Wednesday 15 February 2023

கடமையில் சிதறாமல் கவனம்.

 கடமையில் சிதறாமல் கவனம்.

உண்மையான வாழ்வின் எல்லா அடிப்படை நெறிகளும் எளிய சில நெறிகளே. அவற்றை முழுமையாக கற்று உணர்ந்து தம் வாழ்வில் கலந்து வாழ்வது, நிலையான நிரந்தரமான வெற்றிக்கு அழைத்து செல்லும்.
அந்த அடிப்படை நெறிகளை முழுமையாகப் பற்றி வாழ்வின் எல்லா அம்சங்களிலும் சிக்கலான சூழ்நிலைகளிலும் கை விடாது இருப்பவன் வாழ்க்கையைப் புரிந்தவனாகிறான்.
அதில் முக்கியமானது கடமை. மிக மிக உச்சரிக்கப்படுகிற வார்த்தை, ஆனால் அதன் உட்பொருளை உணர்ந்து செயலாற்றுபவனுக்கு அரிய பொக்கிஷங்களை வழங்க அது காத்து இருக்கின்றது.
கடமை என்பதன் அடிப்படை தன்னுடைய வேலையில் எவ்வளவு ஈடுபட வேண்டுமோ அவ்வளவு ஈடுபடுவதும் அடுத்தவர்களது வேலையில் தேவையின்றி ஈடுபடுவதைத் தவிர்ப்பதும் ஆகும்.
மற்றவர்களது வேலையில் குற்றங் குறைகளைக் கண்டுபிடித்து திருத்திக்கொண்டே இருப்பவன் தன்னுடைய வேலையை நிறைவேற்ற முடியாமல் இருந்து விடுகிறான்.
கடமை என்றால் கைக்கு எட்டிய பணியில் சிதறாத முழு கவனத்தை செலுத்துவதாகும். குவிந்த மன நிலையில் செயல்படுவது ஆகும். திறமையாக, துல்லியமாக, முழுமையாக தேவையானதை செய்வதாகும். ஒவ்வொரு மனிதனது கடமையும் மற்ற மனிதனது கடமையில் இருந்து வேறுபடுகின்றன.
ஒருவன் தன் கடமையை முழுமையாக அறிந்தவனாக இருக்க வேண்டும். மற்றவனது கடமையை அறியும் முன். மற்றவன் தன் கடமையை குறித்து அறிந்ததை விட தான் தன் கடமையை அதிகம் அறிந்தவனாக இருக்க வேண்டும்.
ஒவ்வொருவரது கடமையும் வேறுபடுகின்றன. அவற்றின் அடிப்படை ஒன்று தான். இதை முழுமையாக உணர்ந்து கடமையின் கட்டளைகளை நிறை வேற்ற காத்திருப்பவர்களுக்கு வாழ்க்கை ஏராளமான பொக்கிஷங்களை அளிக்கக் காத்திருக்கிறது.

No comments:

Post a Comment