Friday 3 February 2023

வாழ்க்கையின் மகிழ்ச்சி.

 வாழ்க்கையின் மகிழ்ச்சி.

ஒரு பெரும் செல்வந்தர் தம்மைச் சந்திக்க வந்த வயதான துறவியை அழைத்துப் போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டினார்.
“இவ்வளவும் என்னுடையது சுவாமி” என்றார்.
அதற்கு துறவி, “இல்லையேப்பா, இதே நிலத்தை என்னுடையது என்று ஒருவன் சொன்னானே” என்றார்.
“யார் அவன் எப்போது சொன்னான்” என்று செல்வந்தன் சீறினான்.
“ஐம்பது வருடத்திற்கு முன்” என்றார் துறவி.அதற்கு செல்வந்தன், “அது என் தாத்தா தான்.
ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் இந்த நிலத்தை யாருக்கும் விற்கவே இல்லை” என்றான்.
“இருபது ஆண்டுகளுக்கு முன் வேறொருவர் இது என் நிலம் என்றாரேயப்பா” என்று கேட்டார் துறவி“அவர் என் அப்பாவாக இருக்கும்” என்றான் செல்வந்தன்.
“நிலம் என்னுடையது, என்னுடையது என்று என்னிடம் காட்டிய அந்த இருவரும் இப்போது எங்கே இருக்கிறார்கள்”என்று துறவி கேட்டார்.
அதற்கு அதே வயலுக்கிடையில் தெரிந்த இரு மண்டபங்களைக் காட்டி, “அந்த மண்டபங்களுக்குக் கீழேதான் அவர்களைப் புதைத்து வைத்திருக்கிறோம்” என்றான் அந்தச் செல்வந்தன்.
துறவி சிரித்துக்கொண்டே, “நிலம் இவர்களுக்குச் சொந்தமா. அல்லது இவர்கள் நிலத்திற்குச் சொந்தமா. என் நிலம், என் சொத்து, என் செல்வம் என்றவர்கள் நிலத்திற்குச் சொந்தமாகி விட்டனர்.
அவர்கள் இப்போது இல்லை. ஆனால் நிலம் மட்டும் இருக்கிறது. இது என்னுடையது எனக்கூறும் நீயும், ஒருநாள் இந்த நிலத்திற்குள் புதைக்கப்படுவாய். உன் மகன் வந்து இது என்னுடையது என்பான்” என்று கூறி முடித்தார் துறவி.
செல்வந்தன் தனது அறியாமையை எண்ணித் தலை குனிந்தான்.
*நாம் அனைவரும் இந்த பூமிக்கு சுற்றுலா பயணியாக வருகை புரிந்து இருக்கிறோம் என்ற எண்ணத்துடன் வாழ்ந்தால் நமது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.*
Like
Comment
Share

No comments:

Post a Comment