Friday 16 July 2021

இது பிஜேபி இல் மட்டுமே சாத்தியம்..

 இது பிஜேபி இல் மட்டுமே சாத்தியம்..

நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கோனூர் எனும் மிகச் சிறிய கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில், மிக எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த எல்.முருகன் அவர்கள் தமிழகத்திலிருந்து ஒரே மத்திய அமைச்சராகப் பதவியேற்று இன்று சென்னை திரும்பியுள்ளார்.
அவரின் பெற்றோர் சொந்த கிராமத்தில், பூர்வீக வீட்டில் வசிக்கிறார்கள்..
அவர்கள் இன்றும் விவசாய வேலைகளுக்குக் கூலியாட்களாகத் தாய், தந்தை இருவருமே செல்கிறார்கள்..
மத்திய அமைச்சர் எல்.முருகனின் தந்தை லோகநாதன், மண்வெட்டியை சைக்கிள் கேரியரில் மாட்டிக்கொண்டு வயல் வேலைக்கு தினம் கிளம்பிவிடுகிறார்..
அவர் மனைவி வருதம்மாளும் வயல் வேலைக்குச் செல்கிறார்..
கோனூரில் அருந்ததியர் தெருவில் இருக்கிறது, அவர்களது வீடு. ஹாலோபிளாக் கற்களைக் கொண்டு எழுப்பப்பட்ட சுவர்களின் மீது ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளால் கூரை வேய்ந்திருக்கிறார்கள்..
மகன் அடைந்திருக்கும் உயரத்தின் ‘கனம்’கூடத் தெரியாமல், வெள்ளந்தியாகப் பேசிச் சிரிக்கிறார்கள் இருவரும். வயலில் வேலை செய்துகொண்டிருந்த லோகநாதனிடம் பேசியதில்,
“எனக்கு ரெண்டு பசங்க. மூத்த பையன்தான், எல்.முருகன். இரண்டாவது பையன் ராமசாமி. அவனுக்குக் கல்யாணம் ஆகி மூணு குழந்தைங்க இருக்காங்க..
2016-ம் வருஷம் அவனுக்கு உடம்புக்கு முடியாமப் போய் இறந்துட்டான்..
மருமகள் சாந்தியும், மூணு பேரப்பிள்ளைகளும் இங்கதான் இருக்காங்க..
எங்களுக்குச் சொந்தமா கால் காணி விவசாய நிலம்கூட இல்லை.
நான் ஒண்ணாம் வகுப்புதான் படிச்சேன்..
13 வயசிலேயே விவசாய வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டேன்..
வருதம்மாளோடு கல்யாணம் ஆகி, ரெண்டு பசங்களும் பொறந்தாங்க. முருகன், சின்ன வயசிலேர்ந்து நல்லா படிப்பார். நானும், என் பொண்டாட்டியும் வேலைக்குப் போய் கிடைக்குற சொற்பக் காசுல குடும்பத்தை கஷ்டப்பட்டு நடத்துவோம்..
அதைப் பார்த்துட்டு, பசங்களோடு சேர்ந்துகிட்டு அவரும் சமயத்தில் கிடைக்கிற வேலைக்குப் போவார். ஆனாலும் படிப்புல முழு கவனமா இருந்தார்..
அஞ்சாவது வரை கோனூர்ல உள்ள ஆரம்பப்பள்ளியில்தான் படிச்சார்..
பொறவு, கோனூர்லேயே இருக்கும் உயர்நிலைப் பள்ளியில் படிச்சார். பதினோராம் வகுப்பையும், பன்னிரண்டாம் வகுப்பையும் பரமத்தி பள்ளியில படிச்சார்..
பிறகு, ‘நான் வக்கீலுக்குப் படிக்க சென்னை போறேம்பா’னார். ‘எங்களால் முடிஞ்ச பண உதவியைப் பண்றோம். நீ விரும்புறதைப் படிப்பா’ன்னு சொன்னோம். கஷ்டத்தை உணர்ந்து நல்லா படிச்சார். படிச்சு முடிச்சதும் அங்கேயே தங்கி, வக்கீலா வேலை செஞ்சார்..
