Friday 26 April 2019

4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது..

4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது..
இன்றைய பல மதங்கள் தோன்றுவதற்கு முன்பு உலகில் பல நாடுகளில் இந்து மதம் போன்று பல கடவுள்களை வணங்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்து மதம் போன்றே பூஜை முறைகளும் இங்கு நடந்துள்ளன. இப்படி ஒரு கோவில் எகிப்து நாட்டில் இருக்கிறது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவில் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
அந்த கோவிலின் பெயர் கர்னக் கோவில். எகிப்து நாட்டில் உள்ள லக்சர் நகரத்துக்கு அருகே நைல் நதி ஓரமாக இந்த கோவில் அமைந்துள்ளது. பழங்கால கோவில்களில் கம்போடியாவில் உள்ள ஆங்கோர்வாட் கோவில்தான் உலகிலேயே பெரியதாகும்.
இதில் 2-வது பெரிய கோவிலாக கர்னக் கோவில் உள்ளது. இந்த கோவில் மொத்தம் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1.50 கிலோ மீட்டர் நீளம், 0.8 கிலோ மீட்டர் அகலத்தில் மிக பிரமாண்டமாக இருக்கிறது. பண்டைய எகிப்தியர்கள் ஆமுன், முட், கோன்சு ஆகிய தெய்வங்களை வழிபட்டுள்ளனர். இதில் ஆமுன், முட் கணவன்- மனைவி சாமிகள் ஆவர். கோன்சு சந்திர கடவுள் ஆவார்.
இவர்களுக்காக இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது. அதில் ஆமுன், முட், கோன்சு ஆகிய சாமிகளுக்கு தனித்தனி கோவிலாக கட்டி உள்ளனர்.
பிற்காலத்தில் சூரிய கடவுளான ஏடனுக்கு தனிக்கோவில் ஒன்றும் அதே வளாகத்தில் கட்டப்பட்டது. இதனால் ஓரே வளாகத்தில் 4 பிரமாண்ட கோவில்கள் இருக்கின்றன. இதில். ஆமுன் கோவில்தான் மற்ற கோவிலை விட பெரிய கோவிலாக உள்ளது. அந்த கோவில் மட்டுமே 61 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.
இது தவிர 21 சிறு கோவில்களும் அதே வளாகத்தில் உள்ளன.
இடையில் ஏற்பட்ட பூகம்பங்கள், இயற்கை சீற்றங்கள், எதிரி நாடுகள் படையெடுப்பு போன்ற காரணங்களால் கோவிலின் பல பகுதிகள் சேதம் அடைந்து இருந்தாலும், பெரும்பாலான வளாகம் அதே கம்பீரத்துடன் உள்ளது.
தற்போது இந்த கோவிலில் வழிபாடு எதும் இல்லை. திறந்தவெளி அருங்காட்சியகமாக கோவில் மாற்றப்பட்டு உள்ளது. இன்றைக்கு எகிப்து நாட்டை சுற்றி பார்க்கவரும் சுற்றுலா பயணிகளில் முக்கிய சுற்றுலா பட்டியலிலும் கர்னக் கோவில் இடம் பெறுகிறது. எகிப்தில் உள்ள கீசா பிரமீடை அடுத்து அதிக சுற்றுலா பயணிகள் இந்த கோவிலுக்கு தான் வருகின்றனர். கர்னக் கோவிலில் 56 ஆயிரம் சதுர அடி பிரமாண்ட அரங்கம் ஒன்று உள்ளது. உலகில் உள்ள பழங்கால அரங்கங்களில் இதுதான் மிக பெரியதாகும்.
இந்த மண்டபத்தை 134 கல்தூண்களை அமைத்து அதில் நிறுவி உள்ளனர். இந்த தூண்களில் 122 தூண்கள் தலா 10 மீட்டர் உயரம் கொண்டது. மற்ற 12 தூண்கள் மைய மண்டபத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தூண்கள் ஒவ்வொன்றும் 21 மீட்டர் உயரத்தில் உள்ளன. அந்த தூண் 3 மீட்டர் சுற்றளவு கொண்டது. 70 டன் எடை உள்ளது.
