Tuesday 26 November 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இந்திய அரசியல் சாசனம் விதைக்கப்பட்ட எழுபதாம் ஆண்டு இன்று....
அரசியல் சாசனம்.. நாட்டின் உயிர் நாடி..
நமக்கான சொந்த வீடு.. ஒவ்வொரு அங்குலத்தில் என்னென்ன அம்சங்கள் வேண்டும் என நாம் பார்த்து பார்த்துகட்டிய வீடு.
வாழ்வற்கு அதன் உள்ளே புகும்முன் எவ்வளவு பரவசமான நிலையை உணருவோம். அதைவிட கோடி மடங்கு நிகரானது, நம்மை நாமே ஆள்வதற்கு இந்திய அரசியல் சாசன சட்டத்தை தயாரித்து முடித்த தருணம்.
உலக நாடுகளில் அரசியல் சாசனத்திலேயே நம்முடையதுதான் மிக நீண்டது என்ற பெருமை உடையது. 12 உள்ளடக்கங்கள்..448 பிரிவுகள், 103 மூன்று சட்டத்திருத்தங்கள் என பல சிறப்புகளை கொண்டது.
இறையாண்மை, சமதர்தம், மதச்சார்பு, சுதத்திரம், ஜனநாயகம் போன்ற வர்த்தைகளின் பீடத்தின்மேல் எழுப்பப்பட்டதுதான் அரசியல் சாசனம்.
நம்மிலிருந்து பிரிந்த பாகிஸ்தானும் அரசியல் சாசனம் எழுதியது. ஆனால் பல முறை நொறுங்கிப்போயிற்று. ஜனநாயக ஆட்சிகளுக்கும் ராணுவ ஆட்சிகளுக்கு இடையே இன்னமும் அந்நாடு கட்டிப்புரள்கிறது
ஆனால் நம்முடைய அரசியல் சாசனம் இன்னமும் உயிர்ப்புடனேயே உள்ளது. மக்கள் ஆட்சியை காக்கிறது. காரணம், நம்நாட்டில் அரசியல் சாசனத்தை எழுப்பியவர்களுக்கு இருந்த அறிவுத்திறன், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை. வேற்றுமையில் ஒற்றுமை என்பதில் உள்ள அழுத்தமான பிடிப்பு, தொலைநோக்கு பார்வை. ஆகியவையே.
தமிழகத்தை சேர்ந்த அல்லாடி கிருஷ்ணமாச்சாரி ஐயர், என் கோபாலசாமி ஐயங்கார் உள்ளிட்ட சட்ட வல்லுநர்கள் ஏழு பேர் கொண்ட குழு சாசனத்தை தயாரிக்க ஆரம்பித்தது. குழுவிற்கே தலைமை என்ற பொறுப்பை ஏற்றவர் சட்டமேதை பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கார். குழுவில் இருந்த சில ஒத்துழைப்பு தராமல் பல காரணங்களை சொல்லி தாமதப்படுத்தியபோது அம்பேத்கார் ஓயாமல் உழைத்த உழைப்பு அன்றைய அரசியல் ஆச்சர்யம்
பல நாட்டு அரசியல் சாசனைங்களை அலசி ஆராய்ந்து எவையெல்லாம் நமக்கு அவசியம் என்று சுமார் மூன்றாண்டுகள் பாடுபட்டு ஷரத்துக்களை உருவாக்கியது அரசியல் சாசன குழு.
அப்படிப்பட்ட சாசனம் முழுமை பெற்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட நாள் நவம்பர் 26, 1949. சரியாக இன்றோடு 70 ஆண்டுகள் ஆகின்றன.
அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டிய தலைவன், குடியரசு தலைவன். மத்திய அமைச்சரவை, அதற்கு தலைமை ஏற்கும் பிரதமர், ஆளுநர்கள், மாநில ஆட்சிகள். நீதிம்ன்றங்கள் என அனைத்துக்குமே உயிர் நாடி இந்த அரசியல் சாசனம் தரும் அதிகாரம்தான்.
சாசனம் படைக்கப்பட்டபின் அதில் ஜனநாயத்தின் விருப்பத்தின் பேரில் பல திருத்தங்களை இந்தியா கண்டுள்ளது. பட்டியலினத்தவர்க்கு இட ஒதுக்கீடு மொழிகள் அடிப்படையில் மாநிலங்கள் சீரமைப்பு , கட்சித்தாவல் தடை, வாக்குரிமை வயது 21 லிருந்து 18 ஆக குறைப்பு என நிறைய உண்டு.
அதே நேரத்தில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க இந்திரா காந்தி 1975ல் மிசாவுக்காக அரசியல் சாசன சட்டத்திருத்தத்தில் கைவைத்த கருப்பு அத்தியாயங்களும் உண்டு.
1949ல் அன்றைய அரசிய்ல் சாசன நிர்ணய சபை உறுப்பினர்கள் இருநூறுக்கும் மேற்பட்டோர் ஒவ்வொருவரும், புதிதாய் தயாரிக்கப்பட்ட அரசியல் சாசன புத்தகத்தில் தனித்தனியாய் கையெழுத்திட் டார்கள்.
பிரேம் பெஹாரி நரைன் என்ற ஓவியரின் கைவண் ணத்தில் வரிக்கு வரி உருவாக்கப்பட்ட கைப்பிரதி புத்தகம் ஆது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் என இரு மொழி வடிவங்களில் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள். அவை இன்றும் நாடாளுமன்ற மைய நூலகத்தில் அது மிகுந்த பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளன.சில ஆண்டுகள் கழித்துதான் அரசியல் சாசனமே முழுமையாய் அச்சில் வடிக்கப்பட்டது.
இந்து, முஸ்லீம், கிறிஸ்துவன் உள்ளிட்ட எந்த மதத்தை சேர்ந்தவனாகட்டும். இந்தியன் என்று வந்துவிட்டால் ஒவ்வொருவருக்கும் அரசியல் சாசன சட்டம்தான் முதல் புனித நூல்.
இந்த அரசியல் சாசனம் அமுலுக்கு வந்த 1950 ஜனவரி 26ந்தேதியைத்தான் நாம் இந்தியாவின் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம்.
இந்திய அரசியல் சாசன சட்டம். #HBD_70
நன்றி எழுமலை வெங்கடேசன்

No comments:

Post a Comment