Friday 28 June 2019

கவியரசரும்--சின்னப்பதேவரும்.

28-6-2019--சிறப்புக் கட்டுரை
கவியரசரும்--சின்னப்பதேவரும்.
நான் அறிந்தவற்றை உங்களுடன் பகிர்கிறேன்
-
இவர்கள் இருவருக்குமிடையே அபரிமிதமான நட்பு..அதை நட்பு என்று சொல்வதை விட அற்புதமான பந்தம் என்றே சொல்லலாம். கவிஞர் எந்த கடவுள் படங்களையும் வணங்கமாட்டார்--கண்ணனைத் தவிர..ஆனால் எங்காவது வெளியூர் செல்ல நேரிட்டால் தேவர் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் உள்ள முருகன் படத்தை வணங்கி விட்டுத்தான் செல்வார். சின்னப்ப தேவர் அவர்கள் தயாரித்த தெய்வம் படத்திற்கு பாடல் எழுத வந்து இருந்தார் கவிஞர். வழக்கம் போல் காட்சியை விளக்கி விட்டு மதுரை சோமு பாடுகிறார். குன்னக்குடி வைத்தியநாதன் இசை மருதமலை முருகனைப் பற்றி ஒரு நல்ல பாடல் வேண்டும் என்று சொல்லி விட்டு தனது அறைக்குள் சென்றுவிட்டார்.
மருதமலை மாமணியே முருகைய்யா
தேவரின் குலம் காக்கும் வேலைய்யா--என்ற பல்லவியை உரக்க பாடினார் கவிஞர். அதைக் கேட்டு உள்ளே இருந்து வேகமாக வந்து கவிஞரின் கையை பிடித்துக் கொண்டு நெகிழ்ந்து போனார் தேவர்
தேவரின் குலம் காக்கும் வேலய்யா--என்ற வரிகளே அதற்கு காரணம்.
-
கவிஞரின் ஒவ்வொரு பெண்களின் திருமணத்தின் போதும் தேவர் அவர்கள் முன்னின்று நடத்தியுள்ளார். 1972 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடக்கவிருந்த கவிஞரின் மகள் திருமதி ரேவதி ஷண்முகத்தின் திருமணத்திற்கு மண்டபம் கிடைக்கவில்லை. கவிஞருக்கு சொந்தமான ஆழ்வார்பேட்டையில் கவிதா ஹோட்டல் வளாகத்தில் மண்டபதைக் கட்ட முடிவு செய்தார் கவிஞர். அதற்கு தேவர் அவர்கள் பண உதவி செய்தார். நட்பின் காரணமாகவும், நன்றியை காட்டும் விதமாகவும் அந்த மண்டபத்திற்கு தேவரின் பெயரை சூட்டினார். தேவர் திருமணமண்டபம் 1978ஆம் ஆண்டு மார்ச் மாதம் எங்கள் திருமண வரவேற்பும் இங்குதான் நடந்தது.
-
1978 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ந் தேதி கவிஞரின் இன்னொரு மகனின் திருமணம் இனிதாக நடந்து முடிந்தது. ஆனால் தேவர் அவர்கள் உடல்நலக்குறைவால் கலந்து கொள்ளமுடியவில்லை
மாலை வரவேற்பு நிகழ்ச்சி. அன்றையதினம் மதியம் தேவர் இறைவனடி சேர்ந்துவிட்ட செய்தி தெரிவிக்கப்பட்டது. அவரது மறைவு கவிஞருக்கு பெரும் அதிர்ச்சி. கவிஞரின் குடும்பத்தினருக்கு பெரும் இழப்பு. கதறி அழுதபடி புறப்பட்டு சென்றார் கவிஞர். மாலை நடக்கவிருந்த திருமணவரவேற்பும் ரத்து செய்யப்பட்டது. அதிலிருந்து மீண்டு வர சில நாட்கள் ஆகியது. அந்த அளவு அவர்கள் நட்பில் ஒரு பிணைப்பு. இன்று தேவர் அவர்கள் பிறந்த நாளில் நன்றியோடு நினைவு கூர்கிறேன்.
நன்றி
நன்றி மீனா காந்தி


No comments:

Post a Comment