Thursday 22 March 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நம்பிக்கை நாயகன் அனுமன்.....
கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு ஆறுதுல் கூறுவதை யே ஒரு வரமாக வைத்துக் கொண்டிருந்தவர் ஹனுமார். முதன்முதலாக கிஷ்கிந்தா காண்டத்தில் தோன்றும்போதே இக்காரியத்தைச் செய்துக் காட்டினார். அண்ணன் வாலியினால் அடித்துத் துரத்தப்பட்ட சுக்ரீவன், கடைசியில் ரிஷிமுக பர்வதத்தில் வந்து தங்குகிறான். ஒரு சாபத்தின் காரணமாக வாலியினால் அங்கு வர முடியாது. அப்பொழுது அனுமார் 'கவலைப் படாதே! உனக்கு சீக்கிரமே நல்ல காலம் வரப்போகிறது' என்று மனம் நொந்து கிடக்கும் சுக்ரீவனுக்கு ஆறுதல் கூறுகிறார். அப்பொழுது ராமனும் லட்சுமணனும் அங்கு வருகிறார்கள். மனைவியை இழந்த ராமருக்கு சுக்ரீவன் தயவு வேண்டும். அப்பொழுதுதான் சுக்ரீவனுடைய படைபலம் இவருக்குக் கிடைக்கும். சுக்ரீவனுக்கும், ராமனுடைய தயவு வேண்டும். ஏனெனில் சுக்ரீவன், இழந்த அரசையும், மனைவி உமையையும் களவாடிய வாலியைக் கொன்று அவைகளை மீட்டுத் தர ராமன் ஒருவனால்தான் முடியும்.
இருவர் சினேகம் பண்ணிக் கொள்ள வேண்டுமானால் இருவருக்கும் சமமான துக்கம், அல்லது இருவருக்கும் சமமான குறைகள் இருக்க வேண்டும். அதனால்தான் மனைவியையும் அரசையும் இழந்த ராமரும், சுக்ரீவனும் நண்பராகிறார்கள். ஒரு காரிய வெற்றிக்கு முயற்சி மட்டும் போதாது. முயற்சி, தவம் இரண்டும் தேவை. தவம் என்றால் நம் முன்னோர்கள் செய்த புண்ணியம் நாம் செய்த புண்ணியம் இரண்டும் கலந்தது. ராமரும் சுக்ரீவனும் நண்பர்களாக இணைந்ததைக் கம்பன் ''முன்னர் ஈட்டிய தவமும், பின்னர் முயற்சியும் இணைத்தது ஒத்தார்'' என்று வர்ணிக்கிறார். சுக்ரீவனுக்கு ராமரின் நட்பு கிடைத்ததற்கு ஹனுமார் தான் காரணம். அவர்கள் இருவரையும் தன் சொல் வன்மையால் சேர்த்து வைக்கிறார்.
அதனால் அன்றோ கம்பன் சொல்லின் செல்வன் என்று அனுமாரை அழைக்கிறார்.
''நூறு யோசனை தூரம் உள்ளக் கடலை, யார் தாண்டி இலங்கையை அடைவது'' என்கிற பிரச்சினை எழுகிறது. அப்பொழுது ஒன்றும் பேசாமல் இருந்த ஹனுமாரைப் பார்த்து ஜாம்பவான் அவன் பிறப்பை ஞாபகப்படுத்தி ''உமக்குள்ள பலத்தை நீர் அறிய மாட்டீர். நீர் சிறு குழந்தையாக இருந்தபோதே, சிவப்பாக இருந்த உதய சூரியனை நோக்கி பாய்ந்தவர்'' என்று ஞாபகப்படுத்துகிறார். உடனே ஹனுமாருக்கு கடலைத் தன்னால் தாண்ட முடியும் என்ற சுயநம்பிக்கை வருகிறது. உடனேயே வானளாவ உயர்ந்து, கடலைத் தாண்ட தயாராகிறார். நமக்கும், நாம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்போம் என்கிற சுய நம்பிக்கை வந்தால், எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும்.
நன்றி திரு லெட்சுமணன்

No comments:

Post a Comment