Tuesday 25 June 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கல்விக் கடன் தராமல் வங்கிகள் கண்ணாமூச்சி காட்டுகிறதா?
தகுதியான மாணவர்கள் உயர்கல்வி கற்க பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக மத்திய அரசு கல்விக் கடன் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. கல்விக் கடன் பற்றிய விழிப்புஉணர்வு நகர்ப்புறங்களில் ஓரளவுக்கு இருந்தாலும் கிராமப்புறங்களில் அறவே இல்லை.
கிராமப்புறப் பெற்றோர்கள் தங்கள் ஊரிலோ அல்லது ஊருக்கு அருகில் இருக்கும் வங்கிகளையோ கல்விக் கடன் பெற அணுகுகிறார்கள். ஆனால், தற்போது கல்விக் கடன் தருவதில்லை அல்லது நாங்கள் வழங்கவேண்டிய இலக்கு நிறைவடைந்துவிட்டது என்று கூறி, கடன் கேட்டு வந்தவர்களை வங்கி அதிகாரிகள் பலரும் திருப்பி அனுப்பி விடுகிறார்கள். சில வங்கிகளில், கல்விக் கடனுக்கான கால அவகாசம் முடிந்துவிட்டது என்றும், இது எங்கள் வரம்பிற்குள் வராது என்றும் சொல்லி தட்டிக்கழித்து விடுகிறார்கள்.
ஆனால், ஆண்டு முழுவதும் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதுதான் உண்மை. கல்விக் கடனை இந்த அளவுதான் வழங்க வேண்டும் என்கிற நிர்ணயம் எந்த வங்கிக்கும் கிடையாது. மேலும், விவசாயிகள் கல்விக் கடனுக்காக அணுகும்போது, ‘‘நீங்கள் ஏற்கெனவே பயிர்க் கடன், விவசாயக் கடன் மற்றும் நகைக் கடனைக் குறிப்பிட்ட அளவு வாங்கிவிட்டீர்கள். அந்தக் கடன்களை முறையாகத் திரும்பச் செலுத்தவில்லை. எனவே, கல்விக் கடனைத் தரமுடியாது’’ என்று சொல்வது நடைமுறையில் உள்ளது. ஆனால், இப்படியொரு காரணத்தைச் சொல்லி, கல்விக் கடன் தராமல் இருக்கக்கூடாது என இந்திய வங்கிகள் சங்க வழிகாட்டுதல் நெறிகள் கூறுகின்றன.
இந்த நடைமுறைகள் தெரியாததால், பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உயர்கல்விக்கு அனுப்புவதைத் தவிர்ப்பதும் அல்லது இடைநிறுத்தம் செய்யும் கொடுமையும் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
கல்விக் கடனைப் பொறுத்தவரை, அதன் பல நடைமுறைகள் இன்றைய வேகமான வாழ்க்கைக்கு ஒவ்வாததாகவே இருக்கிறது. உதாரணமாக, ஒரு மாணவன் கல்லூரியில் சேர்ந்தபிறகுதான் கல்விக் கடனுக்கே விண்ணப்பிக்க முடியும். கல்லூரிக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் என்று பல ஆயிரம் ரூபாய் பணத்தை முன்கூட்டியே கட்ட பெற்றோர்கள் கஷ்டப்பட்டுத்தான் திரட்ட வேண்டியிருக்கிறது.
கல்லூரியில் இடம் கிடைத்தபின் கல்விக் கடனுக்குத் தேவையான ஆவணங்களைப் பெறுகிறார்கள். பிறகு, கல்விக் கடனுக்காக வங்கியை நோக்கி நடையாய் நடக்கிறார்கள். வங்கிகளும் தெளிவாக எதுவும் கூறாமல் மாதக் கணக்கில் அலையவைத்து, சம்பந்தப்பட்டவர்களே கல்விக் கடன் வேண்டாம் என வெறுத்துப்போகும் அளவுக்குக் கொண்டு சென்றுவிடுகிறார்கள்.
அதற்குள் கல்லூரிக்கு அடுத்த செமஸ்டர் கட்டணம் கட்ட வேண்டியதிருக்கும். அப்போது எதையாவது விற்கிறார்கள் அல்லது கந்துவட்டிக்குக் கடன் வாங்குகிறார்கள் பெற்றோர்கள். இரண்டாம் ஆண்டிலும் கல்விக் கடன் கிடைக்காமல் போகவே, பணம் கட்ட முடியாமல் படிப்பை கைவிடுகிறார்கள் என்பதுதான் இன்றைய நிலை.
சரி, இதையெல்லாம் சமாளித்து, எப்படித்தான் கல்விக் கடன் வாங்குவது?
கல்விக் கடனுக்காக மத்திய அரசு பிரத்தியேகமாகத் தொடங்கியுள்ள வித்யாலட்சுமி (www.vidyalakshmi.co.in) இணையதளம் வாயிலாகக் கல்விக் கடன் பெற விண்ணப்பிப்பது அவசியம். பெரும்பாலான வங்கிகள் இந்த இணையதளம் வாயிலாக மட்டுமே தங்கள் கல்விக் கடன் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அதில் உங்களுக்கு அருகில் உள்ள வங்கியைத் தேர்ந்தெடுத்து, கல்விக் கடன் பெற விண்ணப்பம் செய்யுங்கள்.
