Monday 23 October 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சோம்பேறித்தனம் !
ஒருவரிடம் சோம்பேறித்தனம் இருந்தால் எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்துகொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை, எதிலும் ஆர்வமின்மை, எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, அசதி, வேலை செய்ய சோம்பேறித்தனம் போன்றவை உடன் இருக்கும்.
சோம்பேறித்தனம் உடலுக்கு கெடுதல் தரக்கூடியவை. இது உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும். இங்கும் ஒருவர் சோம்பேறித்தனத்தால் எவ்வாறு துன்பப்படுகிறார் என்பதை பார்ப்போம்.
ஒரு ஊரில் ஒரு சோம்பேறி இருந்தான். அவன் எந்த வேலையும் செய்யாமல் இருந்தான். இதனால் அவனுக்கு உடம்பில் பல வியாதிகள் தொற்றிக் கொண்டது.
வைத்தியரிடம் சென்று தனது நோய்க்கான காரணத்தை கேட்டான். வைத்தியரும் அவனை பரிசோதித்துவிட்டு அதற்கான மருந்தை கொடுத்தார். வைத்தியர் அவனிடம், உனக்கு எப்போதெல்லாம் வியர்க்கிறதோ அப்பொழுது இந்த மருந்தை உட்கொள்ளலாம் என்று கூறினார்.
அந்த சோம்பேறி வீட்டுக்கு வந்து வியர்க்கும் வரை காத்திருந்தான். பல மணி நேரம் ஆகியும் தனக்கு வியர்க்காததால் குழம்பினான். உடனே தனது மனைவி அழைத்து எப்போது வியர்க்கும் எனக் கேட்டான்.
அவன் மனைவி, ஏதாவது வேலை செய்தால் வியர்க்கும் எனக் கூறினாள். அதன் பின் அவன் தோட்ட வேலை செய்வது, நிலத்தில் வேலை செய்வது, கடைக்குப் போவது என பல வேலைகளை செய்ய ஆரம்பித்தான்.
வேலையின் போது ஒவ்வொரு முறை வியர்க்கும்போது வைத்தியர் கொடுத்த மருந்தை மறக்காமல் சாப்பிட்டான். சிறிது நாட்களிலேயே அவனது நோய்கள் குணமடைந்து ஆரோக்கியமாக இருந்தான்.
ஆனால் வைத்தியர் கொடுத்த மருந்து மீதம் இருந்ததால் அதை எடுத்துக் கொண்டு வைத்தியரிடம் சென்றான். மீதி மருந்தை வைத்தியரிடம் கொடுத்து விட்டு, எப்படி பாதி மருந்திலேயே எனக்கு குணமானது? என்று கேட்டான்.
அதற்கு அவர், உன் வியாதி மருந்தால் தீரவில்லை. சுறுசுறுப்பான உன் வேலைகளால் சோம்பேறித்தனம் போய் குணமடைந்து விட்டாய். நான் கொடுத்தது மருந்தேயில்லை. வெறும் துளசி, வெல்லம் கலந்தது தான் என்றார்.
அதன்பின் தான் அவனுக்கு புரிந்தது, இத்தனை நாட்கள் சோம்பேறித்தனமாக இருந்து உடலை கெடுத்துக் கொண்டோம் என்று. வைத்தியருக்கு நன்றி கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டான். போகும் வழியில் இனி சோம்பேறியாக இருந்து உடலை கெடுத்துக் கொள்ளாமல் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும் என மனதில் உறுதி கொண்டான்.
தத்துவம் :
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவது உடல் ஆரோக்கியம். உடல் ஆரோக்கியத்திற்கு தடையாக இருப்பது சோம்பேறித்தனம். சோம்பேறித்தனத்தை தகர்த்தெறிந்தால் நோயின்றி வாழலாம்.

No comments:

Post a Comment