Tuesday 16 April 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அன்புக்கினிய வாக்காளப் பெருமக்களே… வணக்கம். வளர்க நலம்!
‘நீங்கள் எப்படி வாக்களிக்க வேண்டும்? யாருக்கு வாக்களிக்க வேண்டும்?’ என்று வழிகாட்டும் தகுதி எனக்கு இருப்பதாக நான் நம்பவில்லை. என் தலைக்குப் பின்னால் எந்த ஒளிவட்டமும் இல்லை என்பதை நன்றாக நான் அறிவேன். சமூகப் பொறுப்பு உணர்வு மிக்க ஒரு சாதாரண மனிதனாக உங்களிடம் மனம் திறக்க விரும்புகிறேன். தேர்தலில் உங்கள் வலிமை மிக்க வாக்குரிமையைப் பயன்படுத்த வாக்குச் சாவடிக்குச் செல்வதற்கு முன்பு, நிதானமாக நின்று கொஞ்சம் சிந்திக்க வேண்டுகிறேன்!
‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா, இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்; கருகத் திருவுளமோ?’ என்று பாரதி அன்று பதறித் துடித்தான். அவன் அஞ்சியபடியே, இன்று நம் கண் முன்னால் ஜனநாயகப் பயிரைக் கள்ள ஆடுகள் மேய்ந்து திரிகின்றன. நம் மூதாதையர் ஓராயிரம் தியாகம் செய்து நமக்குப் பெற்றுத் தந்த ஜனநாயகப் பயிரை, இந்த மலினமான ஆடுகள் முற்றாக மேய்ந்துவிடுவதற்கு முன்பு நாம் விழிப்பு உணர்வு பெற்றாக வேண்டும்.
ஜனநாயக அமைப்பில் நம் வாழ்க்கை விதியை வரையறுக்கும் உரிமை நம்மிடம்தான் உள்ளது. நம் கையில் வழங்கப்பட்ட வாக்குச் சீட்டுதான் நம் வாழ்வை நிர்ணயிக்கும் துருப்புச் சீட்டு, ஒரு கணத்தில் நாம் தவறான முடிவு எடுத்து… மோசமான மனிதர்களுக்கு வாக்கு அளித்தால், அதன் பயனாகப் படை எடுக்கும் தீய விளைவுகளை நாம்தான் ஐந்து ஆண்டுகள் முழுவதும் அனுபவித்தாக வேண்டும். வரங்களோ, சாபங்களோ, வானத்தில் இருந்தபடி ஆண்டவன் அளிப்பது இல்லை. வாக்கு அளிக்கும் முறையின் மூலம் நாம்தான் அவற்றை நமக்கு வழங்கிக்கொள்கிறோம்.
அரசியல் ஒரு விளையாட்டு. அதில் எல்லா விதமான தந்திரங்களும் ஏற்கப்படும். அரசியல் விளையாட்டில் பங்கேற்பவரின் வசதிக்கு ஏற்ப சட்டங்கள் வளைக்கப்படும்’ என்ற ஹிட்லரின் வழித் தோன்றல்களுக்குத்தான் நாம் இங்கே வழிபாடு நடத்துகிறோம். நேர்மையின் நிறம் மாறாமல் நெறி சார்ந்து அரசியல் நடத்த,இத்தனை கோடி மக்களில் 543 உறுப்பினர்களை நம்மால் கண்டெடுக்க முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய அவலம்!
தனி மனித ஒழுக்கமும், தன்னல மறுப்பும், எளிமை தவழும் வாழ்வும், மக்கள் நலனில் முழுமையான நாட்டமும், ஊழலற்ற நேரிய நிர்வாகத் திறனும் நிறைந்த உறுப்பினர்கள் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு கசப்பான உண்மை!
மேலான சமூக லட்சியங்களை மக்களிடம் முன்னெடுத்துச் செல்லும் முனைப்போடு எந்த இயக்கங்கள் இன்று செயலற்றுகின்றன? கோட்டை நாற்காலிக் கனவுகளுடன் பிறந்த கட்சிகள், கொள்கைகளைக் கைவிட்டுவிட்டன. ஒவ்வொரு கட்சியும் ஆட்சி நாற்காலியில் ஆசைவைப்பது மக்களின் ஏழ்மையை அகற்றுவதற்காக அல்ல. அமெரிக்காவில் இரண்டு கட்சிகள். பிரிட்டனில் மூன்று கட்சிகள். நம் இந்திய மண்ணிலோ ஈராயிரம் கட்சிகள். இங்கே மனிதர்களுக்கு மானம் மறைக்கத் துணி இல்லை. ஆனால், பல்வேறு வண்ணங்களில் கட்சிக் கொடிகள் விண்ணளாவப் பறப்பதில் குறைவே இல்லை.