எவற்றுக்கெல்லாம் கல்விக் கடன் பெறலாம்?
* கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம்.
* தேர்வுக் கட்டணம் மற்றும் ஆய்வுக்கூடக் கட்டணம்.
* போக்குவரத்துச் செலவு - வெளிநாட்டில் படிக்கச் செல்பவர் என்றால் விமானக் கட்டணம்.
* கல்விக் கடனுக்குரிய காப்பீடு அவசியம் என்றால் அதற்கான சந்தா கட்டணம்.
* கல்லூரிகளில் பெறப்படும் காப்புக் கட்டணம், கட்டட நிதி மற்றும் திருப்பித் தரத்தக்க வைப்புத் தொகை.(இதற்கு ரசீது தேவை)
* புத்தகங்கள், உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வாங்குவதற்கு.
* சம்பந்தப்பட்ட படிப்பிற்கு கம்ப்யூட்டர் தேவை எனில் அதற்கும்.
* படிப்பை முடிப்பதற்கு அவசியமெனில் கல்விச் சுற்றுலா செல்லும் செலவுகள், ஆய்வுக் கட்டுரை மற்றும் புராஜெக்ட் பணிகளுக்கான செலவுகள்.
மேற்கண்ட செலவுகளுக்கான எஸ்டிமேட்டைக் கல்லூரிகளில் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, நான்காண்டுகள் படிப்பு என்றால் நான்காண்டுகளுக்கும், மூன்றாண்டு படிப்பு என்றால் மூன்றாண்டுகளுக்கும் எஸ்டிமேட்டைப் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக அனைத்து ஆண்டுகளுக்கும் ஒரே தவணையில் கடன் ஒப்புதல் பெறவேண்டியது அவசியம்.
உதாரணமாக, எதிர்வரும் கல்வியாண்டில் கல்விக் கடன் பெற விரும்புபவர் கள் 2019-20, 2020-21, 2021–22, 2022–23 என்று கல்வியாண்டு வாரியாக எஸ்டிமேட்டைப் பெற்று கடன் ஒப்புதலைப் பெறத் திட்டமிட வேண்டும்.
இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது தேவைப்படும் சான்றிதழ்கள்...
* கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கும் வங்கியில் மாணவரும் அவரது பெற்றோரும் சேமிப்புக் கணக்கு தொடங்கி, அதற்கான பாஸ் புக் வைத்திருக்க வேண்டும். * பெற்றோர் மற்றும் மாணவர் இருவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம். * பெற்றோரின் வருமானச் சான்று. * கல்லூரியில் பெறப்பட்ட செலவுக்கான எஸ்டிமேட் * சாதிச் சான்றிதழ்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தவுடன் 15 முதல் 30 நாள்களுக்குள் உங்கள் விண்ணப்பம் குறித்த முடிவை வங்கிகள் அறிவிக்க வேண்டும். எனவே, 15 நாள்களுக்குள் நீங்கள் விண்ணப்பித்த வங்கிக்கு நேரில் சென்று அவர்கள் கேட்கும் ஆவணங்களைத் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும். இல்லை யென்றால் 15 நாள்கள் கழித்து விண்ணப்பத்தின் மீதான நடவடிக்கை முடித்து வைக்கப்பட்டது என்று வங்கிகள் அறிவித்துவிடும்.
ஆவணங்களைச் சமர்ப்பித்து அதிகபட்சம் 30 நாள்களுக்குள் உங்களது விண்ணப்பத்தின்மீது நடவடிக்கை எடுத்து கடன் வழங்க வேண்டும் அல்லது சரியான காரணங்களைக் கூறி நிராகரித்திருக்க வேண்டும். தகுந்த காரணமின்றி அல்லது பொருந்தாத காரணங்களைக் கூறி உங்கள் கல்விக் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டாலோ அல்லது மிகக் குறைவான கடன் தொகை வழங்கினாலோ நீங்கள் உங்கள் குறைகளை வங்கியின் மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தலாம்.
முதலில் சம்பந்தப்பட்ட வங்கியின் மண்டல மேலாளருக்கும், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளருக்கும் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் உங்கள் குறையை விரிவான மனுவாக அனுப்ப வேண்டும். மாவட்ட முன்னோடி வங்கி என்பது பெரும்பாலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகங் களிலேயே இயங்கும்.
அங்கும் உங்களுக்குச் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் அனைத்து ஆவணங்களையும் இணைத்து, நீங்கள் எந்த வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்தீர்களோ, அந்த வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைவருக்கு மின்னஞ்சல் மூலமாகவும் கடிதம் வாயிலாகவும் அனுப்பி வையுங்கள்.
அப்போதும் உங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை எனில், இந்திய ரிசர்வ் வங்கிக்கு உங்கள் கோரிக்கையை அனைத்து ஆவணங்களுடன் அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி... இந்திய ரிசர்வ் வங்கி, நுகர்வோர் கல்வி மற்றும் பாதுகாப்புப் பிரிவு, 16, ராஜாஜி சாலை, சென்னை – 600 001.
கல்விக் கடன் என்பது தகுதியுள்ள அனைவரும் பெறத்தக்க உரிமை. நமக்கான இந்த உரிமையைப் போராடிப் பெறுவதில் எந்தத் தவறும் இல்லை!
- என்.குமரன், கல்வியாளர்.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment