Monday 13 December 2021

அக்கறையுடன் செய்திடுவோம் .

 அக்கறையுடன் செய்திடுவோம் .

வாய்ப்பு நம்முன் வருகிறதா இல்லையா என்பது உலகில் நிதர்சனமாக இருக்கும் பல சூழ்நிலைகளைச் சார்ந்தது. வாய்ப்பு உங்கள்முன் வந்தால், அதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? அதுதான் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வித்தியாசம். நீங்கள் வெற்றிகரமாக இருக்க விரும்பினால், உங்களுக்கு பேரார்வமும் விடாமுயற்சி செய்ய விருப்பமும் வேண்டும். வாழ்க்கை பற்றி பேரார்வத்துடன் இருக்கும் எவருக்கும் சும்மா இருக்க நேரமிருப்பதில்லை. எப்போதும் செய்வதற்கு ஏதோவொன்று இருக்கிறது.
அது வேலையாகவே இருக்கவேண்டிய அவசியமில்லை. நீங்கள் அக்கறையுடன் எதைச் செய்தாலும், அது வேலை போல தோன்றுவதில்லை. அது சுமையாகத் தெரிவதில்லை. அதை நீங்கள் ரசித்தால், 24 மணி நேரமும் அதைச் செய்ய விருப்பத்துடன் இருப்பீர்கள்.
புத்தகம் வாசிப்பது, பாடுவது, நடனமாடுவது, விளையாடுவது, ஏதோ உருவாக்குவது, புதிதாக ஏதோ ஆராய்ந்தறிவது - இப்படி ஏதாவது செய்தாலும் பரவாயில்லை. ஆனால் எதுவும் செய்யாமல் சும்மா சுற்றித்திரிவது எப்படி?
உங்களுக்குச் செய்வதற்கு எதுவுமில்லாவிட்டால், உங்கள் வாழ்க்கை தேக்கமடைந்து விட்டது என்றே அர்த்தம். அப்படியொரு நிலை உங்களுக்கு வரவே கூடாது என்பதே என் விருப்பம். நதிபோல நீங்கள் ஓடிக்கொண்டு இருந்தால், செய்வதற்கு எப்போதும் ஏதோவொன்று இருக்கிறது.
திரும்பிப் பார்க்கும்முன் வாழ்க்கை முடிந்துவிடும். நூறு வருடம் வாழ்ந்து உங்கள் நேரம் முழுவதையும் அதில் செலவழித்தாலும், மனித புத்திசாலித்தனம் மற்றும் மனித விழிப்புணர்வின் சாத்தியங்கள் முழுவதையும் ஆராய்ந்துணர உங்களுக்கு நேரம் போதாது. இது வாழ்வதற்கான நேரம், ஓய்வெடுப்பதற்கான நேரமல்ல. வெற்றி என்பது ஒரு குறிப்பிட்ட முடிவை அடைவதல்ல, நீங்கள் உண்மையாகவே அக்கறை கொண்டுள்ள ஒன்றிற்காக ஆனந்தத்துடனும் விடாமுயற்சியுடனும் செயலாற்றுவதே வெற்றி.

No comments:

Post a Comment