Thursday 20 June 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உலகின் மகிழ்ச்சியான மனிதன்
"உலகிலேயே மகிழ்ச்சியான ஒரு மனிதன் இருந்தான் என்றால் அவன் பிழைப்புக்காக படகை உருவாக்கிகொண்டிருப்பான். படகை கட்டுகையில் தானே உருவாக்கிய சிம்பனியை பாடிக்கொண்டிருப்பான். தன் மகனுக்கு படகை எப்படி கட்டுவது என்பதை கற்றுக் கொடுத்துக்கொண்டிருப்பான். மாலையில் தன் தோட்டத்தில் தான் நட்ட டேலியா மலர்களை பார்த்து மனம் மகிழ்வான். கோபி பாலைவனத்தில் டைனசார் முட்டைகளை தேடிக்கண்டுபிடிக்கவேன்டும் என்பது அவன் கனவாக இருக்கும். மகிழ்ச்சி என்பதை தேடிக்கன்டுபிடிக்கவேண்டிய பொருளாக அவன் கருதமாட்டான். அதை அடையவேண்டிய குறிக்கோளாக கருதமாட்டான். படகை கட்டும் கடினமான தொழிலில், நாளின் 24 மணிநேர நெருக்கடிக்குள் தன் வாழ்க்கையை வாழும் விதத்திலேயே அவன் மகிழ்ச்சியாக இருப்பான்" என்றார் ஆஸ்திரேலிய மனோதத்துவ நிபுணர் பேரன் உல்ஃப்.
எத்தனை வலிமையான வரிகள்?
தான் வாழும் சின்னஞ்சிறு உலகை அழகாக்கிக்கொண்டு வாழ்வதை விட மகிழ்ச்சி உலகில் வேறு என்ன உள்ளது?
பிசினஸ் ஏடு ஒன்றில் ஒரு தொழிலதிபர் மனம் வருந்தி பேட்டி கொடுத்திருந்தார். "அலுவலகத்தில் இருக்கையில் கால்ப் நினைவு வருகிறது. கால்ப் ஆடுகையில் மாலையில் கிளப்பில் தண்ணியடிக்கும் நினைவு வருகிறது. தண்ணி அடிக்கையில் அலுவலக வேலை நினைவு வருகிறது" என
ஆக மூன்று இடங்களிலும் நிம்மதி இல்லை...காரணம் மூன்றையும் செய்கையில் மனம் அங்கே இல்லை.
எதை செய்கிறோமோ அதை லயித்து செய்வதே மகிழ்ச்சி.
படகை கட்டுகையில் அதை அனுபவித்து செய்யவேண்டும். டேலியா மலர்களை ரசிக்கையில் அதை அனுபவித்து ரசிக்கவேன்டும்.
சிலர் நாளைய தினம் என ஒன்று இல்லை என்பது போல இன்றைய தினத்தை அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். சேமிப்பு ஏதும் இருக்காது.
சிலர் எப்போதுமே எதிர்காலத்தை எண்ணி பணத்தை சேமித்து வைத்துக்கொன்டும், சிக்கனமாகவும் இருப்பார்கள். வயதானபின் பணம் இருக்கும். ஆனால் அனுபவிக்க முடியாது.
ஆக இந்த இரண்டு அப்ரோச்சும் தவறு.
சில வகை இன்பங்களை அந்தந்த வயதில் அனுபவித்தால் தான் பலன் இருக்கும்.
சிலவகை இன்பங்களை தள்ளிபோட்டால் எந்த சிக்கலும் இல்லை.
உங்களுக்கு ஐந்து வயதில் குழந்தை இருந்தால் அந்த வயதில் பொம்மை வாங்கிகொடுத்தால் தான் அதன் குழந்தைபருவம் இன்பமாக இருக்கும்.
"பொம்மை வாங்குவது தண்ட செலவு. அதை பிள்ளையின் கல்லூரி செலவுக்கு சேர்த்து வைக்கிறேன்" என வங்கியில் போட்டால் அது எத்தனை கொடுமை?
ஆக அந்தந்த வயதில் அனுபவிக்கவேண்டிய விசயங்களை அனுபவிக்காமல் விட்டால் அதை எந்த காலகட்டத்திலும் ஈடுகட்டவே முடியாது. அந்த இழப்பு நம் வாழ்நாள் முழுக்க நம்மை வருத்தும்.
அதே சமயம் வெளிநாட்டு சுற்றுலா...இதை எந்த வயதிலும் செய்யலாம். உலக சுற்றுபயணம் போவது என்பது உங்கள் கனவாக இருந்தால் அதை 20 வயதில் செய்யவேண்டும் என அவசியம் இல்லை..நன்றாக சம்பாதித்து, ஓய்வு பெற்று கடமைகளை முடித்தபின் போகலாம்.
அந்தந்த வயதில் அனுபவிக்க வேண்டிய விசயங்களை அனுபவித்து,ஒத்திபோட முடிந்ததை ஒத்திப்போட்டு, நாளைய வாழ்க்கைக்கும் சேமித்து, இன்றைய விசயங்களை அனுபவிக்கையில் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் அதை அனுபவிப்பவனே ரசிகன்.
மகிழ்ச்சி நாம் அன்றாடம் செய்யும் விசயங்களில் இருக்கிறது...
காலை காபியை கடனே என குடித்து விட்டு அவசர அவசரமாக ஓடுவதை விட ஒரு பத்து நிமிடம் அதற்கு ஒதுக்கி, நிம்மதியாக அதை ரசித்து குடித்தால் அது நிம்மதி
உணவை லபக், லபக் என முழுங்குவதை விட அதை உண்கையில் அகை ரசித்து மெதுவாக உண்பது ஒரு நிம்மதி.
அன்றாடம் செய்யும் அதே அலுவல வேலை, போரடிக்கும் வேலை என்றாலும் வரும் வாடிக்கையாளரிடம் சிரித்து, புன்னகைத்து மனநிறைவுடன் அவரது பணியை முடித்துகொடுத்து அனுப்புவது நிம்மதி.
மாறாக உப்புமா உண்கையில் பிரியாணியை எண்ணி அழுவதும், அக்கவுன்டன்ட் வேலை பார்க்கையில் மேனேஜர் வேலை கிடைக்கவில்லையே என அழுவதும், வாடிக்கையாளரிள் மேல் எரிந்து விழுவதுமாக இருந்தால் இருக்கும் உப்புமாவும், அக்கவுன்டண்ட் வேலையும் பறிபோவதுதான் மிச்சம்.
இதை செய்தால் மகிழ்ச்சியை எங்கேயும் தேடி அலையமாட்டோம்.
பிள்ளைக்கு படகை கட்ட கற்பிக்கவும் மறந்துவிடவேண்டாம்.
மாலையில் டேலியா மலர்களை ரசிக்கவும் மறக்கவேண்டாம்.
நன்றி நியாண்டர் செல்வன்

No comments:

Post a Comment