Saturday 25 May 2019

தேச நலனுக்காக உழைப்பேன்...

தேச நலனுக்காக உழைப்பேன்...
இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக, செக்குலரிசம் என்ற முகமூடியணிந்து கோஷமிடுவதும், ஊழலையும், விலைவாசி உயர்வையும் மையப்படுத்தி பிரச்சாரம் செய்வதும் இந்தத் தேர்தலில் காணாமல் போயிற்று!
நீங்கள் கொடுத்திருக்கும் மிகப்பெரிய ஆதரவு, என்னை இன்னும் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது!
அரசமைக்க வேண்டுமானால் பெரும்பான்மை தேவைப்படலாம்! ஆனால், நாட்டை முன்னேற்ற, அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்! தேர்தல் களத்தில் நடந்தவை, பேசப்பட்டவை அனைத்தும் கடந்தவைகளாக இருக்கட்டும்!
இந்த ஐந்தாண்டுகளில், நாடு சுதந்திரம் பெற்ற 75 வது ஆண்டு கொண்டாட்டமும், மற்றும் தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150 வது ஜெயந்தி கொண்டாட்டமும் வருகின்றன! அவற்றை நாம் சிறப்பாக கொண்டாட வேண்டும்!
1942 முதல் 1947 வரையிலான ஐந்தாண்டுகள், இந்திய சுதந்திர போராட்டத்தில் சிறப்பு வாய்ந்தவை! பொதுமக்கள் வலிய வந்து பங்கெடுத்தார்கள். சிறை சென்றவர், கதர் உடுத்தியவர், இந்திய பொருட்களைத் தவிர வேறெதுவும் வாங்காதவர், படிப்பவர், பாடம் நடத்துபவர் என்று பலவழிகளில் அவர்கள், "இந்திய சுதந்திரம் ஒன்றே குறிக்கோள்" என்ற ஒரே சிந்தனையுடன் செயல்பட்டனர்! நாமும், 2019-2024 காலகட்டத்தில், நாட்டு முன்னேற்றத்தில் நம்மை இணைத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். 1947 இல் இருந்த முப்பது கோடி மக்களால் இயன்றது, இன்று 130 கோடியாக இருக்கும் நம்மால் முடியாதா?
இனி நாட்டில் 'ஏழ்மையிலிருந்து விடுபட முயல்பவர்' 'அவரை விடுவிக்க கைகொடுத்து உதவுபவர்' என்ற இரண்டே இரண்டு சாதிகள் மட்டுமே இருக்கும்! சாதியால் மக்களைப் பிரிக்க முயலும் சக்திகள் இதை உணர வேண்டும்!!
2014 இல், என்னைப் பற்றி தெரியாமல் ஆதரவு அளித்தீர்கள்! இப்போது, 2019 இல், என்னைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும் ஆதரவளித்திருக்கிறீர்கள்! நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் ஏற்றபடி நான் பாடுபடுவேன்!
நான் எனக்காக எதையும் செய்துகொள்ள மாட்டேன்! எனது ஒவ்வொரு கணமும், சரீரமும் தேச நலனுக்காக உழைப்பதற்கே! என்னுடைய ஒவ்வொரு அசைவையும் நன்கு கண்காணியுங்கள். நான் நல்வழியிலிருந்து பிறழ்ந்தால், என்னை துளைத்தெடுங்கள்!
நான் தீய நோக்கோடும், தீய லாபத்திற்காகவும் என்றும் செயல்பட மாட்டேன். என்னுடைய செயல்கள் வேண்டுமானால் கடுமையாக இருக்கலாம், பலன் தராமல் போகலாம். ஆனால், அவை ஒருபோதும் தீய செயல்களாக இருக்காது என்று உத்தரவாதம் அளிக்கிறேன்!
- தேர்தல் வெற்றியையடுத்து, தில்லி, பா.ஜ.க. தலைமையகத்தில், தொண்டர்களிடையே, பிரதமர் உரை!!

No comments:

Post a Comment