Tuesday 12 November 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*நம்மைத் தாழ்த்திக் கொள்ள வேண்டுமா?*
*༺༻*
தவறு செய்பவர்கள் அதிகமாகி வருகிற நிலையில் நல்லவர்களாக இருக்கும் சிலர் அவர்களை மாற்றிக் கொண்டு அவர்களும் தவறானவர்களாக மாறிவிடுகின்றனர். நம்மைச் சுற்றிலும் நயவஞ்சகர்களாகவும், சூழ்ச்சிக்காரர்களாகவும் இருக்கும் போது நாம் மட்டும் நல்லவர்களாக எப்படி இருக்க முடியும்? என்று நாமும் அவர்களைப் போல் மாறிக் கொண்டு நம்மைத் தாழ்த்திக் கொள்ள வேண்டுமா?
*༺༻*
கெட்டவைகள் சுலபமாக இருப்பதால் அதில் அதிகமானவர்களும் நல்லவைகள் கஷ்டமாக இருப்பதால் அதில் குறைவானவர்களும் இருக்கின்றனர். எண்ணிக்கையில் அதிகம் என்பதால் அதில் தாமும் சேர்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. கெட்ட சூழ்நிலைகளில் தனிமைப்படுத்திக் காண்பிக்கும் நல்ல நிலைதான் நம்மை அவர்களிடமிருந்து சிறப்பாக்கிக் காட்டுகிறது.
*༺༻*
ஒரு அரக்கர் குடும்பத்தில் பிறந்ததும் வீபிஷணன் மட்டும் எப்படி இவ்வளவு நல்லவனாக இருக்கிறான் என்று அனுமனுக்கு வந்தது சந்தேகம். இந்த சந்தேகத்தை வீபிஷணனிடமே கேட்டான் அனுமன்.
"உண்மைதான். இதற்கு கடவுள் நம்மிடமே ஒரு உதாரணத்தைக் கொடுத்திருக்கிறாரே, நீங்கள் கவனித்ததில்லையா?" என்று கேட்டான் வீபீஷணன்.
*༺༻*
அனுமனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
"நம்முடைய வாய்தான் இதற்கு சரியான உதாரணம். நம் வாய்க்குள் முப்பத்திரண்டு பற்கள் இருக்கின்றன. இவை கூர்மையானவை, கடினமானவை. கடிப்பதும், கிழிப்பதும், அரைப்பதுமான பல கொடுமையான செயல்களைச் செய்கின்றன. இவற்றுக்கு நடுவே இருக்கும் நாக்கு எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கிறது. அந்தப் பற்களுக்கு இடையில் இருந்தாலும் அவைகளால் கடிபடாமலும், பாதிக்கப்படாமலும் தன்னைக் காத்துக் கொள்கிறது. அது மட்டுமில்லை, மனிதனுக்கு வயதாகும் போது இந்த கொடுமைக்கார பற்களெல்லாம் உடையும், விழுந்து விடும். ஆனால் இந்த நாக்கு மட்டும் மனிதனின் இறப்பு வரை கூடவே இருக்கும். நான் இலங்கையில் வாழ்ந்தது இப்படித்தான்." என்றான்.
*༺༻*
அவனுடைய விளக்கம் அனுமனுக்கு சரியானதாகத் தோன்றியது.
இந்த விளக்கம் அனுமனுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும். பொதுவாக எந்த விஷயத்திலும் நல்லது என்பது மிகக் குறைவானதாகவே இருக்கும். ஆனால் எண்ணிக்கையில் குறைவாகயிருப்பதுதான் மதிப்பில் உயர்வானதாக இருக்கிறது. இந்த உண்மையை உணர்ந்து கொண்டவர்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு நல்ல பெயரை வாங்கிக் கொள்கிறார்கள்.
🙏நன்றி: *தேனி.எம்.சுப்பிரமணி.*

No comments:

Post a Comment