Tuesday 17 October 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

வாட்சப் பகிர்வு.
கவியரசர் கண்ணதாசன்
எண்ணற்ற தமிழர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் கவியரசர் கண்ணதாசன்.
அறிமுகம் தேவையில்லாத தமிழர்களில் அவரும் ஒருவர்!
அவரைத் தெரியாது என்று சொல்பவன் தமிழனே அல்ல!
தான் படித்ததையெல்லாம் பாட்டாக்கியவர் அவர்
தன் அனுபவத்தையெல்லாம் எழுத்தாக்கியவர் அவர்!
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோல மயில் என் துணையிருப்பு என்று தன்னைப் பற்றிய உண்மைகளை வெளிப்படையாகச் சொன்னவர் அவர்
என்னைப்போல் வாழாதீர்கள். என் எழுத்துக்களைப்போல் வாழுங்கள் என்று தன்மையாகச் சொல்லிவிட்டுப் போனவர் அவர்!
உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக' என்று சொல்லி உற்சாகப் படுத்திவிட்டுப் போனவர் அவர்!
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு, தென்றலே உனக்கேது சொந்தவீடு' என்று சுதந்திர உணர்வை உண்டாக்கியவர் அவர்!
ஆலயமணியின் ஓசையைக் கேட்க வைத்தவர் அவர்!
வண்ண வண்ணப் பூவில் காயை வைத்தவனைக் காட்டியவர் அவர்!
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத முருகனா நீ' என்று ஆண்டியின் கதைக்குப் பாட்டெழுதி அசரவைத்தவர் அவர்.
ஆறு மனமே ஆறு, அந்த ஆண்டவன் கட்டளை ஆறு என்று ஆண்டவனின் கட்டளையைச் சொன்னவர் அவர்!
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது, வல்லவன் வகுத்ததடா' என்று சொல்லி விட்டுச் சென்றவர் அவர்.
அவனைக் கண்டால் வரச் சொல்லடி, அன்றைக்குத் தந்ததைத் தரச் சொல்லடி' என்று கண்ணனை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியவர் அவர்!
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்' என்று காதலுக்கு பொருள் சொல்லி விட்டுப் போனவர் அவர்!
மண்பார்த்து விளைவதில்லை, மரம் பார்த்துப் படர்வதில்லை என்று கன்னியரைப் பூங்கொடிகளுக்கு உவமையாகச் சொன்னவர் அவர்.
சொல்லெல்லாம் தூய தமிழ்ச் சொல்லாகுமா? சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா என்று மங்கையரின் மேன்மையைச் சொன்னவர் அவர்!
பெண்ணாகப் பிறந்து விட்டால் கண்ணுறக்கம் இரண்டு முறை' என்று பெண்களின் துயரத்தை விளங்க வைத்தவர் அவர்
மனிதன் மாறிவிட்டான், மதத்தில் ஏறிவிட்டான், என்று இன்றைய மனிதனின் நிலைப்பாட்டைச் சொல்லி விட்டுப் போனவர் அவர்!
சின்ன மனிதன், பெரிய மனிதனின் செயலைப் பார்த்து சிரித்துவிட்டுப் போனவர் அவர்!
ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே, உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களேயென்று உழைப்பை மேன்மைப் படுத்தியவர் அவர்!
மாபெரும் சபையினில் நீ நடந்தால் மாலைகள் விழ வேண்டும், ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று பலர் போற்றிப் புகழ வேண்டும் என்று தனிமனித உயர்விற்கும் நேர்மையான வாழ்விற்கும் வழி சொல்லிவிட்டுப்போனவர் அவர்.
வீடுவரை உறவு, வீதிவரை மனைவி' என்று நிலையாமைத் தத்துவத்தைச் சொன்னவர் அவர்.
போனால் போகட்டும் போடா, இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா என்று வாழ்க்கையை வரிகளாக்கியவர் அவர்!
"இது நமக்காக எழுதிய பாடல்" என்று பலரையும் மகிழ்வு கொள்ளும்படி அல்லது உருகிப்போகும்படி எண்ணற்ற அற்புதமான பாடல்களை எழுதியவர் அவர்!
அவருடைய புகழ் வாழ்க! அவரைப்பற்றிய நினைவுகள் வளர்க

No comments:

Post a Comment