Wednesday 22 December 2021

நிதானம் தரும் நிம்மதி.

 நிதானம் தரும் நிம்மதி.

விதையை நட்டவுடனே, அது பலன் தர வேண்டும் என்ற எண்ணம். விளைவு... விளைந்து பலன் தர வேண்டியவை, பலனின்றிப் போய் விடுகின்றன.
நிதானம் ஒருபோதும் கை விடாது, பலவிதமான துன்பங்களில் இருந்தும் நம்மைக் காக்கும். இதில் சந்தேகமே இல்லை. இதை விளக்கும் கதை...
கவுதம முனிவருக்கு சிரகாரி எனும் மகன் இருந்தான். வேதங்களில் கரை கண்டவன்; எந்த ஒரு செயலையும் நிதானமாகத்தான் செய்வான். அவசரம் என்பதே தெரியாது. அதன் காரணமாக, அவனைச் சோம்பேறி என, கேலி பேசினர், பலர்.
ஆனால், சிரகாரியோ, அவர்களின் ஏச்சு பேச்சுகளை லட்சியம் செய்யவில்லை.
ஒரு சமயம், கவுதமர் தம் மனைவி மீது கொண்ட கோபத்தின் காரணமாக, மகனை அழைத்து, 'சிரகாரி, உன் அம்மாவின் நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்கவில்லை. ஆகையால், அவளைக் கொன்று விடு...' என்று உத்தரவிட்டு, வெளியேறி விட்டார்.
'என்ன செய்வதென்று தெரியவில்லையே... அப்பா சொன்னபடி கேட்பதென்றால், அம்மாவைக் கொன்றாக வேண்டும். அம்மாவைக் கொல்லவில்லையென்றால், அப்பா சொல்லை மீறிய பாவம் வரும்.
'அன்னையும் - பிதாவும் முன்னறி தெய்வம் என்பரே... இந்த இரண்டில் எதைச் செய்தாலும் என் நிம்மதி போய்விடுமே...' என்று, தீவிர ஆலோசனையில் இருந்தான்.
அதேசமயம், வெளியே போன கவுதம முனிவர், 'சீ... எவ்வளவு பெரிய தவறைச் செய்து விட்டேன். கோபத்தை நீக்காத நான், எப்படி முனிவனாக ஆவேன்.
'விநாடி நேரத்தில் கோபப்பட்டு, 'அம்மாவைக் கொல்...' என்று, பிள்ளைக்கு உத்தரவு போட்டு விட்டேனே... நான் சொன்னபடி அவன் கொலை செய்திருந்தால் என்ன செய்வது...' என, பதறியடித்து, ஆசிரமம் திரும்பினார்.
அப்பாவை பார்த்ததும், ஓடி வந்து, அவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினான், சிரகாரி. அவனைப் பார்த்த கவுதமர், அவனருகில் உயிருடனிருந்த தன் மனைவியையும் பார்த்தார். எல்லையற்ற மகிழ்ச்சி அவருக்கு.
மகனைப் பலவிதங்களிலும் புகழ்ந்து, நீண்ட நேரம் உச்சி முகர்ந்து, கட்டித்தழுவி, 'நீ நீண்டகாலம் வாழ்வாய்...' என்று வாழ்த்தவும் செய்தார்.
இதன்பிறகு, தாமதமாகச் செய்ய வேண்டிய செயல்களையும், அதன் பலன்களையும் விரிவாகவே சொன்னார் கவுதமர்.
சோம்பேறிகளை ஊக்கப்படுத்த அல்ல. நிதானமும், பொறுமையும், தாமதமும் விளைவிக்கும் நன்மைகள் என்ன என்பதை விளக்குவதற்காகவே, இக் கதையைச் சொல்லி இருக்கிறார் வியாசர்.
அடிப்படை உண்மையை உணர்வோம்; அல்லல்கள் நீங்கி, வாழ்வில் உயர்வோம்.

No comments:

Post a Comment