Saturday 25 December 2021

முறையான பயிற்சி பயன் தரும்.

 முறையான பயிற்சி பயன் தரும்.

இன்றைய இளைஞர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் திறமைகளும் இருந்தும் அவர்களால் வெற்றியாளர்களாக வாழ்விலே ஜெயிக்க முடிவதில்லை . இதற்கு என்ன காரணம் என ஆராய்ந்தபோது பலர் போட்டியில் அல்லது ஒரு செயலில் ஈடுபடுவதில் ஆர்வம் அற்றவர்களாக இருப்பதும் அல்லது தோற்றுவிட்டால் என்னாகுமோ என்கிற அச்சத்துடன் இருப்பதும் தான் முக்கியக் காரணமாக இருக்கிறது .
ஒவ்வொருவரின் வெற்றிக்குத் தடையாக இருக்கும் இந்த இரண்டு காரணிகளுக்கும் அடிப்படை என்ன தெரியுமா நண்பர்களே “உங்களின் மீது உங்களுக்கு இருக்கும் குறைந்த நம்பிக்கையே ” ஆகும் .
உலகில் உள்ள அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான நபர்
🏃‍♂️உசைன் போல்ட். உலகின் அதிவேக மனிதராக அறியப்பட்ட அவர் நான்கு ஆண்டுகளாக தொடர்ச்சியாக தங்கம் வென்று சாதனை படைத்து கொண்டிருந்தார் . அவரோடு போட்டியில் ஓடினால் தங்கம் வெல்ல வாய்ப்பே இல்லை என அனைவரும் நம்பி வந்த காலம் .
லண்டனில் உலக சாம்பியன்ஷிப் 2017 தொடங்கியது . வழக்கம்போல 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் தொடங்கியது . மக்கள் ஆரவாரத்துடன் உசேன் போல்ட் தான் எப்படியும் வெல்வார் என்கிற நம்பிக்கையுடன் போட்டியை காண்கிறது . துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் வீரர்கள் அனலாய் பறக்கிறார்கள் . 9 நொடியில் போட்டி முடிகிறது .
போட்டி தொடங்கும்போது இருந்த ஆரவாரம் போட்டி முடியும்போது இல்லாமல் அமைதியாகிப்போனது அரங்கம் . காரணம் நான்கு ஆண்டுகளாக வெற்றியை மட்டுமே பெற்றுவந்த உசேன் போல்ட்டை அமெரிக்காவின் ஜஸ்டின் கால்ட்டின் வென்று வரலாறு படைத்தார் . அடுத்த இடத்தை கோல்மன் பெற உசேன் மூன்றாம் இடம் பிடித்தார் .
நினைத்துப் பாருங்கள் நண்பர்களே தொடர் வெற்றிகளைப் பெற்றுவரும் உசேன் போல்ட்டை நம்மால் வெல்ல முடியாது என ஜஸ்டின் கால்ட்டின் நினைத்திருந்தால் ,அவர் மீது அவருக்கே நம்பிக்கையில்லாமல் போயிருந்தால் உசேன் போல்ட்டை வீழ்த்தி உலக சரித்திரம் படைத்திருக்க முடியுமா ?
யாரையும் வெல்ல என்னால் முடியும் என்று அவரை அவரே நம்பி முறையான பயிற்சிகளை மேற்கொண்டதால்தான் இந்த வெற்றியை அவரால் பெற முடிந்தது .
ஆகவே நீங்களும் வாழ்க்கையில் உங்களுக்குச் சவாலாக இருப்பவர்களைக் கண்டு அஞ்சிடாமல் உங்கள் மீது நம்பிக்கை வைத்து முயன்றால் இமயமும் உங்கள் காலடியில் இருக்கும் , வெற்றிகள் உங்கள் கரங்களில் தவழும்.

No comments:

Post a Comment