Saturday 9 November 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கம்ப இராமாயணம் - உவமை இல்லா அழகு
ஒரு பொருளுக்கு இன்னொன்றை உவைமையாகச் சொல்ல வேண்டும் என்றால், உவமை பொருளை விடச் சிறப்பாக இருக்க வேண்டும்.
நிலவு போன்ற முகம் என்றால் முகத்தை விட நிலவு அழகு.
தாமரை போன்ற பாதம் என்றால் பாதத்தை விடத் தாமரை அழகு.
கீழான ஒரு பொருளை யாரும் உவைமையாகச் சொல்ல மாட்டார்கள்.
உவமை என்பது உயர்த்திச் சொல்வது.
அப்படிப் பார்த்தால் சீதையின் அழகுக்கு எதை உதாரணமாக சொல்வது?
எல்லாவற்றையும் விட அவளின் அழகு உயர்வாக இருக்கிறது.
எதைச் சொன்னாலும் அவளின் அழகு அதையும் விஞ்சி நிற்கிறது.
கம்பன் திணறுகிறான்.
சீதையைப் பார்த்து விட்டு வந்து இராவணனிடம் சூர்ப்பனகை சொல்கிறாள்.
"இராவணா, அந்த சீதை எப்படி இருக்கிறாள் தெரியுமா...
அவள் நெற்றி வில் போல் இருக்கும்,
அவள் விழி வேல் போல் இருக்கும்,
அவள் பல் முத்துப் போல் இருக்கும்,
அவள் இதழ்கள் பவளம் போல் இருக்கும்,
என்றெல்லாம் சொன்னாலும், சொல்வதற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் அஃது உண்மை இல்லை.
அவளின் அழகுக்கு உவமையே இல்லை.
இந்த நெல் இருக்கிறதே அது புல்லு மாதிரி இருக்கும் அப்படின்னு சொன்னா அது சரியா இருக்குமா? இருக்காதுல்ல? அது போலத் தான் இந்த உவமைகளும்
என்று சொல்கிறாள்.
அப்படிச் சொல்வதன் மூலம், அவளின் அழகு இந்த உவமைகளை விடச் சிறப்பானது என்று சொல்கிறார். புல்லை விட நெல் எவ்வளவு உயர்ந்ததோ அது போல் இந்த உவமைகளை விட அவளின் அழகு உயர்ந்தது என்று சொல்லாமல் சொல்கிறார் கம்பர்.
கவிஞர்கள் உவமை சொல்லும் போது, நிலவு போன்ற முகம் என்பார்கள்.
இன்னும் ஒரு படி மேலே போய் "நிலவு முகம்", " முகத் தாமரை" என்று உவமையையும் உருவகத்தையும் ஒன்றாக்கி ஒரே வார்த்தை போல் சொல்வார்கள். கம்பர் ஒரு படி மேலே போகிறார்.
முதலில் வில் ஒக்கும் நுதல் என்றார் - வில்லைப் போல் நெற்றி
பின் வேல் ஒக்கும் விழி என்றார் - வேலைப் போன்ற விழி
கொஞ்சம் மாற்றி யோசிக்கிறார்
முத்துப் போல் பல் என்று சொல்லவில்லை. பல் போல முத்து இருக்கும்
என்றார். இப்போ எஃது உயர்வு? அவளின் பல்லா அல்லது முத்தா?
இன்னும் கொஞ்சம் மாற்றி யோசிக்கிறார், பவழமே இதழ் என்றார்.
பவளம் போல் இதழ் என்றோ, இதழ் போன்ற பவளம் என்றோ சொல்லவில்லை.
பவளம் தான் இதழ் என்று எப்படி எல்லாமோ சொல்லி பார்க்கிறார்.
நீங்களும் படித்துப் பாருங்களேன்....
பாடல்
வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல்
ஒக்கும் விழி என்றாலும்,
பல் ஒக்கும் முத்து என்றாலும்,
பவளத்தை இதழ் என்றாலும்,
சொல் ஒக்கும்; பொருள் ஒவ்வாதால்;
சொல்லல் ஆம் உவமை உண்டோ?
"நெல் ஒக்கும் புல்" என்றாலும்,
நேர் உரைத்து ஆகவற்றோ!
பொருள்
வில் ஒக்கும் நுதல் என்றாலும், = வில்லைப் போல் நெற்றி என்றாலும்
வேல் ஒக்கும் விழி என்றாலும், = வேலைப் போன்ற விழி என்றாலும்
பல் ஒக்கும் முத்து என்றாலும், = முத்தை போன்ற பல் என்றாலும்
பவளத்தை இதழ் என்றாலும்,= பவளத்தை இதழ் என்றாலும்
சொல் ஒக்கும்; = சொல்வதற்கு வேண்டுமானால் நல்லா இருக்கும்
பொருள் ஒவ்வாதால்; = ஆனால் அர்த்தம் சரியா வராது
சொல்லல் ஆம் உவமை உண்டோ? = அவளின் அழகைச் சொல்ல ஒரு உவமை உண்டா ?
"நெல் ஒக்கும் புல்" என்றாலும், = புல்லு, நெல்லைப் போல இருக்கும் என்றாலும்
நேர் உரைத்து ஆகவற்றோ! = அது ஒரு சரியான விளக்கப், பொருள் ஆகாது
அரு. லெட்சுமணன் கோவை / சென்னை

No comments:

Post a Comment