Friday 22 November 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

வசிஷ்டேஸ்வரர் கோவில், தென்குடித்திட்டை..
புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது பூலோகமே நீரில் அமிழ்ந்திருந்த போது திட்டை என்னும் இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தாம். இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளியுள்ளார்.
இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். இவ்வாறு ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை பஞ்சலிங்க ஷேத்திரம் என்று கூறுவர்.
சம்பந்தர் சிவபெருமானை விட அவர் சுயம்பு லிங்கமாக காட்சி தரும் இத்தலம் மேலானது என்று குறிப்பிடுகிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்று சிறப்பையும் பெற்றுள்ளது
சூரியன் இங்கு இறைவனை வழிபட்டிருக்கிறான். இதன் அடையாளமாக சூரிய ஒளி ஆண்டிற்கு இரண்டு முறை மூலவர் லிங்கத் திருமேனியில் விழுகிறது. தட்சினாயண புண்ய காலத்தில் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளிலும், உத்தராயண புண்ய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளிலும் சூரிய கிரணங்கள் மூலவர் மீது விழுகின்றன.
மூலவர் வசிஷ்டேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சதுர ஆவுடையார். மீது மூலவர் நான்கு பட்டைகளுடன் காணப்படுகிறார். ராமரின் குலகுரு வசிஷ்டர், இங்கு தவம் இருந்து பூஜித்ததால் இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
மூலத்திருமேனி சுயம்பு. சதுர ஆவுடையார் மீது உள்ள சிவலிங்கத் திருமேனி சிறியதாக உள்ளது. திருமேனியின் மீது வரி வரியாகக் கோடுகள் சுற்றிலும் உள்ளன. நான்கு பட்டையாக உள்ளது. முன்னால் செப்பினாலான நந்தி பலிபீடம் உள்ளன. பிரம்மா, விஷ்ணு, சுப்பிரமணியர், பைரவர், சூரியன், யமதர்மன், சனீஸ்வரன், தேவேந்திரன், ஆதிசேஷன், வசிஷ்டர், ஜமதக்னி முனிவர் ஆகியோர் இத்தலத்தில் வசிஷ்டேஸ்வரரை வழிபட்டுள்ளனர்.
கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தன விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், இலிங்கோத்பவரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதியும் உள்ளது.
மூலவர் கருவறையின் மேல் விதானத்தில் ஒரு சந்திர காந்தக் கல் பொருத்தப்பட்டிருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி சுமார் 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒருமுறை மூலவர் சிவலிங்கத் திருமேனியில் ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டிருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். இத்தகைய அமைப்பு வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாது.
கோவில் அமைப்பு: ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. அழகிய கருங்கல் திருப்பணியுடன் ஒரு கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியாக சில படிகள் ஏறி உள்ளே சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். உள்ளே நுழைந்தவுடன் காணப்படும் முன்மண்டபத்தில் ஒரு தூணில் வலப்பால் நால்வர் வடிவங்களும் மறுபுறத் தூணில் ரிஷபாரூடர் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது. கொடிமரம் கருங்கல்லால் ஆனது. உயரத்தில் பலிபீடம் நந்தி உள்ளது.
மூலவர் சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடைப்பட்ட நிலையில், அமபாள் சந்நிதிக்கு மேற்குப் பக்கத்தில் தனி விமானத்துடன் கூடிய தெற்கு நோக்கிய குரு பகவானின் தனி சந்நிதி அமைந்துள்ளது.
எல்லா சிவாலயங்களிலும் ஞான வடிவான தட்சிணாமூர்த்தியாக குரு கோயில் கொண்டிருப்பார். ஆனால் தென்குடித் திட்டையில் இவர் ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
சந்நிதிக்கு முன்னால் செப்பாலான நந்தி பலிபீடம் உள்ளன. அம்மன் சந்நிதிக்கு முனபாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அவரவர் ராசிக்குக் கீழே நின்று பிரார்த்தனை செய்தால் வேண்டியது கிட்டும் என்பது ஆன்றோர் நம்பிக்கை. இக்கோவில் விமானங்கள் அனைத்தும் கருங்கற்களால் ஆன அற்புதக் கலையம்சம் பொருந்தியதாய் உள்ளன..
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment