Tuesday 24 September 2019

பிரதம சேவகன்

***பிரதம சேவகன்.***
.
"விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்"
.
நேற்று மோடி ஒவ்வொரு மொழியிலும் "எல்லாம் சௌக்கியம்" என்று சொன்னபோது பாரதியின் (பாரதமாதாவின் திருப்பள்ளியெழுச்சி) இந்த வரிகள் ஞாபகத்துக்கு வந்தது. உலகமே உற்றுநோக்கும் நிகழ்ச்சி, அதில் இந்தியாவின் பன்முகத்தன்மை, இந்தியர்களின் ஆற்றல், அதன் ஒருமித்த நிலைப்பாடு என்று எல்லாவற்றையும் அறிவித்தது பெருமை மிக்க தருணம் என்பது understatement .
.
இந்தியாவின் பன்முகத்தன்மை என்பது ராவணனின் கோர முகம் அல்ல. அது ஆறுமுகனின் தெய்வாம்சம் பொருந்தியது. அதைக் கொண்டாடுவது மோடி போன்ற தேச பக்தனுக்கு மட்டுமே சாத்தியம்.
.
"இந்திய வல்லரசாகும்" என்பது ஒரு joke என்று இருந்த தருணம் மாறி, வல்லரசுகள் நம்மோடு தோளோடு தோள் நிற்பதைப் பார்க்கும் போது நம் கனவு மெய்ப்படும் நேரம் இதுவோ என்று நம்பாமல் இருக்க முடியவில்லை.
.
இதுவரை அமெரிக்கா சென்ற தலைவர்களெல்லாம் "ஜன்பத்தின் பத்தோடு" பதினொன்றாக ஒரு ஓரமாக நின்றுவிட்டு சம்பிரதாயமாக பேசிவிட்டு வருவதை பார்த்து இவ்வளவுதானா நாம் என்று ஏங்கிய நம் கண்களுக்கு, மோடி அமெரிக்க அதிபரை "வாய்யா ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்" என்று உரிமையாக அழைத்துக் கொண்டு கை கோர்த்துக்கொண்டு சென்றதைப் பார்க்கும் போது இது குஜராத்தா இல்லை ஹுஸ்டனா என்று நினைக்க தோன்றியது. அமெரிக்க அதிபர் "பாதுகாப்பு விதிமுறைகளை" மீறுவது நான் பார்த்தவரையில் இது முதன்முறை.
.
பாரதி சொல்லிய கண்ணன் எனும் சேவகன், தன்னை "பிரதம சேவகன்" என்று அழைத்துக்கொள்ளும், இவர்தானா?
"நண்பனாய், மந்திரியாய், நல்ல சிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய், எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான்" என்று சொன்ன அந்த சேவகன் இவர்தானா?
பாரதியின் சேவகன், தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது, "இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்" என்று சொன்னதைப்போல பாரதத் தாயை இரவு பகல் பாராமல் "தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை; நானோர் தனியாள்" என்று தேசமுன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாய் இருக்கும் "இம்ம்மனிதரை யாம் பெறவே என்னதவஞ் செய்து விட்டோம் !"
.
-ச. சண்முகநாதன்.

No comments:

Post a Comment