Wednesday 22 December 2021

வெற்றிக்கு மூலதனம்.

 வெற்றிக்கு மூலதனம்.

அதிக நேரம் இருக்காது அதிர்ஷ்டம்.. நீண்ட தூரம் வராது சிபாரிசு.. எல்லா பொழுதும் கிட்டாது உதவி.. எப்போதும் ஜெயிக்கும் தன்னம்பிக்கை.
வெற்றி பெற்ற மனிதர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தால் வெற்றிக்கு முதல் மூலதனமாக இருப்பது தன்னம்பிக்கை ஆகும். தன்னம்பிக்கை உடையவன் எதிலும் எளிதாக வெற்றி அடையமுடியும்.இமாலய சாதனைகளைக் கூட அவர்களால் வெல்லமுடியும்.
சமீபத்தில் ஒரு நாள் காலையில் தினசரிப் பத்திரிக்கை ஒன்றை பார்த்துக்கொண்டு இருந்தேன்.இரண்டு மூன்று பக்கங்களைப் புரட்டியவுடன் ஒரு செய்தி பெரிய அளவில் வெளியிடப்பட்டு இருந்தது.நன்றாகப் படித்து ,பெரிய அளவல் தேவைக்கு அதிகமான சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது செய்தி.அவரது புகைப்படத்தைப் பார்க்கும் போது மிக அழகாக இருந்தது.நிறைய படித்து நல்ல வேளையில் இருந்த இவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.அதற்கான காரணமும் பத்திரிகையில் இல்லை.
அந்தச் செய்தியை பார்த்துவிட்டு மேலும் சில பக்கங்களைப் புரட்டியபோது ஒரு பக்கத்தில் ஒரு விவசாயின் புகைப்படத்தை போட்டு வேளாண் உற்பத்தியில் சாதனை செய்துள்ளார் என்றும் ,அதற்கான அரசின் பணப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.அந்த செய்தியில் ஒரு குறிப்பட்ட ரக நெல் உற்பத்தியில் அரசின் குறியீட்டு அளவை விட கூடுதல் விளைச்சல் செய்து காட்டியுள்ளார் என்றும் கூறப்பட்டிருந்தது.அந்த விவசாயிக்கு எழுதப்படிக்க மட்டும் தான் தெரிந்துள்ளது.அதுவும் தாய் மொழியல் மட்டும் தான் என்றும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
இந்த இரண்டு செய்திகளையும் படித்த போது எனக்கு ஒன்றுதான் தெரியவந்தது.படிப்பு, அழகு, கைநிறைய வருவாய் இருந்தும் அவர் விரும்பிய வாழ்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை இருந்தும் அவர் நிம்மதியாக வாழவில்லை. அப்படி என்றால் அவர் வாழ்க்கையில் எதைக் கற்றுக்கொள்ள வேண்டுமோ அதைக்கற்றுக் கொள்ளவில்லை .அது தான் தன்னம்பிக்கை.
வாழ்க்கையில் பிரச்சனை என எது வந்தாலும் அதை எதிர்க்கத் துணிந்த மனநிலை நம்பிக்கையான மனம். அதை அவர் வளர்த்துக்கொள்ளாததால், ஏதோ ஒரு சின்னப் பிரச்சினையை ஏற்பட்டுள்ளது.அதைக் கூட தாங்க முடியாமல் உயிரை போக்கிக்கொண்டுள்ளார்.
வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு எப்போதும் தன்னம்பிக்கை மிகுந்து காணப்பட வேண்டும். அப்போது தான் எதையும் எதிர் கொள்ளும் மன நிலையை உருவாக்கித் தரும்.
அதே சமயம் அதிகம் படிப்பறிவில்லாத விவசாயிக்கு அரசின் விவசாய அறிவிப்பு தெரியவந்துள்ளது.இந்தப்பரிசைப் பெறவேண்டும் என்ற தன்னம்பிக்கை, நாம் எப்படியும் இதை அடைந்தே தீருவோம் என்ற உறுதி அவருக்கு இருந்துள்ளது. அதனால் அவர் உறுதியான நிலையில் முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.அதற்கு காரணம் அவரது தன்னம்பிக்கை தான் என்று உறுதியாகக் கூறமுடியும்.
சாதனை விவசாயி இது பற்றி தெரிவிக்கும் போது,’நான் இந்த முயற்சியில் இறங்கும் போது பலர் என்னைக் கிண்டலும் கேலியும் செய்தனர். ‘ஏம்பா வீண் வேலை அதிகாரிகள் சொல்கின்ற அளவுக்கு மகசூல் எதுவும் கிடைக்காது.,அவர்கள் பாட்டுக்கு சொல்லிவிட்டுப் போய் விடுவார்கள் என்று கூறினார்கள் .
ஆனால் வேளாண் அதிகாரிகள் எனக்கு நம்பிக்கை தரும் வார்த்தைகளைக் கூறி எவ்வாறு செயல்படவேண்டும் என்றும் ,அவ்வப்போது தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.அவர்கள் கூறிய வழி முறைகள் எனக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது.நாம் எப்போதும் விவசாயம் செய்யப்போகிறோம் அதிகாரிகள் கூறிய முறையில் செயல்பட்டு இந்த முறை வெல்வது என்ற ஒரே குறிக்கோளுடன் நான்கு,ஐந்து மாதங்கள் தீவிரமாக செயல்பட்டதால் அவர்கள் அறிவித்த அளவை விட அதிகமாக விளைச்சல் செய்து காட்டினேன்.அதிகாரிகளே அதைப்பார்த்து வியந்து பாராட்டுத் தெரிவித்தார்கள்..இந்த முயற்சியில் எனக்கு இருந்த ஒரே நம்பிக்கை அது தான் தன்னம்பிக்கை.
எனவே இதில் இருந்து என்ன தெரிகிறது தற்கொலை செய்து கொண்டவர் மிகுந்த படிப்பறிவு மிக்கவராக இருந்தும் தன்னம்பிக்கை இல்லாமல் இருந்ததால் அவர் ஒரு மோசமான முடிவை மேற்கொண்டார்.அதிகம் படிக்காத ஒருவர் எதையும் தன்னம்பிக்கை உணர்வுடன் செயல் பட்டதால் வெற்றி பெற்றார்.எனவே வாழ்க்கையின் திறவு கோளாக இருப்பது மனிதர்களுக்கு தன்னம்பிக்கை ஒன்றுதான், அதில் நம்பிக்கையுடன் செயல்பட்டால் எதையும் வென்று காட்டலாம் இது உறுதி.

No comments:

Post a Comment