இவ்வளவு எடை கொண்ட தூணை எப்படித்தான் பொருத்தினார்களோ? என்பது மிகப்பெரிய ஆச்சரியமான விஷயமாகவே உள்ளது.தூண்களின் மேல் பகுதியில், வேறு தூண்களை அமைத்து ஒன்றோடு ஒன்று பொருத்தி உள்ளனர். இந்த தூண்களை வளைவாக வடிவமைத்து இருக்கிறார்கள். எப்படி இவ்வளவு கச்சிதமான வளைவு தூண்களை செதுக்கினார்கள் என்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
தூண்களின் தாங்கு திறனையும் துல்லியமாக கணக்கிட்டு அமைத்து இருப்பது அந்த காலத்திலேயே எகிப்து கட்டிட கலை வல்லுனர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருந்துள்ளனர் என்பதை காட்டுகிறது. இதே போல் மேலும் 16 அரங்கங்களும் கோவில் வளாகத்தில் உள்ளன. மேலும் இந்த கோவிலில் 97 அடி உயரத்தில் ஓரே கல்லில் ஆன ராட்சத தூண் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த துணின் எடை 323 டன்.
இவ்வளவு பெரிய தூணை 161 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து வெட்டி எடுத்து வந்துள்ளனர். எந்த நவீன தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இவ்வளவு அதிக எடை கொண்ட தூணை எப்படி இங்கு கொண்டுவந்து சேர்த்தார்களோ தெரிய வில்லை. இதே எடை கொண்ட மேலும் 4 தூண்களும் முந்தைய காலத்தில் அங்கு இருந்துள்ளன.
கி.பி.338-ம் ஆண்டில் ரோம் மன்னன் கான்ஸ்டாடின் இந்த பகுதியை கைப்பற்றினான். அவன் இதில் ஒரு தூணை ரோம் நகருக்கு கொண்டுவர தனது படைக்கு உத்தரவிட்டான். எனவே அந்த தூணை பெயர்த்து எடுத்து கொண்டு சென்றனர். இவ்வளவு பெரிய தூணை எடுத்து செல்ல மிகவும் கஷ்டப்பட்டனர். பெரும் சிரமத்துக்கு பிறகு ஆலெக்சாண்டிரியா நகரம் வரையே அந்த தூணை அவர்களால் கொண்டு செல்ல முடிந்தது.
பின்னர் மீண்டும் கடும் முயற்சி செய்து ரோம் நகருக்கு எடுத்து சென்றனர். ஆனால், இதற்கு 26 வருடங்கள் ஆகி இருந்தன. தற்போது கோவில் வளாகத்தில் ஒரு தூண் மட்டுமே உள்ளது. மற்ற 2 தூண்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. கறுப்பு கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்ட 600 சாமி சிலைகள் கோவிலில் உள்ளன. இவை தவிர 4500 சிலைகள் கோவில் வளாகம் முழுவதும் உள்ளன. கோவில் சுவர்களில் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.
10.5 மீட்டர் உயரம் கொண்ட சாமியின் சிலை ஒன்றும் பிரமாண்டமாக இருக்கிறது. கோவில் வளாகத்திலேயே பெரிய ஏரி ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ஏரியை சுற்றி பூந்தோட்டங்கள் இருந்தன. மேலும் கோவில் பூசாரிகள் குடியிருப்புகளும் இந்த ஏரியை சுற்றி அமைக்கப்பட்டு இருந்தன. வளாகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட பிரமாண்ட அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டு உள்ளன.இந்தகோவில் இவ்வளவு பிரமாண்டமாக அமைந்ததற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளது. ஏனென்றால், இந்த கோவில் சில ஆண்டுகளில் கட்டப்பட்டது அல்ல. பல நூற்றாண்டுகள் கொஞ்சம், கொஞ்சமாக தொடர்ந்து கட்டப்பட்டது.
கோவில் அமைந்துள்ள பகுதி முன்பு தேபஸ் என்று அழைக்கப்பட்டது. இது எகிப்தின் தலைநகரமாகவும் இருந்தது. இதை ஆண்டு வந்த 1-ம் செனுஸ்ட்ரட் என்ற மன்னன் கி.மு.1950-ம் ஆண்டு வாக்கில் கோவிலை கட்ட தொடங்கினான். அவனுக்கு பிறகு வந்த 30 மன்னர்கள் கோவிலை தொடர்ந்து விரிவாக்கம் செய்து கட்டினார்கள். 1-ம் துத்மோசிஸ், 1-ம் சேத்தி, 2-ம் ராம்சஸ் ஆகிய மன்னர்கள் கோவில் கட்டுமான பணிகளில் அதிக அக்கறை எடுத்து மேலும் பல கட்டிடங்களை கட்டினார்கள்.
