Thursday 23 May 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கவியரசனின் பாட்டு சரித்திரம் (a forward from a friend )
பாரதிக்கு பிறகு தமிழில் அதிகம் நேசிக்கப்பட்ட, வாசிக்கப்பட்ட, ரசிக்கப்பட்ட கவிஞன் ஒருவன் உண்டென்றால் அது கண்ணதாசனாக தான் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. 'கவியரசர்' என்று எத்தனை பேர் தன்னைத்தானே கூறிக்கொண்டாலும், உண்மையான கவியரசர் கண்ணதாசன் தான். கண்ணதாசனின் ஒவ்வொரு பாடலும் தனது வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை பின்பற்றி எழுதப்பட்டது என்று கூறுவார்கள். அவற்றில் சிலவற்றை கீழே தொகுத்து கொடுத்துள்ளேன். படித்து ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
ஒரு முறை பாவமன்னிப்பு படத்திற்கு இயக்குனர் பீம்சிங், எம்.எஸ்.வி - ராமமூர்த்தி மற்றும் கண்ணதாசன் ஆகியோர் படத்தின் பாடல்களை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று கண்ணதாசனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பேசிவிட்டு திரும்பி வந்தவரின் முகம் வாடி இருந்தது. எம்.எஸ்.வி அவரிடம் என்ன ஆயிற்று என்று கேட்க, அவர் "ஒன்றும் இல்லை" என்று சொல்லிவிட்டு ஒரு காகிதத்தை எடுத்து கடகடவென்று பாட்டு எழுத ஆரம்பித்து விட்டாராம். அந்த பாடல் பிறகு ஒரு சூப்பர்ஹிட் பாடல் ஆனது வேறு விஷயம். பாடலை எழுதி கொடுத்துவிட்டு சன்மானத்தை வாங்கிக்கொண்டு அவசரம் அவசரமாக வீட்டுக்கு கிளம்பி சென்றாராம். அன்று மாலை ஆர்வம் தாங்காமல் எம்.எஸ்.வி. கண்ணதாசன் வீட்டுக்கு சென்று விசாரித்த போது தான் உண்மை வெளியே வந்ததாம்.
காலையில் தொலைபேசியில் வந்த தகவல் என்னவென்றால், கண்ணதாசனிடம் கடன் கொடுத்து அவரால் அதை திரும்ப கட்ட முடியாத காரணத்தால் அவருடைய வீட்டை ஜப்தி செய்து சீல் வைக்க நீதிமன்றத்திலிருந்து வந்திருந்தார்களாம். மாலைக்குள் பணத்தை கொடுத்து விடுவதாக கூறியதால் அவர்களும் இவருக்காக வீட்டிலேயே காத்திருந்தார்களாம். பாட்டு எழுதிய பணத்தை அவர்களிடம் கொடுத்து மானத்தை காத்து கொண்டாராம் கவிஞர். அவர் எழுதிய பாடல் - "சிலர் அழுவார், சிலர் சிரிப்பார், நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்". அந்த பாடலில் ஒரு இடத்தில், "வந்ததை எண்ணி அழுகின்றேன், வருவதை எண்ணி சிரிக்கின்றேன்" என்று வரும். அதாவது, தன் வீட்டை ஜப்தி செய்ய அமீனா வந்திருப்பதை எண்ணி மனதுக்குள் தான் அழுவதையும், பணத்தை செலுத்தி மீட்கப்போவதை எண்ணி சிரிப்பதையும் இப்படி எழுதியிருக்கிறார்!

No comments:

Post a Comment