Thursday 18 January 2024

அறம் தவம் . .

 அறம் தவம் . .

வினைப் பதிவுகளே
மனிதனின் வாழ்நாளைத் தீர்மானிக்கின்றன.
நமக்கு இரு வகையான வினைப்பதிவுகள் உள்ளன.
அதை தமிழில்
பழவினை,
புகு வினை
என்று கூறுவர். அல்லது இதனை முன்வினை, பின்வினை என்றும் கூறலாம்.
*பழ வினை* - பிறந்தபோதே கொண்டு வருவது. தாய், தந்தையர் மற்றும் முன்னோர்களின் பாவ புண்ணிய வினைப் பதிவுகள்.
*புகு வினை* - பிறந்தப் பின்பு, 3 வயது முதல், நாம் சேர்க்கும் பாவ புண்ணிய வினைப் பதிவுகள்.
வினைப் பதிவுகளை
சமஸ்கிருதத்தில் பின்வருமாறு கூறுவர்.
*சஞ்சித கர்மம்* - பிறக்கும் போதே, கருத்தொடராக கொண்டு வருவது. முன்னோர்கள், தாய் தந்தையரின் வினைப் பதிவுகள்.
*பிராரப்த கர்மம்* - பிறந்த முதல், இன்று வரை நாம் செய்துள்ள வினைப் பதிவுகள்.
*ஆகாம்ய கர்மம்* - இதுவரை நாம் செய்த வினைப் பதிவுகளால், ஆ (ஆன்மா) விற்கு காம்யம்(இச்சை) ஊட்டி, மேலும் செய்யப் போகின்ற வினைப் பதிவுகள்.
ஒரு செடி வளர்கிறது,
வளரும் போதே அதில் இலை, பூ, காய், பழம் பார்க்க முடியுமா என்றால் முடியாது.
ஆனால், அதிலே எல்லாம் அடங்கியிருக்கிறது. அந்தந்தப் பருவம் வரும்போது தான் அதன் இலை, பூ, காய் தெரியவரும். அதே போல நம் உடலிலுள்ள
பழிச்செயல் பதிவுகள் கூட அந்தந்த காலத்திலே அந்தந்த வயதிலே, அந்தந்தத் தொடர்பு வரும்போது தான் அது துன்பமாகவோ,
நன்மையாகவோ தெரியவரும்.
* ~ வேதாத்திரி மகரிஷி*
இத்தகைய வினைப் பதிவுகளைக் கழித்து, மனத்தூய்மை, வினைத் தூய்மை அடைந்த பின்னரே, மனிதன் இறைவனை அடைய முடியும். அதற்கு மனிதன் நீண்ட காலம் வாழ வேண்டும்.
வினைப் பதிவுகளை
எவ்வாறு வெல்வது
நாம் தொடர்ந்து விழிப்புடன் இருந்து, நல்வினைகளை ஆற்றி, நமது தீய வினைகளால் வரும் விளைவுகளைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.
*வினைப்பதிவே ஓர் தேகம் கண்டாய்..*
* ~ பட்டினத்தார்*
இதைத்தான் *திருமூலர்,*
"திளைக்கும் வினைக்கடல்
தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்க
இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அக்
கேடில் முதல்வன்
விளைக்கும் தவம் அறம்
மேற்றுணை யாமே"
அறம்
மற்றும்
தவத்தின் துணையினால்,
நமது வினைக் கடலினைக் கடக்க முடியுமெனக் கூறுகிறார்.
அறம் மற்றும் தவத்தின் துணையால், மனிதன் தனது ஆயுளை நீட்டிக்க முடியும். அந்தப் பிறவியிலேயே
அவன் இறைவனை அடைய முடியும்.

No comments:

Post a Comment