Tuesday 14 February 2023

திறந்த மனம்.

 திறந்த மனம்.

மனிதனுக்கு எதிராக விரோதமாக, பாதகமாக இருக்கும் சூழ்நிலையை மாற்றும் சக்தி அவனைத் தவிர வேறு எவரிடமும் இல்லை.
விரும்பாத சூழ்நிலை ஒருவருக்கு அமைந்திருக்குமானால், அழுவதாலோ, புலம்புவதாலோ, கவலைப்படுவதாலோ அதை மாற்றி அமைக்க முடியாது. நம்பிக்கை என்னும் மந்திர சக்தி மட்டுமே அதை மாற்றி அமைக்கும்.
“உங்கள் சூழ்நிலை சாதகமாக இல்லாத நிலையிலும், அது சாதகமாக மாறும் என்பதற்கு அறிகுறியோ, அடையாளமோ, ஆதாரமோ இல்லா நிலையிலும், விரைவில் சூழ்நிலை சாதகமாக, ஆதரவாக, உதவியாக, ஒத்துழைப்பாக, வளமாக, வெற்றிகரமாக மாறியே தீரும்” என்று நம்பிக்கையைப் பதிவு செய்யுங்கள்.
நீங்கள் அடைய விரும்புவது, விரும்புகிற காலவரையறைக்குள் கிடைத்தே தீரும். எப்படி என்று தெரியாது. அதைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால் கிடைத்தே தீரும் என்று சொல்லிச் சொல்லி மனதில் பதிய வையுங்கள்.
ஆழ்மனச் சக்தி ஐம்புலன்களால் அறியப்பட முடியாதது. “நம்பிக்கை” என்னும் ஆற்றலையும் ஐம்புலன்களால் அறிய முடியாது. ஆனால் அவற்றைப் பயன்படுத்தி நல்ல விளைவுகளைக் கொண்டு அறிய முடியும்.
மேலோட்டமாகப் பார்த்தால் மூட நம்பிக்கை போன்று தோற்றமளிக்கும். மூட நம்பிக்கை என்று நினைத்து ஏமாற வேண்டாம். திறந்த மனதோடு ஆராய்ந்து தெளிந்த சிந்தனை உடையவர்கள் இவற்றை நிரூபித்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment