Saturday 28 October 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தென்கச்சியார்
****************
வரம் பெற்று வந்தவர்கள்..
தூக்கமும் ஒருவகையான பசிதானே..
வயிற்றுக்காக வாழும் வாழ்க்கையில் தூக்கத்தை கூட மாத்திரையாக விலைகொடுத்துத்தான் வாங்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
பசித்து உண்பவர்களும்..
படுத்தவுடன் உறங்குபவர்களும் “வரம் பெற்று வந்தவர்கள்தான்! என்ன தவம் செய்து இந்த வரம் வாங்கிவந்தார்களோ என்று தான் எனக்குத் தோன்றும்.
பசியைக் கூட தண்ணீர் குடித்துத் தள்ளிப் போடலாம்..
தூக்கத்தை...
வந்தாலும் தள்ளிப்போட முடியாது!
வராவிட்டாலும் கயிறு கட்டி இழுக்கமுடியாது!
பசி உடல் சோர்வைத் தரும்!
தூக்கமின்மை மனச் சோர்வைத் தரும்!
உடல் சோர்வைப் போக்க இயல்பான உணவுமுறைகள் பலவற்றையும் நாமறிவோம்!
மனச்சோர்வைத் தீர்க்கும் தூக்கத்தைத் தரும் இயல்பான வழிமுறைகளை நாம் எந்த அளவுக்கு அறிவோம்...?
தூக்கத்தோடு ஒரு போராட்டம்..
சில நாட்கள் படுத்தவுடன் உறங்கிப் போகிறேன்..
சில நாட்கள் தூக்கம் கண்களை விட்டு வெகுதூரம் போய்விடுகிறது..
நானும் நிம்மதியாகத் தூங்க பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றிப் பார்த்திருக்கிறேன்..
1. தூங்குவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பாகவே கணினியையும், தொலைக்காட்சியையும் காண்பதை நிறுத்திவிடுகிறேன்..
2. அலைபேசியைக் கூட ஒலியவித்துத் தூரத்தில் வைத்துவிடுகிறேன்.
3. குளித்துவிட்டு உறங்கப் போகிறேன்.
4. புத்தகம் படித்துப் பார்க்கிறேன்.
5. மெல்லிசை கேட்டுப் பார்க்கிறேன்.
இப்படி அரும்பாடுபட்டு வரவழைத்த தூக்கத்தை...
எங்கோ செல்லும் தொடர்வண்டியின் ஒலி..
அடுத்த தெருவில் குரைக்கும் நாயின் ஒலி..
வீட்டுக்குள் எங்கோ குழாயிலிருந்து வீழும் நீர்த்துளி..
கடிகாரத்தின் தளர் நடை..
செல்லமாக கொசுக்கள் தரும் முத்தம்..
குளிர்சாதனப் பெட்டியின் மெல்லிய சத்தம்..
என ஏதேதோ வந்து பறித்துச் செல்கின்றன..!!
என்ன கொடுமை இது...
மன அழுத்தம் காரணமாகவோ,
பணிச்சுமை காரணமாகவோ,
இடமாறுபாடு,
மின்சாரம் இல்லாமை என தூக்கத்துடன் போராடும் ஒவ்வொருவருக்கும் காரணங்கள் பலவாக இருக்கலாம்..
இருந்தாலும் போராட்டம் ஒன்றுதானே..
சரி நம் போராட்டம்தான் பெரிதா...
நம்மைவிட தூக்கத்துடன் போராடுவோர் வேறு யாருமே கிடையாதா..?
என்று கூட சில நேரங்களில் தோன்றும்...
இதோ ஒரு சங்ககாலப்பெண் சொல்கிறாள்..
“என்னைவிடவா தூக்கத்துடன் நீங்க போராடறீங்க“ என்று...
பாடல் இதோ...
சிறைபனி உடைத்த சேயரி மழைக்கண்
பொறைஅரு நோயொடு புலம்பு அலைக் கலங்கி
பிறரும் கேட்குநர் உளர்கொல்? - உறைசிறந்து
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே
குறுந்தொகை -86
வெண்கொற்றன்
(ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு கிழத்தி சொல்லியது)
காலமோ கூதிர் காலம்
வாடைக் காற்றோ மிகுதியான மழைத்துளிகளுடன் வீசுகிறது.
பொழுதோ நல்ல இரவு..
யாவரும் நன்கு தூங்கிவிட்டனர்..
என் உயிர்த்தோழிகூட நன்றாக உறங்கிப்போனாள்..
நானோ தூக்கம் வராது தவித்துக்கொண்டிருக்கிறேன்..
இவ்வேளையில் வீட்டின் அருகே கட்டப்பட்ட பசுவைச்
சுற்றிச் சுற்றி வந்து மாட்டு ஈ ஒலி எழுப்பி்கொண்டிருக்கிறது..
அதனால் ஈ ஒலிக்கும்போதெல்லாம் பசு தலையை ஆட்டிக்கொண்டிருக்கிறது..
அவ்வாறு பசு ஒவ்வொரு முறை தலையை அசைக்கும் போதெல்லாம்..
அதன் கழுத்தில் கட்டப்பட்ட மணி ஒலித்துக்கொண்டே இருக்கிறது..
தூக்கம் வராது, தலைவனைப் பிரிந்த துயரோடு இருக்கும் எனக்கு இந்த சின்னச்சின்ன ஒலிகூட மிகப் பெரிய ஒலியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறதே..
இதுவரை என் இமைகளால் தடுத்துவைக்கப்பட கண்ணீர் இமைகளைக் கடந்து துளித்துளியாக வீழ்கிறதே..
என் கண்களெல்லாம் தூக்கமின்மையால் செம்மையான கோடுகள் தோன்றக் காட்சியளிக்கிறதே..
இவ்வளவு துன்பத்திலும் என்னை விட்டுவிட்டு..
கார் பருவத்தில் வருவதாகச் சொல்லிச் சென்ற தலைவனோ இன்னும் வரவில்லையே என்று புலம்கிறாள் இந்தத் தலைவி..
இப்போ சொல்லுங்க நண்பர்களே இந்தத் தலைவியைவிடவா நாம் தூக்கத்துக்காகப் போராடுகிறோம்..
தமிழ்ச்சொல் அறிவோம்..
1. உறை - மழைத்துளி
2. ஊதை - வாடைக் காற்று
3. நுளம்பு - ஈ
4. உலம்புதல் - ஒலித்தல்
5. உளம்பும் - அசையும்
6. சிறைபனி - இமைகளால் தடுக்கப்பட்ட கண்ணீர்
7. நல்கூர் குரல் - பொருள் வறிதான குரல்.

No comments:

Post a Comment