அவருக்குக் கலையரசியைப் பார்த்துப் பேசி, திருமணம் பண்ணி வெச்சோம். அவங்க சென்னையில் தங்கினாங்க. அதன்பிறகு எங்ககிட்ட, ‘நீங்க வயல் வேலைக்கெல்லாம் போக வேண்டாம்..
எங்களோடு வந்து சென்னையில் இருங்க’ன்னு அடிக்கடி சொல்வார். ஆறு மாசத்துக்கு ஒரு தடவை போய் நாலு நாள் அவரோடு தங்கிட்டு வருவோம்..
ஆனா, அந்த நாலு நாளே அங்க எங்களால இருக்க முடியாது. வாய்க்கா வரப்புன்னு சுத்தின இந்த உடம்பை, நாலு சுவத்துக்குள்ள சும்மா சாய்க்க முடியாது..
ஊருக்கு பஸ் ஏறிடுவோம். ஏதோ, ஆணையத்துல பதவி, கட்சியில் தலைவர் பதவியெல்லாம் கொடுத்தாங்க. அவரோட உழைப்புக்கு பல உயரத்துக்குப் போவார்னு தெரியும். இப்போ, ‘எனக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்திருக்காங்க’னு அவரு போன் பண்ணிச் சொன்னப்ப, அது என்ன பதவின்னுகூட எங்களுக்குத் தெரியலை. ஆனா, அவர் மகிழ்ச்சியா சொன்னதும், ஏதோ பெரிய பதவின்னு மட்டும் உணர்ந்தோம். அதனால, எங்களுக்குப் பூரிப்பா இருந்துச்சு..
கட்சித் தலைவரானதுக்குப் பொறவு, எங்களை வீட்டுக்கு வந்து பார்த்துட்டு, ‘பத்திரமா இருங்க’ன்னு சொன்னார். அருகில் இருக்கும் வீட்டுப் பிள்ளைகளை அழைத்து, ‘நல்லா படிங்க. அப்பதான் ஒரு வேலைக்குப் போக முடியும்’னு அறிவுரை பண்ணினார். கேட்காமலேயே தேவைப்படுற உதவிகளைப் பண்ணுவார்.
ஆனா அவருக்குத் தொந்தரவு தர எனக்கு விருப்பமில்லை. அவரே அரசுக் குடியிருப்பில்தான் இன்னும் இருக்கார். அவர் நல்லா இருக்கணும்னுதான் நாங்க பாடுபட்டோம். எங்க கண்ணுக்கு முன்னாடி அவர் நல்ல நிலைமைக்கு வந்துக்கிட்டு இருக்கார். அதைப் பார்க்க கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கு. பெத்தவங்களுக்கு இதைவிட வேறென்ன பெருமை வேண்டும்?” என்றவரிடம், “மகன் மத்திய இணை அமைச்சர். நீங்க இன்னமும் கூலி வேலை பார்க்க போகலாமா..?
"முருகனும் சரி, நாங்களும் சரி, உழைப்பை மட்டும் நம்புறோம். அவருக்குப் புடிச்ச கட்சியில் சேர்ந்து, தன்னோட உழைப்பால, திறமையால இந்த உயரத்துக்கு வந்திருக்கார். கை, கால் நல்லா இருக்குற வரைக்கும் நான் உழைக்க நினைக்கிறேன். மகன் அமைச்சரானதனால, என்னோட உழைக்கும் குணத்தை மாத்திக்க முடியுமா?” என்கிறார் லோகநாதன்.
எல்.முருகனின் தாய் வருதம்மாள், “சின்ன வயசுலேயே கஷ்டத்தோடு வளர்ந்ததால, வாழ்க்கையில் நல்லா வரணும்னு கடுமையா உழைச்சார். இப்போ, கட்சியில இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார். அவரு சின்ன வயசிலேயும் யார்கிட்டயும் கெட்ட பேரு வாங்குனதில்லை. இப்போ அரசியலிலும் அப்படியே இருக்கார். அவர் உழைப்புக்கும், குணத்துக்கும் இன்னும் ஒசரத்துக்குப் போவார். ஜனங்களுக்கும் நிறைய செய்வார்” என்றார்.
உண்மையான உழைப்பின்மீது தீராக்காதல் கொண்ட அந்தக் குடும்பத்தின் மீது பிரமிப்பு வளர்கிறது...
இது பிஜேபி இல் மட்டுமே சாத்தியம்..
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment