Wednesday 8 December 2021

அறிந்து தெளிந்து நடப்பது.

 அறிந்து தெளிந்து நடப்பது.

ஒரு மனிதனை கடுமையான வேலைதான் அழித்து விடுகிறது என்பதெல்லாம் பொய், அந்த வேலைக் கடுமையை விட. மனக்கவலையின் கடுமைதான் ஆளையே மாற்றியும் சில சமயங்களில் அழித்தும் விடுகின்றன.
ஆமாம் ! மழை வருவதற்கு முன்னே குடையை விரித்துக் கொண்டு நிற்பவர்களைப் போல, வாசல் தாழ்வாக இருக்கிறது. அதனைக் கடக்கும்பொழுது குனிந்து வாருங்கள் என்றால் வீதியிலேயே குனிந்துகொண்டு முதுகு வலியுடன் வருகிறவர்களைப் போல, எதுவும் நேர்வதற்கு முன்பிருந்தே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது போன்று, நம்மைத் துடிக்க வைப்பது போன்று நம்மைத் நடுங்க வைப்பதுதான் இந்தக் கவலை.
ஆமாம்! நடப்பது நடந்தே தீரும் என்ற ஓர் உண்மையை நாம் அறிந்து, உணர்ந்து, தெளிந்து நடந்து கொண்டோமானால் கவலை என்ன செய்யும் ?
வாழ்க்கையைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும், அதை மிகவும் எளிதாகப் புரிந்து கொண்டு இனிதாக வாழ்ந்து விடலாம். அது எப்படி ? அந்த எளிய வழி தான் என்ன ? கவலையைப் பார்த்து சிரித்துவிடுவது தான்.
அதனால்தான் *இடுக்கண் வருங்கால் நகுக* என்று பாடினார் வள்ளுவர்.
*"சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் ஆழம்"* என்பார்கள். அதுபோல சிரிக்க முடிந்தவனுக்கு இந்த வாழ்க்கையே சொர்க்கம் ஆகிவிடுகிறது.
*நம்பிக்கை வேண்டும். நல்ல நம்பிக்கை வேண்டும்.*
ஒவ்வொரு பறவைக்கும் உரிய உணவை இறைவன் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் இறைவன் வந்து தனது கூட்டிலே இரையைப் போடுவார் என்று எந்தப் பறவையும் காத்திருப்பதில்லை, கவலைப்படுவதில்லை.
பறந்து, திரிந்து, இரையைப் பெற்று, உண்டு உறங்கி மகிழ்கின்ற பறவையாக நீங்கள் வாழவேண்டும்.
நல்ல உழைப்பு தேகத்தை உறுதிப்படுத்துகின்றது. அது போலவே துன்பங்களும் மனிதனது மனத்தை வலிமைப்படுத்துகின்றன.
வலைவிரிக்கும் கவலையை விரட்டி அடிப்போமே! மனிதன்' முயன்றால் முடியாதது என்ன உண்டு இந்த உலகத்திலே.

No comments:

Post a Comment