ஒருவர் கட்டிய கட்டிடத்தை மற்றவர் இடித்து விட்டு கட்டிய சம்பவம் அடிக்கடி நடந்தன. ஹேட்சபஸ்ட் என்ற பெண் அரசி கட்டிய பெரும்பாலான கட்டிடங்களை அதற்கு பிறகு வந்த மன்னர் இடித்து தள்ளிவிட்டு புதிய கட்டிடத்தை கட்டினார். இந்த கோவிலில் முக்கிய தெய்வமாக அமுன் இருந்து வந்த நிலையில், அகன்ட்டான் என்ற மன்னன் சூரிய கடவுளான ஏடனுக்கு முக்கியத்துவம் வழங்கி அவருக்கு பிரமாண்ட கோவிலை கட்டினான்.
ஆனால், அவனுக்கு பிறகு வந்த மன்னர் அந்த கோவிலில் பெரும் பகுதியை இடித்து விட்டு மீண்டும் அமுன் கடவுளுக்கே முக்கியத்துவம் கொடுத்தார். கி.மு 360-ம் ஆண்டு வாக்கில் ஆட்சியில் இருந்த எகிப்து மன்னன் 1-ம் நெக்டனவோ காலம் வரை தொடர்ந்து கட்டுமான பணிகள் நடந்து கொண்டே இருந்தன. அதன் பிறகு கிரேக்கத்தை சேர்ந்த தாலமி வம்சத்தினர் அந்த பகுதியை கைப்பற்றி கொண்டனர். அதன் பிறகுதான் கோவில் கட்டுமான பணிகள் நின்றன.
அதாவது கோவில் கட்டுமான பணிகள் 1600 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்தன.
உலகில் வேறு எந்த கட்டிடமும் இவ்வளவு நீண்ட காலமாக கட்டப்பட்டது இல்லை.
கி.பி 323-ம் ஆண்டில் கிறிஸ்தவர்கள் இந்த பகுதியை கைப்பற்றினார்கள். அதற்கு முன்புவரை இங்கு வழிபாடு நடந்து வந்தது. கிறிஸ்தவர்கள் கைப்பற்றிய பிறகு வழிபாடுகளுக்கு தடை விதித்து விட்டனர். அவர்கள் இதே வளாகத்தில் 4 கிறிஸ்தவ கோவிலை கட்டினார்கள். அந்த கோவில்களில் கிறிஸ்தவ வழிபாடுகள் நடந்தன.
இடையில் பல மன்னர்கள் அந்த இடங்களை கைப்பற்றிய போதெல்லாம் கட்டிடத்தின் பல பகுதிகளை இடித்து தள்ளி விட்டனர்.
ஆனாலும் கூட மீதம் இருக்கும் கட்டிடங்களும் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையிலே இருக்கின்றன. கர்னக் கோவில் அந்த பகுதி மக்களின் புனித தலமாகவும் இருந்துள்ளது. கோவிலுக்கு மக்கள் புனித யாத்திரை வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் 27 நாட்கள் தொடர் திருவிழா நடைபெறும். அப்போது நம் ஊர் கோவில்களில் நடப்பது போன்று திருக்கல்யாண நிகழ்ச்சிகளும் நடந்து உள்ளன. திருவிழாவின் போது சாமிக்கு 11 ஆயிரம் ஜாடி உணவுகள், 385 ஜாடி மது ஆகியவற்றை வைத்து வழிபட்டுள்ளனர். ஆடுகளை பலி கொடுக்கும் நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.
கோவிலில் மட்டும் 80 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வந்துள்ளனர். கோவிலுக்கு என்று 7 லட்சம் ஏக்கர் விவசாய நிலம், 4 லட்சத்து 21 ஆயிரம் ஆடு, மாடுகள் இருந்துள்ளன.
நன்றி ராஜப்பா தஞ்சை








No comments:

Post a Comment