Tuesday 30 April 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இப்படியும் ஒரு கலெக்டர்..
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள பூங்காநகரில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 22 நரிக்குறவர்களின் குழந்தைகள் வள்ளியூர் அருகே உள்ள கோட்டையடி உண்டு உறைவிட பள்ளியில் படிக்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் முதன் முறையாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நரிக்குறவ சமுதாயத்தில் இருந்து 10-ம் வகுப்பு பொது தேர்வை 2 மாணவிகள் எழுத இருந்தனர்.
இதனை அறிந்த நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா அவர்கள் இருவரையும் பாராட்டும் விதமாக நரிக்குறவர் காலனிக்கு நேரில் சென்று, தேர்வு எழுத இருந்த மோகன் என்பவருடைய மகள் பார்வதி, கமால் மகள் மாதவி ஆகிய இரு மாணவிகளையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். பின்னர் அவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கினார்.
நரிக்குறவர் சமுதாய காலனி மக்களிடம் சுமார் 2 மணி நேரம் கலெக்டர் ஷில்பா அப்போது உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், உங்கள் சமுதாய குழந்தைகள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்பி படிக்க வையுங்கள். அவர்கள் படித்து என்னைப் போல் உயர் பதவிக்கு வர வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து நரிக்குறவர் காலனியில் உடனடியாக அங்கன்வாடி அமைத்துக் கொடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டார். மேலும் வீடு இல்லாத நரிக்குறவ குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை அவர் வழங்கினார்.
பின்னர் பார்வதி, மாதவி ஆகிய மாணவிகளையும் கலெக்டர் ஷில்பா தனது அரசு காரில் ஏற்றி வலம் வந்து ஊக்கப்படுத்தினார். இதனால் இரு மாணவிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நரிக்குறவ மாணவிகளை கலெக்டர் தனது காரில் ஏற்றி வலம் வந்தது அனைவரையும் அப்பொழுது வியப்பில் ஆழ்த்தியது.
அந்த இரு மாணவிகளில் ஒருவரான மாதவி 198 மதிப்பெண் எடுத்து இன்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்த கலெக்டர் தன் மகளை அரசு பால்வாடியில்தான் சேர்த்துள்ளார்.
குடிநீர் தொட்டிகள் சுத்தம் சரியாக செய்துள்ளார்களா என்று சிறிய படிகள் வழியாக மேலே ஏறி நேரிடையாக பார்வையிடுவார்.
கலெக்டர் என்ற எந்த ஈகோவும் இன்றி,மத்தியதர குடும்ப பெண்கள் போல் உடை உடுத்தி,தன் சட்டத்திற்கு உட்பட்டு தேடி தேடி உதவி செய்யும் குணாதிசயம் கொண்டவர்.
நன்றி ராஜப்பா தஞ்சை


No comments:

Post a Comment