Saturday 27 January 2024

ஆக்கபூர்வமான சிந்தனை . .

 ஆக்கபூர்வமான சிந்தனை . .

பூசணிக்காய்
விதையைப் பாருங்கள்.
மிகச் சிறியது, அது எவ்வளவு பெரிய காயாய்க் காய்க்கிறது, அந்த விதையைப் போன்றதுதான் எண்ணம். அதன் வலிமை
பூசணிக்காய் போன்று பெரியது.
குதிரை வேகத்தை விட
மிக அதிகமான வேகம் எண்ண அலைகளுக்கு உண்டு.
ஒரு நொடியில் பல நூறு கி.மீ. தூரமுள்ள தேசத்திற்குப் போய் சஞ்சரிக்கிற மகாசக்தியுள்ளது. அதன் வேகத்திற்கீடாக எதையும் குறிப்பிட முடியாது. அப்படியொரு வேகம்.
எண்ணங்கள் ஒரு போதும் உறங்குவதேயில்லை. அது ஆழ்மனத்தில் படிந்திருக்கும். நமது தீவிர விருப்பத்தைப் பொருத்து அதன் தாக்கம் நம் மனத்தில் ஏற்படும். உடம்புக்கு ஓய்வு இருக்கிறது. இரவில் தூக்கத்தின் மூலமாக அது கிடைக்கிறது. சில நேரம் பகல் நேரங்களில் கூட குட்டித் தூக்கத்தின் மூலம் ஓய்வெடுக்கிறோம்.
எண்ணங்கள் மட்டும் உறுதியானதாக இருந்தால் அது இருபத்தி நான்கு மணி நேரமும் நம் மனத்தில் விழித்துக்கொண்டே இருக்கும். அதற்கு ஓய்வென்பது இல்லவே இல்லை. நாம் அதைப் பற்றி மேலோட்டமாக நினைக்காமல் இருந்தாலும் உள் மனத்தின் உந்து சக்தியானது நம்மைச் செயலாற்ற வைக்கும்.
எண்ண அலைகளின் சக்தி மிகவும் வலிமையானது. அதனால் தான் எப்போதும் நல்ல எண்ணங்களை மட்டுமே மனத்தில் உலவச் செய்யவேண்டும் எனப் பெரியவர்கள் அறிவுரை சொல்வார்கள். எண்ண அலைகளின் கதிர் வீச்சு ஏவுகணை போல மிகச் சரியான இலக்கை எட்டக் கூடியது. அது மிகச் சரியான உண்மை என்பதை வாழ்க்கையில் பல துறைகளில் முன்னேறியவர்களின் வரலாற்றைப்
படித்துப் பார்த்தால் புரியும்.
தலைவர்களானாலும் சரி, அறிஞர்களானாலும் சரி, மற்ற பிரபலமான பிரமுகரானாலும் சரி, அவர்கள் அந்த உயர்ந்த இடத்தைப் பெறுவதற்கு ஒரு நாளிலோ, ஒரு வருடத்திலோ நினைத்து அடைந்து விட்டதாகக் கூற முடியாது.
அந்த உன்னதமான எண்ண அலைகள் அவர்களின் ஆழ் மனத்தில் வெகு நாள்களாகவே குடியிருந்து தீவிரமாகி வலுப்பெற்று பின்பே சீரிய முயற்சியும், கடும் உழைப்பும் சேர்ந்து அத்தனை பெரிய சிறந்த இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது என்பதே உண்மை.
ஆக்க பூர்வமான எந்தச் சிந்தனையும் எண்ணமாக வலுப்பெற்று முயற்சியானால் கடும் உழைப்பு நிச்சயம் சாதனையை நிகழ்த்தும் என்பதே என் தீர்க்கமான கருத்து.

No comments:

Post a Comment