கு டிக்டேட் செய்கையில் சில இடங்களில் "கைத் தட்டல்' என்று குறிக்கச் சொல்லுவார். தன் வெற்றியைப் பற்றிய தீர்க்கமான தீர்மானம் அது. கைத்தட்டல் என்று குறித்துக் கொள்ளும்போது ஆரம்பத்தில் அவரது உதவியாளர் திகைப்படைந்தார். ஆனால் சர்ச்சிலின் கணிப்பு ஒருபோதும் பொய்யாவதில்லை என்பதைக் கண்டு பின்னர் அவர் வியப்படைந்தார். புகழத் தக்கவன் என்ற இந்தக் கணிப்பு தவறில்லை. ஆனால் கைத்தட்ட வேண்டிய இடத்தில் கைத்தட்ட ஆள் செட்அப் செய்திருந்தால் அசிங்கம்...அநாகரீகம். அப்படி ஜெயிக்காதீர்கள்.
தகுதி இருந்தும் செயற்கைப் புகழ் தேடுவது தவறு. தகுதியே இல்லாமல் வெற்றியாளனைப் போல் காட்டிக் கொள்வது தவறல்ல. போக்கிரித்தனம். அது ஆபத்தான அணுகுமுறையும் கூட.
புதுப் பணக்காரர்கள் நாலு காசுகளை வீசி எறிந்தால் புகழ்ந்து தள்ளத் தமிழ்ப்பேச்சாளர்கள் சிலர் தலையைச் சொறிந்துகொண்டு முன் வருகிறார்கள். இது கறுப்புப் புகழ். கள்ளத் தொடர்பு. கண்டிக்கத் தக்கது.
மீண்டும் ஒன்றைத் தெளிவுபடுத்துகிறேன். பாராட்டுக்கும் புகழுக்கும் தான் தகுதி உடையவன் என்ற தெளிவு, உங்களை உயர்த்தும். ஆனால் அதற்கான ஏற்பாடு உங்களைத் தாழ்த்தும். புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் மார்க் ட்வெயின் வாழ்க்கையில் அப்படி ஒரு சுவையான நிகழ்ச்சி.
அவருக்குப் பிரெஞ்சு தெரியாது. அந்தக் காலத்தில் பிரெஞ்சு என்பது ஒவ்வொரு ஆங்கிலக் கலைஞனுக்கும் சின்ன வீடு மாதிரி.
மார்க் ட்வெயினின் எழுத்துகளைப் பாராட்டி பாரீசில் ஒரு மிகப்பெரிய விழா நடந்தது. விழா நடந்த அதே பல்கலைக் கழகத்தில் தான் மார்க் ட்வெயினின் மகன் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்குப் பிரெஞ்சு மொழி நன்கு தெரியும்.
மகனை அழைத்து ""எனக்குப் பிரெஞ்சு தெரியாது. பிரான்ஸ் மக்கள் மொழிப்பற்று மிக்கவர்கள். எனவே பேசுகிற எல்லோரும் பிரெஞ்சில்தான் பேசுவார்கள். நான் ஒரு முட்டாளைப் போல அங்கே இருக்க வேண்டியிருக்கும். ஆனால் எனக்குப் பிரெஞ்சு தெரியாது என்பது அவர்களுக்குத் தெரியக்கூடாது. எனவே நீ என் பக்கத்திலேயே இரு. எனக்குச் சைகை காட்டு. நீ சிரித்தால் நானும் சிரிப்பேன். முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டால் நானும் அப்படியே. சமாளித்துவிடலாம்.''என்றார் மார்க் ட்வெயின்.
ஆனால் விழா நடந்தபோது தர்மசங்கடம் ஒன்று நேர்ந்துவிட்டது. விழாவில் பேசியவர் மார்க் ட்வெயினை ஓஹோ என்று புகழ்ந்தபோது சபையே கைத் தட்டியது. மகனும் கைத்தட்டினான். அவனைப் பார்த்த மார்க் ட்வெயின் தன்னைப் புகழுகிறார்கள் என்று தெரியாமலேயே கை தட்டினார். சபை இதைப் பார்த்து சிரித்தது. இந்தச் சங்கடம் அடிக்கடி அரங்கேறியது. மகன் நெளிய ஆரம்பித்தான். பலர் இந்தக் கூத்தைப் பார்த்துச் சிரிக்கும்போது மகனாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. மகன் சிரிக்கும் போதெல்லாம் ஒப்பந்தப்படியே மார்க் ட்வெயினும் சிரித்தார். மக்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். மகனுக்கு அவமானத்தால் வியர்த்துக் கொட்டியது.
