Tuesday 7 December 2021

கட்டுமானத்திற்கு கம்பீரம்.

 கட்டுமானத்திற்கு கம்பீரம்.

தென்னிந்தியாவின்.,
புகழ்பெற்ற நகரமான
எங்கள் மதுரையில்,
வைகை ஆற்றில் கட்டப்பட்டுள்ள
“ஆல்பர்ட் விக்டர் பாலம்”
(Albert Victor Bridge)
திறக்கப்பட்ட தினம் இன்று.
( 06 டிசம்பர் 1889 )
06.12.2021
முன்னதாக 08 டிசம்பர் 1888
அன்று Viceroy Earl of Dufferin ல் இப்பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இதற்கு ஆல்பர்ட் விக்டர் கூறிய உத்திரவாதம் நூறு ஆண்டுகளே….! ஆனால் சுமார் 130 ஆண்டுகளைக்கடந்தும் பல கோடிக்கணக்கான வாகனங்கள் பயணித்தும், இன்றும் இப்பாலம் கம்பீரமாக காட்சியளிக்கிறது, சரியாக பராமரிக்காமலேயே……!
மதுரையில் ஆங்கிலேயர்களின் கட்டுமானத் திறமைக்கு எடுத்துக்காட்டான ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் மதுரையின் தென்கரையையும், வடகரையையும் இணைக்கும் பிரதான பாலமாகும்.
.
மதுரையை வடக்கு – தெற்கு என வைகைஆறு இரண்டாக பிரிக்கிறது. ஆற்றை கடந்து வடக்கு – தெற்கு என இருபுறமும் செல்லவேண்டும். அந்தகாலகட்டத்தில் வைகையில் எப்போதுமே தண்ணீர் கரைபுரண்டு ஓடும். தற்போது போல் வறண்டு இருக்காது. சுமைகளை தலையிலும், குழந்தைகளை இடுப்பிலும், தோள்களிலும் வைத்துக்கொண்டு இடுப்பளவு தண்ணீரில் ஆற்றை கடந்து மக்கள் சிரமம் அடைந்தனர். இதையடுத்து வைகையின் குறுக்கே மேம்பாலம் கட்ட, பொறியாளர்களை தேர்வுசெய்யும் பணியில்பிரிட்டிஷ் அரசு ஈடுபட்டது. இதற்காக, இங்கிலாந்து பொறியாளர்களுக்கு இடையே போட்டி ஒன்றை நடத்தியது. இதில், பொறியாளர் Albert Victor தேர்வானார்.
பாலம் கட்டுவதற்காக அவரை, மதுரைக்கு வரவழைத்தது பிரிட்டிஷ் அரசு. சுமார் 2,75,000 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சுமார் 14 வளைவுகளுடன் மேம்பாலம் கட்ட பொறியாளர் ஆல்பர்ட் விக்டர் வரைபடம் தயாரித்தார். Viceroy Earl of Dufferin 1888 டிசம்பர் 08 ல் அடிக்கல் நாட்டினார். மேம்பாலம் கட்டுவதற்கு முன், கோச்சடை பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டு கால்வாய் வழியாக தண்ணீர் வயல்களுக்கு திருப்பிவிடப்பட்டன. 12 மீட்டர் அகலம், 240 மீட்டர் நீளத்தில் 14 வளைவுகளுடன் மேம்பாலத்திற்கான கட்டுமானப்பணி துரிதமாக துவங்கியது. சுட்டசெங்கல், சுண்ணாம்பு, முட்டைவெள்ளைக்கரு, கருப்பட்டி கலவையில் மிகுந்தசிரமத்தின் பேரிலேயே பாலப்பணிகளை கச்சிதமாக முடித்தார் பொறியாளர் ஆல்பர்ட்விக்டர்.
இப்பாலம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாககட்டியதால், இப்பாலத்திற்கு பொறியாளர் "ஆல்பர்ட் விக்டர் பாலம்' (ஏ.வி.பாலம்) என பெயரிடப்பட்டது. அக்காலகட்டத்தில் பாலத்தின்நடுவே "பஸ்ஸ்டாப்' இருந்தது. காரணம், வைகையில் பெருக்கெடுத்து ஓடும்வெள்ளம் மற்றும் மீனாட்சிஅம்மன்கோயில், திருப்பரங்குன்றம், அழகர்கோயில் மலையின்அழகை ஒரே இடத்தில் இருந்துபார்ப்பதற்கு வசதியாகபாலத்தில் பஸ்ஸ்டாப் அமைக்கப்பட்டது. அக்காலத்தில் மக்களின் பிரதான வாகனங்களாக மாட்டுவண்டி, குதிரை வண்டிமட்டுமே இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மட்டுமே கார்களில் வந்தனர். இதுவரையில் பாலத்தில் வாகனம் மோதி விபத்தில் சிக்கியதாக சரித்திரம் இல்லை என்று கூறப்படுகிறது....
🧛நினைவோடு..,✍️மதுரை.,இஸ்மாயில்.

No comments:

Post a Comment