‘கட்சி என்பது தங்களால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின் மூலம் நாட்டு நலனைப் பெருக்குவதற்கு, கூட்டு முயற்சி மேற்கொள்பவர்களின் தொகுப்பு’ என்றார் அறிஞர் எட்மண்ட் பர்க். இந்திய மண்ணில் தேச நலனை நெஞ்சில் நிறுத்தி நடமாடும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். நாட்டு நலனைவிட, ஒரு கட்சியின் நலனும், கட்சியின் நலனைவிட, ஒரு தலைவரின் குடும்ப நலனும் போற்றப்படுவதுதான் நம் ஜனநாயக அமைப்பில் நேர்ந்துவிட்ட மிகப் பெரிய வீழ்ச்சி.
ஜனநாயகத் தேவதையின் மூச்சுக் காற்றுதான் தேர்தல். முறைகேடுகள் முற்றுகையிடாத தேர்தலை இனி நாம் காணக்கூடும் என்ற நம்பிக்கை நசிந்துவிட்டது. பண பலம், அடியாள் பலம், அதிகார பலம் ஆகிய மூன்றும்தான் தேர்தல் வெற்றியைத் தேடித் தரும் என்றால், உண்மையான ஜனநாயகம் எப்படி உயிர் வாழும்? ‘திருமங்கலம் பாணி’ இனி எல்லா இடங்களிலும்,எல்லா கட்சிகளாலும் பின்பற்றப்படும் எனில், நேர்மையும், உண்மையும், சமூகப் பொறுப்பு உணர்வும்கொண்ட நியாயமான மனிதர்கள் தேர்தலில் எப்படி நிற்க முடியும்?
‘திருமங்கலம் பாணி’ 1957-லேயே அரங்கேறி இருந்தால், அண்ணாவும் கலைஞரும், திராவிட இயக்கத் தளபதிகளும் சட்டப் பேரவை வாயிலுக்குள் எப்படி நுழைந்திருக்க முடியும்?
‘ஜனநாயகம், பிரபுக்கள் ஆட்சியைவிட இழிவானது. ஜனநாயக அமைப்பில் எண்ணிக்கையின் முன் திறமை பலியிடப்படுகிறது. தந்திரங்களால்தான் எண்ணிக்கை உருவாக்கப்படுகிறது. பாமர மக்கள் மிக எளிதில் திசை திரும்பக்கூடியவர்கள்; கருத்தளவில் திடசித்தம் இல்லாதவர்கள்’ என்று 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பிளேட்டோ சொன்னதை இன்று நாம் நியாயப்படுத்திக்கொண்டு இருக்கிறோம். இலவசங்களுக்காக ஏங்கும் மனோபாவம் வளர்ந்து இருப்பது எவ்வளவு கொடுமையானது!
இலவசங்கள் மூலம் ஏழ்மையை ஓர் அரசை அகற்ற முயல்வது ஓட்டைப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்புவதற்கு ஒப்பானது. உழைப்பைத் தராமல் பெறும் பொருள் திருட்டுக்குச் சமமானது என்ற வாழ்வியல் தர்மம் தகர்ந்துபோவது தகாது.
சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளாகியும் இன்னும் வறுமையோடு நாம் வாழ்வதற்கு ஒரே காரணம், சரியாகத் திட்டமிடத் தெரியாத ஆட்சியாளர்கள்தான்.
நம் நோய் தீர, திறமையான மருத்துவரையே நாடுவோம். நன்றாகப் பேசத் தெரிந்தவரா, கவர்ச்சியான தோற்றம் உள்ளவரா என்று அப்போது நாம் பார்ப்பது இல்லை. ஆனால், நம் விதி எழுதும் தேர்தல் களத்தில் ஆட்சிக் கலையில் தேர்ந்தவரா என்று ஆராயாமல், ‘அடுக்கு மொழியில் பேசத் தெரிந்தவரா? கண்ணுக்கு அழகாகக் காட்சி தருபவரா?’பரம்பரை குடும்பமா என்று மயங்கி நிற்கிறோமே, அதுதான் நம்முடைய மாபெரும் பிழை.
காமராஜர் கல்வியைப் பெருக்க, ஏழை மாணவர்களுக்கு மதிய உணவை இலவசமாகத் தந்தார். கல்வியை இலவசமாக்​கினார். அரசு மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளித்தார். வேறு எதையும் வாக்குகளுக்காக இலவசமாக அவர் வழங்கியதே இல்லை. வயிற்றுக்குச் சோறிட்டு, அறிவுக்குக் கல்வி தந்த அந்த மனிதனைத் தோற்கடித்து, காதுக்குச் சுகம் அளிக்கும் பேச்சுக் கச்சேரிக் கலைஞர்களுக்கு நம் மாநில தேர்தல்களில் வாக்களித்தோம். அந்தப் பாவத்துக்கான சம்பளம்தான் இன்று ‘திருமங்கலம்’ உருவில் திரும்பி இருக்கிறது.