அறைக்குள் திரும்பியதும் தந்தையிடம் கோபமாக ""என்ன இப்படிச் செய்துவிட்டீர்கள்? உங்களை "ஆஹா, ஓஹோ' என்று புகழும்போது நான் கைத்தட்டாமல் இருக்க முடியுமா? நீங்கள் கைத் தட்டினால் அசிங்கம் இல்லையா? உங்களைப் பெரிய மகான் என்று ஒருவர் பாராட்டினார். நீங்கள் கையை உயர்த்திப் பிரமாதமாகக் கைத்தட்டுகிறீர்கள். என் சக மாணவர்கள் என்னை எப்படிக் கேலியாகப் பார்த்தார்கள் தெரியுமா? என்று சீறினான் மகன். அமைதியாக மார்க் ட்வெயின் சொன்னார். ""வருத்தப்படாதே...என் வாழ்க்கையில் இப்போதுதான் முதல் முதலாக நான் உண்மையாக நடந்திருக்கிறேன். நான் செய்ய விரும்பியதை இன்றுதான் செய்திருக்கிறேன். மேடைகளில் என்னைப் புகழும்போது பிறர் கைத் தட்டுகையில் நானும் கைத்தட்ட விரும்பியதுண்டு. ஆனால் மொழி புரிந்ததால் தட்டியதே இல்லை. முதல் முதலாக மொழி புரியாததால் தவறாக ஓர் உண்மை அரங்கேறிவிட்டது'' என்றார்.
ஓர் முக்கியமான உண்மை -தான் புகழத்தக்கவன் என்கிற தீர்மானம் பிறர் புகழும்போது ஏற்படவில்லை. எழுதும்போதே தனக்கு ஏற்பட்டது என்று புகழின் நுட்பமான ரகசியத்தை மார்க்ட்வெயின் புரியவைத்தார்.
அண்மையில் ஒரு கொடிய நிகழ்ச்சி. அண்மையில் என்னிடம் ஒருவர் தமது புத்தகத்தைப் பாராட்டி முன்னுரை தரும்படிக் கேட்டுக் கொண்டார். நான் விரும்பிய புத்தகங்களைப் படிக்கவே எனக்கு நேரம் கிடைக்காதபோது இதைப் படிக்கும் சுமை என் மீது திணிக்கப்பட்டது. எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு நேரம் இல்லை என மறுத்தேன். அவரோ ""படிக்கவே வேண்டாம்...சும்மா பாராட்டி ஒரு முன்னுரை கொடுங்களேன்'' என்றார். அநியாயமில்லாயா இது.
நாதஸ்வர மேதை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களைப் பற்றி ஒரு செய்தி உண்டு. அவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்தபோது அவரை ஒரு நிருபர் பேட்டி கண்டார். ""நீங்கள் பெற்ற பாராட்டுகளிலேயே உயர்வானது இதுதானே'' என்றார். கொஞ்சம் யோசித்துவிட்டு ராஜரத்தினம் பிள்ளை சொன்னாராம். ""ஒரு கல்யாணத்திலே நான் நாகசுரம் வாசித்தபோது நரிக்குறவர் ஒருவர் வெளிச்சத்துக்கு கியாஸ் லைட் தாங்கிக் கொண்டு வந்தார். தோடி ராகம் வாசிக்கும்போது நான் ஒரு பிருகா அடிச்சேன். சந்தோஷத்தில் அந்த மனுஷர் கியாஸ்லைட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிச்சு "ஆஹா' அப்படீன்னார். அதுதான் எனக்குக் கிடைச்ச பாராட்டுகளிலேயே உசத்தி'' என்றார். ""இந்த ஜனாதிபதி விருது'' என்று நிருபர் இழுத்தவுடன்...""ஜனாதிபதி என்ன என் வாசிப்பைக் கேட்டுட்டா கொடுத்தார். எவனோ கொடுக்கச் சொன்னான்...எடுத்துக் கொடுத்தார். அவ்வளவுதான்'' என்று ஒரு போடு போட்டார்.
நிஜமான புகழ்...வெற்றியின் வேர். பொய்யான புகழ்...
தோல்வியின் தாய்.
புரிந்தவருக்கு வெற்றி வசப்படும்.

No comments:

Post a Comment