Tuesday 30 October 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சிந்திக்க வேண்டும்....
இளைய தலைமுறை.....
டெல்லியில் வாஜிராம் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்து வரும் ஈரோட்டை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் ஸ்ரீமதி கடந்த 7 மாதங்களாக டெல்லியில் உள்ள வாஜிராம் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இந்நிலையில் இன்று அவர் தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அதன்பின் போலீசார் அங்கு இருந்தவர்களிடம் விசாரணையை தொடங்கிய போது கடந்த 15 நாட்களாக மாணவி ஸ்ரீமதி மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் அதனால் அவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் சக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
என்னைப் பொறுத்த வரை இந்த பேரிழப்பு நம் கல்வி முறைக்குப் பெரும் சவால். அவள் தம் பெற்றோர்க்கு பேரிடி. நொறுங்கிப் போயிருக்கும் அவர்தம் இதயத்திற்கு இந்த உலகத்தில் மருந்துண்டா?
இந்த காவல்துறை, உடற்கூறு ஆய்வு, தற்கொலைக்கு முன்பு மாணவி ஸ்ரீமதி எழுதிய கடிதம், இனி வரும் அரசியல்வாதிகளின் உதவி விளம்பரங்கள், வழக்குப்பதிவு இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.
காரண காரியங்களும் நமக்குத் தேவையில்லை.போன உயிர் போனது தான். இனி ஸ்ரீமதி என்ற அழகு தேவதை உலகத்தில் இல்லை. நினைக்கவே மனம் கனக்கிறது. முன் பின் பார்க்காத நமக்கே தாங்க முடியவில்லை என்றால் அந்தப் பெண்ணின் பெற்றோர் திடீரென்று கிட்டத்தட்ட உறைந்து போன நிலையிலிருந்து மாற இன்னும் வெகு காலம் பிடிக்கும் தானே. ஏன் இத்துணை போராட்டம் படிப்பிற்கு?
வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்கள தொடர்ந்து இதுபோல தற்கொலை செய்து கொள்வது தமிழக மக்களின் மனதில் அச்சத்தையும் கவலையையும் உருவாக்கியுள்ளதே. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இது போல டெல்லியில் படித்து வந்த சேலத்தை சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை, AIMS ல் டாக்டருக்குப் படித்த திருப்பூர் மாணவர் தற்கொலை என்று பட்டியல் நீள்கிறது. இதோடு நம் பெற்றோர் மற்றும் அந்த மாணவரின் கனவுகளும் சிதைகின்றது.
இரண்டு நாட்கள் துக்கத்தோடு முடிகின்ற விஷயமா இது ?
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே படிக்காத நம் தமிழக வியாபாரிகள் கூட கடல் கடந்து வாணிகம் செய்தவர்கள். இன்று இத்துணை தொழில் நுட்ப வளர்ச்சி, மற்றும் அனைத்து வசதிகளும் உள்ள இந்த நாளில் நம் குழந்தைகளால் பக்கத்தில் நம் நாட்டிற்குள்ளேயே இருக்கும் டெல்லியில் இருந்து ஏன் படிக்க முடியவில்லை என்பது பல கேள்விகளுக்கு இட மளிக்கிறது. அவற்றின் பின்னனிக் காரணங்களை இங்கே பதிவிட விழைகிறேன்.
1. நாட்டின் கலாச்சார சீரழிவு முதல் காரணம்.
2. பெற்றோரின் பேராசை- குழந்தைகளின் மேல் தங்களின் நினைவேறா கனவுகளை அழுத்துவது.
3.வாழ்வியல் சூழல் மாற்றங்களைக் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்காமல் விடுவது.
4. மாணவ மாணவிகள் தங்களின் மன அழுத்தத்தை விட்டு வெளியே வர முடியா கல்விச் சுமையும், பாடத் திட்டங்களும்.
5. தங்களின் மனத்தை இலகுவாக வைக்கத் தெரியா பாங்கு.
6. சகிப்புத் தன்மையையும்,தைரியத்தையும் , தன்னம்பிக்கையையும் அளிக்காத கல்வி முறை.
7.பாதுகாப்பான வாழ்க்கைச் சூழல் இல்லாத நிலை.
8. இன்னும் அதிகமாக ,பெண் மாணவிகளின் கையறு நிலை.
9.கல்விக் கூடங்களின் பணப் பேராசைகளும், மெத்தனப் போக்கும்.
10. தக்க இடத்தில் கற்ற கல்வியால் அறிவைப் பயன் படுத்த முடியாத தற்போதைய அறிவு சாராக் கல்வி.
இப்படி காரணங்கள் பலப் பல.
நம் பரிதாப உணர்ச்சியோ, விவாதங்களோ போன உயிரைத் திருப்பித் தராது. ஸ்ரீமதியின் பெற்றோர் கண்ணீருக்கும் யாராலும் பதில் தர இயலாது. வேண்டாம் இந்த உயிர்ப் பலி கண்காணா இடத்தில். இதை விட கொடுமை பெற்றோர்க்கு வேறு எதுவும் இல்லை.
ஆக இனி ஒரு விதி செய்வோம். பெற்றோராகிய நாம் குழந்தைகளுக்கு கல்வியைக் கொடுப்பது மட்டும் கடமை அல்ல. வாழ்க்கையின் சவால்களை அவர்களே எதிர் கொள்ள கல்வியோடு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் எப்போதும் கற்றுக் கொடுக்க வேண்டும். படிக்க முடிந்தால் எங்கு வேண்டுமானாலும் சென்று படி. முடியவில்லையா வந்துவிடு என்று படிப்பைத் தவிர, உலகத்தில் வாழ்க்கையை வாழ ஆயிரம் வழிகள் உண்டு என்ற ஊக்கத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக எதற்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல என்ற தெளிவைக் கொடுக்க வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கே அன்றி வாழ்வை மாய்த்துக் கொள்ள அல்ல - மானிடராய்ப் பிறப்பது அரிது : அதை ஒரு முறை வாழ்ந்து பார் என்று அவர்களோடு இருந்து இந்த பரந்த உலகத்தைக் காட்ட வேண்டும். அதுவே பெற்றோரின் தற்போதைய கடமை.
நன்றி லீலா ராம் பதிவு.

No comments:

Post a Comment