இந்த இலவசத் திட்டங்களால் யாருக்கு என்ன நன்மை?
பாமர மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி, வாக்குகளைப் பறிக்கும் வஞ்சகத்தின் வெளிப்பாடுதானே இந்த இலவச அறிவிப்புகள்?
நண்பர்களே… இழந்த நாற்காலியை மீண்டும் அடைவதற்கு உங்களுக்கு ஆயிரம் வாக்குறுதிகளை அள்ளிவிடும். மதுப் புட்டிகள் உங்கள் மடியில் தாமாக வந்து விழும். பிரியாணிப் பொட்டலங்கள் வீடு தேடி வரும். 1,000 போய் நோட்டுகள் தேர்தல் கமிஷனையும் தாண்டி உங்கள் கதவிடுக்குகளில் கண் சிமிட்டும். நம்முடைய வாக்குகள் எதன் பொருட்டும், எவர் பொருட்டும் விற்பனைக்கு உரியவை இல்லை என்பதை இந்த மலினமான நாற்காலி மனிதர்களுக்கு இந்தத் தேர்தலில் நாம் உணர்த்த முற்படுவோம்.
இப்போதுதான் மூச்சைத் திணறச் செய்யும் ஊழல் நாற்றம் மத்தியில் குறைந்துள்ளது. இலவசங்களால் எளிதில் ஏமாற்றிவிட முடியாது என்பதை அவர்கள் உணரும் வாய்ப்பை உருவாக்குவோம். குஜராத்தில் மீண்டும் மீண்டும் மோடி, ஆட்சி நாற்காலியில் அமர்ந்தது இலவச அறிவிப்புகளால் அன்று. பீகாரில் நிதிஷ்குமார் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது கிரைண்டர், மிக்ஸி தயவில் இல்லை.
மக்கள் ஆட்சியாளர்களிடம் எதிர்பார்ப்பது பசுமைப் புரட்சி, தொழில் வளர்ச்சி, உயர் கல்விப் பெருக்கம், சுகாதார மேம்பாடு, வேலை வாய்ப்பு!
நாம் யாரிடத்தும், எதற்காகவும் கையேந்தி யாசகம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இலவசங்களை அறிவிப்பவர்​கள் அவர்களுடைய சொந்த சொத்துகளை விற்று நமக்கு எதையும் வழங்குவது இல்லை. அரசுப் பணம் நம் பணம். விரயமாகும் பணம் நம் பணம். வீணடிக்கும் பணம் நம் பணம். நாம்தான் அவர்களுக்கு வாக்குப் பிச்சை அளிக்கிறோம்.
நாம் பிச்சை இடுபவர்களே தவிர, பிச்சைக்காரர்கள் இல்லை என்ற பெருமிதத்துடன் வாக்குச் சாவடிக்குச் செல்வோம்.
விவசாய கடன் முழுவதும் தள்ளுபடி,கல்வி கடன் தள்ளுபடி, அது இலவசம்,இது இலவசம்,வருடத்திற்கு 72 ஆயிரம்,வருடத்திற்கு 100 நாள் வேலை இனி 150 நாள் என வாக்குறுதிகளை அள்ளிவிட்டும்,நாட்டின் பாதுகாப்பு சட்டத்தை கூட நீக்கி,தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பதை கூட தேர்தல் வாக்குறுதியாக பகிரங்கமாக அறிவிக்கும் கட்சியின் உண்மை குணத்தை அறிந்து ,அவர்களுக்கு பாடம் புகுட்ட புறப்படுவோம்.
வெயில் அடித்தால், வியர்வை வழியும். மழை பொழிந்தால், மேனி நனையும் என்று தயங்கி, வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சியில் நாம் தொலைந்து​போனால், நட்டம் நமக்கே.
நம் சமூகத்தைச் சகல தளங்களிலும் பாழ்படுத்திடும் அரசியல் கட்சிகளை இனம் கண்டு அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். சமூகப் பொறுப்பு மிக்கவர்கள் நாடு முழுவதும் ஒன்றபட வேண்டும். இந்த நேரத்தில் வாக்காளர்களாகிய அனைவரும் மலிவு விலையில் வாக்குகளை விற்றுவிடலாகாது என்பதை பாமரமக்களுக்கு எடுத்துரைப்போம்.
இப்படிக்கு,
எவரிடத்தும், எதற்கும், எந்த நிலையிலும் விலைபோக விரும்பாத,இந்த மண்ணை,மக்களை,பண்பாட்டை நேசிக்கும் வாக்காளன்.

No comments:

Post a Comment