Monday 1 April 2024

எல்லோரும் ஞானிதான்

 எல்லோரும் ஞானிதான் . .

ஐந்தாம் வகுப்பு படிக்கும்
குழந்தையிடம் கேட்டால்,
''காவல்காரர் என்ன செய்வார்
காவல்காரர் ஊரை காவல் காப்பார்.
தபால் காரர் என்ன செய்வார்
தபால்காரர் தபால்களைப் பட்டுவாடா செய்வார்.
கடவுள் என்ன செய்வார்
கடவுள் நம் பாவங்களைப் போக்குவார்.''
கடவுளுக்கு இது மட்டும்தான் வேலை. வேறு வேலையெதுவும் கிடையாது. இப்படித்தான் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
ஒரு பக்கம் பாவம் செய்யாதீர்கள்
என்று சொல்கிறார்கள்.
மற்றொரு பக்கம் நாம் பாவம் செய்தால் கடவுள் நம்மை மன்னித்து
பாவங்களைப் போக்கி விடுவார்
என்றும் சொல்வார்கள்.
அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. பெரியோர்கள் சொல்லி விட்டுப் போனதை நாம் கடைபிடிக்காமல் ஒன்றும் இல்லை. கடைபிடிக்கத்தான் செய்கிறோம். ஆனால், எப்படிக் கடைப் பிடிக்கிறோம்.
நமக்கு சாதகமானவைகள், நமக்கு பலன் தரக் கூடியவைகள், நம்மால் முடிந்தவை போன்றவற்றை மட்டுமே அவரவர் நிலையில் நின்று கொண்டு அவரவர்கள் கடைபிடிக்கிறோம். யாருமே முழுமையான முறையில் அவர்கள் சொன்ன எதையும் கடைபிடிப்பதில்லை. பிறகு அவர்களைக் குறை கூறுவதில் நியாயம் என்ன இருக்கிறது.
பக்தியாகட்டும், யோகமாகட்டும், ஞானமாகட்டும் எந்த வழியாக இருந்தாலும், யாருமே முழுமையாக, முழு ஈடுபாட்டோடு கடைபிடித்தால் மட்டுமே துன்பங்களிலிருந்து விடுபட முடியும். ஆனால் அப்படி நடப்பதில்லையே. அதனால்தானே வள்ளல் பெருமான் *''கடை விரித்தேன் கொள்வாரில்லை".* கட்டிக் கொண்டோம்' என்று சொல்லி, மனம் மிக வாடி, தன்னை பஞ்ச பூதங்களோடு இணைத்துக் கொண்டார்.
மனிதனானவன் ஒரே நாளில் தன்னுடைய அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட்டு விட முடியாது. படிப்படியாகத்தான் அது முடியும். அதுவும் ஒவ்வொரு மனிதனும் இதையெல்லாம் உணர்ந்து ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
அப்பொழுதுதான் அது நடக்கும். ஆன்மீகம் என்பது இன்று பல்வேறு முகம் காட்டி மனிதனை பல வழிகளில் இழுத்துச் செல்கிறது. சிலருக்கு அது தொழிலாக இருக்கிறது. சிலருக்கு அது அவர்கள் குற்றங்களை மறைக்கும் போர்வையாக இருக்கிறது. சிலருக்கு பகட்டுகளுக்காகத் தேவைப்படுகிறது.
இவர்கள் பின்னால் போனால், எப்படி முழுமையான மனிதனாக வாழ முடியும். ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தானே முயற்சி செய்து, தன்னை முழுமையாக உணர்ந்தால் மட்டுமே துன்பமில்லாத ஆன்மீக வாழ்வை வாழ முடியும். ஞானிகளும், மகான்களும் அதைத்தான் சொல்லியிருக்கிறார்கள். அதை விடுத்து அவர் அதைத் தருவார், அவர் இதைத் தருவார், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று சொல்லி எவர் பின்னாலோ ஓடிக் கொண்டிருந்தால் எதுவும் நடக்காது.
நம் அறிவை நம்மிடத்தில்தான் தேட வேண்டும். உண்மையை நமக்குள்தான் நாம் உணர வேண்டும். ஞானம் நம் ஒவ்வொருவருக்கு உள்ளும் இருக்கிறது. இதை உணர்ந்தால் எல்லோரும் ஞானிதான். அன்று தோன்றிய ஞானிகள் வழியைக் காட்டி விட்டுப் போய் விட்டார்கள். நாம்தான் அதன் வழி நடக்க முயற்சி செய்ய வேண்டும். நம் முயற்சியின்மையையும், இயலாமையையும் மறைத்து அவர்கள் மேல் பழி சொல்வது தவறாகும்.
ஆத்மாவைப் பற்றிய பூரணமான அறிவின் அனுபவமே நித்தியமான, ஆனந்தமான, துன்பமற்ற வாழ்வாகும். அதை அடைவதே நம் பிறவியின் நோக்கமாகும். சுயநலம்,தகாத வம்பு, பிறரைக் குறை கூறுதல் போன்ற எதிர் மறை சிந்தனைகளை எல்லாம் மனதில் இருந்து விலக்கி, நல்ல எண்ணம், நல்ல செயல்கள், நல்ல வார்த்தைகள் என்று நல்லொழுக்கங்களைக் கட்டைபிடிக்கும் பொழுது, அந்த மெய்யறிவானது இயல்பாகவே நம்மிடம் வெளிப்படும்.
உண்மையைத் தனக்குள் தானே உணர்ந்து தெளியுங்கள்.

No comments:

Post a Comment